யுகியோ மிஷிமா – அழகான வன்முறைகள்

ஜப்பானிய எழுத்தாளர் யூகியோ மிஷிமா தனது நாற்பத்து ஐந்தாவது வயதில் நான்கு நண்பர்களோடு தோக்கியவிலிருக்கும் ஓர் இராணுவ முகாமிற்குள் புகுந்தார். உள்ளே புகுந்தவர்கள் முகாமின் தலைமை அதிகாரியை நாற்காலியோடு கட்டிப் போட்டார்கள். அதன் பிறகு ஒரு பால்கனியில் நின்றபடி தலையைச் சுற்றி நாட்டுப்பற்று வாசகங்கள் எழுதிய ஒரு துணியைக் கட்டியிருந்த மிஷிமா கீழே நின்ற இராணூவ வீரர்களை அரசாங்கத்துக்கு எதிராகப் புரட்சி செய்யத் தூண்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானில் அமெரிக்கர்களால் திணிக்கப்பட்ட மக்களாட்சி முறை அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் ஜப்பானிய பேரரசருக்கே முழு அதிகாரத்தை வாங்கித் தருவது மிஷிமாவின் நோக்கமாக இருந்தது.

அவர் பேச்சைக் கேட்ட ராணுவ வீரர்கள் அவரைக் கேலி செய்து சிரித்தார்கள். சில நிமிடங்கள் தொடர்ந்து பேசிய பிறகு மிஷிமா தலைமை அதிகாரியின் அலுவகத்துக்குள் சென்று செப்புக்கு என்ற பாரம்பரிய ஜப்பானிய முறைபடி ஒரு குறுவாளால் வயிற்றை அறுத்து, குடலை வெளியேற்றித் தற்கொலை செய்து கொண்டார்.  செப்புக்கு தற்கொலையின் இரண்டாவது படியாக அவர் தலையைச் சீவ அவர் நியமித்திருந்த நண்பர் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த செயலைச் செய்யப் பயந்து பின்வாங்கியதால் மிஷிமாவின் தற்கொலைச் சடங்கு முழுமையடைமாலேயே அவர் இறந்து போனார்.

தனது வாழ்க்கையில் எழுத்தாளர், இராணுவ வீரர், நடிகர், ஆண் மாடல், பின்னாளில் ஜப்பானிய பேரரசியான பெண்ணின் மாஜி காதலர் என்று பல அவதாரங்களை எடுத்த யூகியோ மிஷிமாவின் நாவல்கள் தற்கொலை உட்பட மரணத்தின் பல ரூபங்களில் வெளிப்படக்கூடிய அழகியலைப் பேசுபவை.

மிஷிமாவின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவரைப் போலவே தனியர்கள் 1900களின் தொடக்கத்தில் சீனாவையும், ரஷ்யாவையும் போரில் வென்ற வெற்றிக் களிப்பில் கர்வப்பட்டுக் கொண்டிருந்த ஜப்பானில் பிறந்தவர்கள். 1945க்குப் பிறகு அமெரிக்கர்களாலும் மற்றவர்களாலும் ஆழ்ந்த இழிவுநிலைக்கு ஜப்பான் உள்ளான போது மிஷிமா போலவே அவர் நாவலில் வரும் கதாபாத்திரங்களும் குழம்பிப் போகிறார்கள் (தனது வாழ்வின் கடைசிவரைப் பேரரசருக்கு உரிய உரிமைகள் விட்டுக் கொடுத்ததற்காக ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிடோவை மிஷிமா மன்னிக்கவில்லை).  பெருமைமிக்க பழைய ஜப்பானுக்கும் தோல்வியில் துவண்டு போயிருக்கும் புதிய ஜப்பானுக்கும் இடையே தவிக்கும் மிஷிமாவின் கதாபாத்திரங்களுக்குச் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படும் வன்முறையும், ஓரினச் சேர்க்கையுமே வடிகால்களாகவும், அடையாளங்களாகவும் மாறுகின்றன.

மிஷிமா இளம் வயதில் எழுதிய பெரும் புகழ்ப்பெற்ற “முகமூடியின் வாக்குமூலம்” என்ற நாவலில் வரும் கிமிடாகே தனக்குள் பதுங்கிக் கிடக்கும் ஓரின ஈர்ப்போடு போராடுகிறான். கிமிடாகேவுக்குப் பெண்களிடம் ஈர்ப்பு இல்லை. கட்டழகான ஆணுடலே அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. சிறுவயதில் குழந்தைகள் புத்தகத்தில் காட்டப்படும் ஆண் குதிரை வீரனின் சித்திரத்தை ஆசையுடன் பார்க்கிறான். மற்றவர்கள் அதைக் கவனிக்கும்போது பார்க்கக் கூடாதைப் பார்த்துவிட்டதுபோல் அந்தப் புத்தகத்தை ஒளித்து வைக்கிறான்.  பெரியவனானதும் நிர்வாணமாய் நிற்கின்ற ரோமானிய சிற்பங்களை ரகசியமாக ரசிக்கிறான். ஆண் உடலின் வலிமையையும் பலத்தையும் ஆராதிக்கும் கிமிடாகேயால் பலவீனமானவற்றை ரசிக்கவோ அவற்றின் மீது அன்பு செலுத்தவோ முடியவில்லை.

