எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் – அமெரிக்காவின் தொலைந்த தலைமுறை

எஃப். ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட் ஒரு வகையில் அவருடைய சமகாலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஹெமிங்வேயைவிட சிறந்த எழுத்தாளர். ஆனால் இதை யாரும் லேசில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பலருக்கு ஃபிட்ஸ்ஜெரால்ட் யார் என்றே தெரியாது.

ஹெமிங்வேயின் For Whom The Bell Tolls, The Sun Also Rises நாவல்களை விடவும் கதைகளின் உயிரோட்டத்திலும், கட்டமைப்பிலும் ஃபிட்ஸ்ஜெரால்ட்-இன் The Great Gatsby மற்றும் The Beautiful and the Damned நாவல்கள் ஆங்கில புனைவில் குறிப்பிடத்தக்கவை.

ஹெமிங்வேயின் நாவல்கள் ஓயாத நகர்வுகளை உள்ளடக்கியவை. நிருபர் என்ற வகையில் பத்திரிகை உத்திகளானச் சுருக்கமான, துல்லியமான உரைநடை மற்றும் அதி அத்தியாவசியமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லுதல் ஆகியவற்றை ஹெமிங்வே கொண்டுவந்தார். 

ஆனால் ஹெமிங்வேயின் எழுத்தை வெறும் ‘நிருபர் பாணி’ என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஆண்மைத்தனம் (ஸ்பானிய மொழியில் machismo என்றழைக்கப்படுவது) என்று அவர் கருதிய போர், வேட்டை, மீன் பிடித்தல் ஆகிய செயல்களும், உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாமல் இருத்தல், அளவாகப் பேசுதல், துயரங்களை எதிர்கொள்வதில் அலட்சியமான லாவகம் (grace under pressure) ஆகிய குணங்களும் அவரை ஈர்த்தன. இவற்றின் பிரதிபலிப்பே ஸ்பானிய போர், வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவற்றைப் பற்றிய அவரது நாவல்களும், சிறுகதைகளும். 

சொல்லப் போனால் வன்முறையின் அழகியலை மிகத் துல்லியமாகப் பேசியவை ஹெமிங்வேயின் படைப்புக்கள். போரையும் வன்முறையையும் மீறி வெளிப்படக்கூடிய மனிதர்களின் சாத்தியங்களை அவை பேசின.

ஒப்பு நோக்க ஃபிட்ஸ்ஜெரால்ட் முதலாம் உலகப் போருக்குப் பிந்திய அமெரிக்காவின் ‘தொலைந்த தலைமுறையின்’ அல்லல்களை எடுத்துக் காட்டுபவை.

இருபதாம் நூற்றாண்டு வரை ஏதோ ஒரு தர்ம நியதிக்குக் கட்டுப்பட்டிருந்த ஐரோப்பிய போர்முறைகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் அசுரத்தனமாக மாறி மனிதர்கள் ஏன் சாகிறோம், எப்படிச் சாகிறோம் என்றுகூட தெரியாமல் பெயர் தெரியாத பிரஞ்சு மற்றும் ஜெர்மன் திடல்களில் ஏவுகணைகளுக்கும், இயந்திரத் துப்பாக்கி ரவைகளுக்கும், விஷ வாயு தாக்குதலுக்கும் இரையாகிக் கொத்துக் கொத்தாகச் செத்து முடிந்திருந்த காலம். போர் என்பது புனிதமானது என்று பிரச்சாரம் செய்த அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாமல், அது முன்மொழிந்த பொருளாதாரம், முதலாளித்துவம், நாட்டுப்பற்று, இன, சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் உறவுகள் என்ற அனைத்தின்மீதும் அதிருப்தியும், அவநம்பிக்கையும் கொண்ட தொலைந்த தலைமுறை ஒன்று 1920களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உருவானது. அது முந்தைய தலைமுறையின் அற போதனைகளை ஒதுக்க ஆரம்பித்தது. இந்தத் தொலைந்த தலைமுறையின் அடையாளமாக கறுப்பர்களின் இசைக்கூடங்களில் அடிப்படையில் கட்டற்ற தன்மை கொண்ட ஜாஸ் இசை உருவானது.

