முகநூல் கவிதைகளைக் குப்பை என்று எளிதில் நிறைய பேர் தள்ளிவிடுகிறார்கள். செய்தித்துறை, விமர்சனம், இசை முதற்கொண்டு குறும்படம் எடுத்தல்வரை எல்லாவற்றையும் தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் ‘நிபுணர்’களிடமிருந்து பொதுமக்களிடம் தந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த அணுகுமுறை பெரும்பாலும் தனது முக்கியத்துவம் போய்விடுமோ என்ற பீதியின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.
ஆனால் இலக்கிய வடிவங்கள் படைப்புகள் ஆகியவற்றின் வெளிப்புற அம்சங்கள் வேண்டுமானால் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் பாதிக்கப்படலாமே அன்றி, குறிப்பிட்ட ஒரு வடிவத்தின் உள்ளடக்கத்தை ஒரு வகையான தத்துவப் பார்வையே நிர்ணயிக்கிறது என்பது என் ஆழமான கருத்து. தத்துவப் பார்வையே ஓர் இலக்கிய வடிவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அதன் தொடர் செயல்பாட்டையும் சாத்தியமாக்கும் உந்துசகிதியாக இருக்கிறது.
அப்படியென்றால் முகநூல் கவிதைகளின் தத்துவப் பார்வை என்ன?
இந்தக் கேள்வியே பலருக்கு வியப்பூட்டலாம். இந்தக் கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ள நாம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் 1800ம் வருடத்துக்குப் போக வேண்டும்.
1800ம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் நோன்றிய ரோமாண்டிக் இயக்கம் பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னால் மனித அறிவின்மீதும் விஞ்ஞான முன்னேற்றத்தின்மீதும் வைக்கப்பட்ட அதீதமான நம்பிக்கைக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனமாகவே எழுந்தது.
விஞ்ஞானம் சாத்தியமாக்கிய பிரம்மாண்டமான தொழிற்சாலைகளில் மனிதர்கள் மிகக் குறைந்த கூலிக்கு மந்தைகள்போல் நடத்தப்படுவதையும், தொழிற்சாலைகளில் வேலை செய்ய விரும்பி கிராமங்களைவிட்டு நகரங்களுக்கு மக்கள் நகர்ந்ததால் ஏற்பட்ட சமூக அவலங்களையும் கண்ட ரோமாண்டிக் இயக்கம் அவற்றுக்கெதிரான விமர்சனமான கீழ்க்கண்ட சிறப்புயல்புகளை உள்ளடக்கிய ஓர் இலக்கியத்தை முன் எடுத்தது:
- விஞ்ஞானத்தின் மீதும், அறிவியல் சிந்தனை மீதும், தொழில்முறை மீதும் கடுமையான விமர்சனம்.
- இயந்திரமயமாதலை மறுத்து இயற்கையை ஆராதித்தல்
- அறிவியல் சிந்தனைகளுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் மாறாகத் தனிமனித உணர்வுகளுக்கே முதலிடம் தருதல்
- நகர நாகரிகங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் எதிராக பழைய நாட்டார் கதைகளையும், கலை வடிவங்களையும் முன்னிலை படுத்துதல்
- வாசகர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் சித்திரங்களால் சமுதாய அவலங்களைச் சுட்டிக் காட்டுதல் (உதாரணத்துக்கு: வறுமையில் வாடும் அன்னையும் குழந்தையும்)
இயந்திரத்தனத்துக்கும் மனிதர்களை வெறும் உற்பத்திக்கு உதவும் கருவிகளாகவும் பயன்படுத்தும் ‘நவீன’ சிந்தனைக்கு எதிராகவும் ரோமாண்டிக் இயக்கம் தனி மனிதர்களின் மதிப்பையும் அவர்களது முக்கியத்துவத்தையும் தூக்கிப் பிடித்தது.
மனித உணர்ச்சிகள்தான் படைப்பின் வடிவத்தை நிர்ணயிக்க வேண்டுமே தவிர இலக்கணங்கள் மனித உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் ரோமாண்டிக் இயக்கத்தின் முக்கியமான படைப்பாளிகள் கவனமாக இருந்தார்கள். ரோமாண்டிக் இயக்கத்தின் முதன்மை படைப்பாளிகளில் ஒருவரான ஜெர்மன் ஓவியர் காஸ்பர் ஃப்ரீட்ரிக் “படைப்பாளின் உணர்ச்சியே அவனது சட்டம்” என்று பிரகடனம் செய்தார்.