ஓரினச் சேர்க்கையின் வெளிப்பாடாக மட்டுமே சித்தரிப்புக்களை மிஷிமாவை வாசிப்பவர்கள் காணத் தேவையில்லை. வெற்றிக் களிப்பிலும் போர் ஆயத்தங்களிலும் ஆண்தன்மை மிக்கதாக இருந்த பழைய ஜப்பான் தனது பெருமைகளை எல்லாம் இழந்து பலவீனமடைந்து போனது பற்றிய மிஷிமாவின் விமர்சனமாகவும் அவர் நாவல்களில் வரும் ஆண் ஓரினச் சேர்க்கை பற்றிய குறிப்புக்களைக் காணலாம். ‘ஃபோர்பிடன் கலர்ஸ்’ என்ற அவருடைய பின்னாளைய நாவல் ஒன்றில் வரும் ஷுன்ஷுகே என்ற முதிய எழுத்தாளர் ஒருவரிடம் வரும் பேரழகனான இளைஞன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்கிறான். பெண்களை வெறுக்கும் ஷுன்ஷுகே பெண்களுக்கு எதிராக அந்த இளைஞனின் அழகைப் பயன்படுத்த எண்ணுகிறார். பணத்துக்காக நிச்சயமான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படியும், பிறகு விருப்பம்போல் ஆண்களுடனும் பெண்களுடனும் (எவ்வளவு முடியுமோ அவ்வளவு) உடலுறவு வைத்துக் கொள்ளவும் அவனுக்கு அறிவுரை வழங்குகிறார்.

பலத்துக்காகவே பலமானவைகளை ஆராதிப்பதும் அதன் பலனாக பலமில்லாதவைகளின்மீது மிக நுணுக்கமான வழிகளில் வன்முறைகளைக் கட்டவிழ்ப்பதும் மிஷிமாவின் நாவல்களின் அடிப்படை சித்தாந்தங்கள்.  ’தெர்ஸ்ட் ஃப்ஃஃர் லவ்’ என்ற நாவலில் புற்று நிறைய எறும்புகள் கொதிக்கும் வெந்நீரில் சாகடிக்கப்படுகின்றன. ‘சவுண்ட் ஆஃப் வேவ்ஸ்’ நாவலில் ஒரு பெண்ணை வன்புணர்வு செய்வதற்காக அவள் உடைகளைக் கழற்றப்போகும் ஒருவன் தேனீக்களால் கொட்டப்படுகிறான். ‘தி சேய்லர் வூ ஃபெல் ப்ரொம் கிரேஸ் வித் தி ஸீ’ நாவலில் வரும் மாலுமி ஒருவனை பையன்கள் சில பேர் கட்டிப்போட்டு அவன் உடலைக் கூறு போடுகிறார்கள்.

ஆனால் மிஷிமாவின் கதைகளில் வரும் வன்முறை என்பது கட்டவிழ்க்கப்பட்ட வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய தற்கொலையைப் போல மிகுந்த ஆழமான, அசைக்கமுடியாதப் படிகளைக் கொண்டது. சடங்குப்பூர்வமானது. சடங்குப்பூர்வமானதாக இருப்பதாலேயே அழகாகத் தெரியக் கூடியது. ‘தி டெம்பிள் ஆஃப் தி கோல்டன் பெவிலியன்’ நாவலில் நாசக்காரர்களால் எரியூட்டப்படும் பண்டைக்காலத்திய கியோதோ கோயிலின் சித்திரத்தைப் போல இரக்கமே இல்லாத பேரழுகும் பேரழிவும் நிறைந்தது.

அந்த வன்முறை அவர் நாவல்கள் எல்லாவற்றிலும் விரவி நிற்கின்றது. ஆனால் சடங்குப்பூர்வமான வன்முறை போருக்குப் பின் அர்த்தம் இழந்து வெவ்வேறு திக்குகளில் கலைந்துபோன ஜப்பானின் பழம்பெருமையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒழுங்கையும் தருகிறது. மாலுமி நாவலில் தனது தாய் மாலுமியோடு உடலுறவு வைத்துக் கொள்வதை ஒளிந்து பார்க்கும் மகன் அந்தச் செயலில் பிரபஞ்ச ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்பட்டு விட்டதாக மகிழ்கிறான்.

சடங்குகளின் பயமூட்டும் அழகும் நெகிழ்வில்லாத் தன்மையும் அதன் காரணத்தாலேயே அவற்றின் மீது கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் ஈர்ப்பும் மிஷிமாவின் நாவல்களில் நிரம்பி இருக்கும் அம்சங்கள். நடிகர்கள் முகமூடிகள் அணிந்து நடிக்கும் நோ நாடகத்தைப்போல ஒவ்வொருவரும் – ஜப்பானிய பேரரசரிலிருந்து சாதாரண பொதுஜனம்வரை – உண்மையான உணர்ச்சிகளைக் காட்டாமால் ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லி வாழ்கிறார்கள் என்பது மிஷிமாவின் குற்றச்சாட்டு.

சத்தியத்தின் பயங்கரமும் பேரழகும் கலந்த தரிசனத்தைப் பெற விரும்பினால் வன்முறை மிகுந்த மரணத்தைக்கூடத் தழுவத் தயங்கக் கூடாது என்பது மிஷிமா என்ற எழுத்தாளனின் படைப்புகள் நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

[மிஷிமா 19 நாவல்களோடு சிறுகதைகள் நாடகங்கள் எழுதியிருக்கிறார்]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s