19ம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களாகக் கருதப்பட்டவர் ஜோசப் கான்ராட். அவருடைய ‘இருட்டின் இதயம்’ ( Heart of Darkness) மற்றும் Lord Jim ஆகிய நாவல்கள் மிகப் புகழ்ப்பெற்றவை. இதற்கெல்லாம் மேலாக ஆங்கிலம் என்பது போலந்துகாரரான கான்ராட்டின் மூன்றாவது மொழி என்பது குறிப்பிடத் தக்கது
1899ல் வெளிவந்த இருட்டின் இதயம் என்ற குறுநாவலைச் சுற்றி நிறைய விமர்சனங்கள் இருந்த போதிலும் அது தீவிர வாசகர்களால் வாசிக்கப்பட வேண்டிய நாவல் என்பதில் ஐயமில்லை.
லண்டனின் தேம்ஸ் நகரத்திலுள்ள தேம்ஸ் நதியில் ஒரு படகில் அமர்ந்து குறுநாவலின் கதையைத் தொடங்கும் மார்லோவ் என்ற கதாநாயகன் ஆப்ரிக்காவிலுள்ள காங்கோ நாட்டுக்குப் போன கதையை விவரிக்கிறான்.
1899 ஆசியாவில் ஆபிரிக்காவில் இருந்த பல நாடுகளில் ஐரோப்பியர்களின் காலனி ஆட்சி கொடிகட்டிப் பறந்த காலம். காங்கோ பெல்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை ஆகச் சிறிய நாடாக இருந்த பெல்ஜியம் காலனிக் கால அராஜகங்களைப் பொறுத்தவரையில் மற்ற எல்லா ஐரோப்பிய நாடுகளையும்விட முன்னணியில் இருந்தது என்பது வரலாற்றுப் பிரசித்தம்.
பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் காலனிகளில் வசிக்கும் மக்களுக்குக் கல்வியும் சுகாதாரத்தையும் நல்லரசையும் தந்து அவர்களை முன்னேற்றத்தான் நாடுகளைப் பிடித்தோம் என்று ஒப்புக்காகவாவது சொல்லி வைத்தார்கள். ஆனால் பெல்ஜியக்காரர்கள் தங்கள் பிடியில் இருந்த காலனி நாடுகளை வெளிப்படையாகவே முற்றும் சுரண்டினார்கள். அங்கு வசித்து வந்த மக்களை மிருகங்களுக்கும் கீழாகவே நடத்தினார்கள்.
இருளின் இதயம் குறுநாவலின் தொடக்கம் உலக நாகரிகத்தின் (அந்நாளைய) உச்சம் என்று கருதப்பட்ட லண்டன் நகரில் அமைந்திருக்கிறது. மிகத் தெளிவாகவே நாகரிகத்தின் முன்னோடிகளாகத் தங்களைத் தாங்களே கருதிக் கொண்ட ஐரோப்பியர்களின் பேச்சுக்கும் காலனிகளில் அவர்களுடைய செயலுக்கும் இருந்த வேறுபாட்டின்மீது கான்ராட் பின்னர் வைக்கப் போகும் விமர்சனத்திற்கு வாசகர்களைத் தயார் செய்கிறது.
தந்தத்தை ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனத்தால் காங்கோ ஆற்றில் தரைதட்டிப் போன சரக்குப் படகை மீட்க மார்லோவ் காங்கோவுக்கு அனுப்பப்படுகிறான். உலகத்தின் இருண்ட பகுதி என்று கருதப்படும் ஒரு கண்டத்துக்குக் போவது மார்லோவ்வுக்கு உவப்பாய் இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே உலக வரைபடங்களில் பெயரில்லாத பகுதிகள் தன்னை ஈர்த்ததாக அவன் சொல்கிறான். பெரிய பாம்புபோல் கறுப்பாய் உடல் சுருண்டு கடலில் கலக்கும் காங்கோ நதியைப் பசியுடன் இருக்கும் பறவை எப்படிப் பார்க்குமோ அப்படி அவனும் பார்த்ததாக மார்லோவ் சொல்கிறான்.
காங்கோ சென்று சேர்ந்த பிறகு படகை மீட்பதற்காக நதியின் வழியாக மார்லோவ் காங்கோ காடுகளின் இருண்ட உள்பகுதிக்குப் போக வேண்டியுள்ளது. அப்படிப் போகும் வேளையில் அவன் நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் இன்னும் உள்ளே போனால் அவன் காணக் கூடிய குர்ட்ஸ் என்ற கம்பெனிக் கொள்முதல் மானேஜரைப் பற்றி அறிந்து கொள்கிறான். அவனிடம் பேசுபவர்கள் அனைவருமே குர்ட்ஸைக் கொண்டாடுகிறார்கள். தந்தங்களைக் கொள்முதல் செய்வதில் அவன் முதல் ஆளாக இருக்கிறான். குர்ட்ஸின் பேச்சாற்றல், கவிதை ஆற்றல், ஓவியத் திறமை எல்லோராலும் பாராட்டப்படுகிறது. ஐரோப்பியக் கலாச்சாரத்தின் உச்சமாகக் குறுநாவலின் முதல் பகுதியில் குர்ட்ஸ் சித்தரிக்கப்படுகிறான். ஐரோப்பிய அரசியலில் அவனுக்கு மிக முக்கியமான எதிர்காலம் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.