1800லிருந்து 1850 வரை ரோமாண்டிக் இயக்கம் உச்சத்தில் இருந்தது. இயந்திரத்தனமான வாழ்க்கையால் மழுங்கடிக்கப்பட்ட மனித உணர்வுகளைத் தட்டி எழுப்ப தீவிர உணர்ச்சிகளை அது வாசகர்களிடம் எழுப்ப முயன்றது. காதல், அன்பு என்ற உணர்ச்சிகளை மட்டுமன்றித் தீவிரமான அச்சம், வெறுப்பு ஆகியவற்றைத் தூண்டும் படைப்புக்களும் ரோமாண்டிக் இயக்கத்தின் பாதிப்பால் வெளிவந்தன. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா, மேரி ஷெல்லியின் ஃப்ரான்கன்ஸ்டைன் ஆகிய நாவல்கள்கூட ரோமாண்டிக் இயக்கத்தின் தாக்கத்தால் தோன்றியவையே.
இங்கு பயன்படுத்தப்படும் ரோமாண்டிக் என்ற வார்த்தை காதலை மட்டும் குறிப்பதல்ல. இயற்கையோடு உள்ள தொடர்பைக் குறிக்கத்தான் ரோமாண்டிக் என்ற வார்த்தை முதலில் பயன்பட்டது. அதில் காதல் ஒரு அங்கமாகவே கருதப்பட்டது. பின்னாளில்தான் ரோமாண்டிக் என்பதும் ரோமான்ஸ் என்பதும் காதலைக் குறிக்கும் வார்த்தையானது.
ரோமாண்டிக் இயக்கம் 1850யோடு முடிந்து போய்விடவில்லை. 1950களில் அணுவாயுத அழிவின் அச்சத்தால் உலகம் பீடிக்கப்பட்டிருந்த வேளையில் தனி படைப்பாளியை முன்னிலைப்படுத்தி அமெரிக்காவில் எழுந்த confessional கவிதைகளுக்கும் புனைவுகளுக்கும் இந்த ரோமாண்டிக் இயக்கமே முன்னோடி. ஆலன் ஜின்ஸ்பர்க், ஜாக் கேருவேக் போன்ற அக்காலக் கட்டத்தின் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புக்களில் ரோமாண்டிக் இயக்கம் தொடர்ந்து வருவதைக் காணலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சிகள் தனிமனிதர்களின் மதிப்பையும் தனி அடையாளத்தையும் சிதைக்க முற்படும் வேளைகளில் ரோமாண்டிக் வகை படைப்புக்கள் மீண்டும் பிரபலமாகின்றன.
அதீத உணர்ச்சிகள் இலக்கியப் படைப்புக்களின் தரத்தை குறைக்கத் தொடங்கும் நேரத்தில் இலக்கியம் தன்னையே சரிப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறது. 19ம் நூற்றாண்டில் எழுந்த ரோமாண்டிக் இயக்கம் வழிதவறிப் போக இருந்த சமயத்தில் சிம்பாலிஸம், ஃபார்னாஸியனிஸம் ஆகிய இலக்கிய இயக்கங்கள் 1860களில் எழுந்து இலக்கியத்தின் உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன (இவற்றை வேறு பதிவுகளில் எழுதுகிறேன்).
முகநூலில் இன்று பரவலாகக் காணப்படும் கவிதைகளுக்கு வருவோம். அவற்றின் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் கூர்ந்து கவனித்தால் அவை அடிப்படையில் ரோமாண்டிக் வகை படைப்புக்கள் என்பது தெரிய வரும். 19ம் நூற்றாண்டின் ரோமாண்டிக் வகை படைப்புக்களின் பல இயல்புகளையே இன்றையே முகநூல் கவிதைகளும் கொண்டிருக்கின்றன.
தனிமனிதர்களின் படைப்பாற்றலுக்கு முதன்மை தருபவை முகநூல் கவிதைகள். அதற்காக முகநூலில் வரும் எல்லா கவிதைகளும் சிறந்தவையா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரும் எல்லாப் படைப்புக்களும் சிறந்தவையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது வெறும் மனப்பிரமை.
படைப்புக்கள் சிறப்பாய் இருப்பதும் இல்லாததும் படைப்பாளிகளின் வாசிப்பையும் உழைப்பையும் பொறுத்தது.
முகநூல் கவிதைகளுக்கு ஒரு தத்தவ, வரலாற்றுப் பின்னணி உண்டு என்பதைத்தான் சொல்ல வந்தேன்.