பின்னாளில் வியட்நாம் போரின் போது அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கையுற்ற தலைமுறையின் இசையாக ராக் அண்ட் ரோல் மாறியதைப் போலவே 1920களின் தொலைந்த தலைமுறையின் மனச்சிக்கல்களையும் சவால்களையும் பிரதிபலிக்கும் இசையாக ஜாஸ் இசை கொண்டாடப்பட்டது. 1920கள் ஜாஸ் சகாப்தம் என்றழைக்கப்பட்டன.

ஃபிட்ஸ்ஜெரால்ட் தன் எழுத்தின் மூலமாக இந்தத் தலைமுறையின் முக்கிய அடையாளமாகவும் மனச்சாட்சியாகவும் மாறினார். அவர் எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்புக்கு ‘ஜாஸ் சகாப்தத்தின் கதைகள்’ என்று தலைப்பிட்டார்.

ஃபிட்ஸ்ஜெரால்ட் தனது ஆங்கில உரைநடையின் ஜாஸ் இசையின் இந்த நீரோட்டத்தையும் அழகிய ஆரோகணங்களையும் அவரோகணங்களையும் அதன் கட்டற்றத் தன்மையையும் கொண்டு வந்தார். அவர் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள்  அந்தக் கால அமெரிக்காவின் வெளிப்பூச்சையும், பகட்டையும் சித்தரித்து அவற்றினூடே ஓடும் பொய்களையும் உறவுச் சிக்கல்களையும் இன வெறியையும் விமர்சித்தன.

தி கிரேட் கேட்ஸ்பி நாவலில் வரும் கேட்ஸ்பி பொய்யாலும் தந்திரத்தாலும் அமெரிக்காவின் மேல்தட்டு மக்களுடன் நெருங்கிப் பழகுகிறான். ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகும்போதுதான் அவர்களிடையே புரையோடியிருக்கும் ரகசிய கேவலங்கள் அவன் கண்களுக்குத் தெரிகின்றன. The Beautiful and The Damned நாவல் முதலாம் உலகப் போரிலிருந்து திரும்பி வரும் போர்வீரன் ஒருவனின் திருமண வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. கணவனும் மனைவியும் ஓயாமல் பணக்காரர் வீட்டுப் பார்ட்டிகளுக்குப் போகிறார்கள். அதிகம் குடிக்கிறார்கள். ஒருவரிடம் ஒருவர் பொய்யாய் இருக்கிறார்கள்.

‘என்னிடம் ஒரு கதாநாயகனைக் காட்டு. உனக்கு நான் ஒரு துன்பியல் கதையைக் காட்டுகிறேன்.’ என்று ஃபிட்ஸ்ஜெரால்ட் தன் சார்பாகச் சொல்கிறார்.

ஹெமிங்வேயின் உரைநடையின் எளிமையையும் துல்லியத்தையும் அவர் சிறுகதைக் கட்டமைப்பையும் பலரும் கொண்டாடுவார்கள். இந்தப் பாராட்டு அத்தனைக்கும் அவர் தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அவர் எழுத்தில் இல்லாத ஆழமும் நுணுக்கமும் கொண்டவை
ஃபிட்ஸ்ஜெரால்ட் கதைகள்.

இருவரும் சந்தேகமில்லாமல் மாஸ்டர்கள்தான். ஆனால் ஹெமிங்வேயின் கதைகள் தூரத்தில் கேட்கும் சோகமும் வீரமும் கலந்திருக்கும் போர்ப்பாட்டுப் போலிருப்பவை. என்னதான் உற்சாகம் தந்தாலும் போர்ப்பாடல்கள் ஒரே திசையில் நகர்பவை. ஒரே திசையில் போக வைப்பதுதான் போர்ப்பாடலின் இலக்கணம்.

ஆனால் ஜாஸ் இசை அப்படியல்ல. அது கடல்போல் பரந்து எதிர்ப்பாராத ஆழங்களுக்குப் போகக் கூடியது.
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s