ஆனால் இருண்ட கண்டத்தின் இதயத்துக்குள் போகப் போக குர்ட்ஸைப் பற்றிய எதிர்மறையான தகவல்கள் மார்லோவுக்குத் தெரிய வருகின்றன. கடைசியில் குர்ட்ஸை அவன் சந்திக்கும்போது தான் அடிமைகளாய் ஆக்கிக் கொண்ட ஆப்பிரிக்கர்களிடையே குர்ட்ஸ் தன்னைத் தானே ஒரு கடவுளாய் நிறுவிக் கொண்டதைக் காண்கிறான். குர்ட்ஸின் குடியிருப்பைச் சுற்றி நட்டு வைக்கப்பட்டிருக்கும் கம்பங்களில் சிரச்சேதம் செய்யப்பட்ட ஆப்பிரிக்கர்களின் தலைகள் செருகப்பட்டிருக்கின்றன.
கம்பெனி குர்ட்ஸ் அபாயகரமானவன் என்று முடிவு செய்து அவனை ஊருக்கு அழைத்து வரச் சொல்கிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் குர்ட்ஸ் வர மறுக்கிறான். அவனை மார்லோவ்வும் மற்றவர்களும் அழைத்துப் போக எண்ணும் போது அவனுக்காகப் பல ஆப்பிரிக்கர்கள் குண்டடி பட்டுச் சாகிறார்கள். கடைசியில் ஊருக்குத் திரும்பும் வழியில் மார்லோவ்விடம் ஓர் அறிக்கையை ஒப்படைத்துவிட்டு “பயங்கரம், பயங்கரம்” என்று முணுமுணுத்தபடியே குர்ட்ஸ் செத்துப் போகிறான். அவன் காங்கோ ஆப்பிரிக்கர்களைப் பற்றிக் கொடுத்த அறிக்கையின் ஓரமாக குர்ட்ஸின் கையெழுத்தில் ‘அந்த மிருகங்களைக் கொன்றுவிடுங்கள்’ என்று எழுதியிருக்கிறது.
ஊருக்குத் திரும்பும் மார்லோவ் அறிக்கையின் ஓரத்தில் குர்ட்ஸ் எழுதியிருந்ததைக் கிழித்துவிட்டு அறிக்கையை உரியவர்களிடம் சமர்பிக்கிறான். குர்ட்ஸின் காதலியிடம் அவள் பெயரைத்தான் அவன் கடைசியாகச் சொன்னதாகப் பொய் சொல்கிறான்.
ஐரோப்பியர்களின் நாடு பிடிக்கும் பித்து, அதனால் ஏற்படும் விளைவுகள் என்பனவற்றை அற்புதமாக விமர்சனம் செய்யும் கதை. இது இக்காலத்தில் வெளிவந்திருந்தால் அது பெரிதல்ல. ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் கான்ராட் இந்தக் குறுநாவலை எழுதியதுதான் பெரிது.
ஆங்கிலம் மூன்றாம் மொழி என்பதாலோ என்னவோ எளிமையான எழுத்து. சிக்கனமான சொற்பிரயோகம். ஆனால் தஸ்தவியஸ்கிக்குச் சவாலாக அமையும் வகையில் அமைந்திருக்கும் மிகத் துல்லியமான கதாபாத்திரங்களின் உளவியல் போராட்டங்கள் குறித்த வருணனைகள். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் உளவியல் நாவலை மர்ம நாவல்போல் முன்னகர்த்திச் செல்லும் ஆற்றல்.
இருட்டின் இதயம் என்பது கல்வி அறிவில்லாத ஆப்பிரிக்க கண்டமும் அதன் மக்களும்தான் என்று ஐரோப்பியர்கள் பெருமைபட்டுக் கொண்டிருக்க, உண்மையில் அவர்கள் இதயம்தான் மிக இருண்ட பகுதி என்று விமர்சனம் செய்யும் குறுநாவல்.
இந்த நாவல் எழுதி முடிக்கப்பட்ட பதினான்கு ஆண்டுகளில் வெடித்த முதலாம் உலகப் போரும் அதன் பிறகு இருபதே வருடங்களில் ஐரோப்பாவில் கட்டவிழ்க்கப்பட்ட நாஜி சர்வாதிகாரக் கொடுமைகளும் கான்ராட்டை ஒரு தீர்க்கதரிசி என்றே காட்டின.
இது ஆப்பிரிக்கர்களைப் பற்றிய மிகத் தட்டையான சித்தரிப்பை வழங்குவதாக சினுவா ஆசேபே போன்ற ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் விமர்சனம் செய்தாலும் கூட
ஒரு முறை வாசித்தால் என்றுமே மறக்க முடியாத படைப்பு.
எழுத மட்டுமில்லாமல் வாசிக்கப் பழகுகிறவர்களும் தவறாமல் வாசிக்க வேண்டியது.