சொல்லவே சங்கடமாக இருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களில் பல்வேறு இடங்களிலிருந்து வெளிவந்திருக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நான்கு கவிதைத் தொகுப்புக்களை வாசிக்க நேர்ந்தது.
தமிழ்க் கவிதைகளின் தரம் மற்ற மொழியினருக்குத் தெரியட்டுமே என்ற எண்ணத்தில் வெளியிட்டிருப்பார்கள்.
எண்ணம் பாராட்டப்பட வேண்டியது.
மொழிபெயர்ப்பவர்கள் ஒரு மொழியிலோ இரு மொழிகளிலேயும் மெத்தப் படித்தவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் இரு மொழிகளின் சமகால இலக்கியப் போக்குகளைக் கொஞ்சமாவது அறிந்த பின்னால் மொழிபெயர்ப்பது எவ்வளவு அவசியம் என்பதை இத்தொகுப்புக்கள் காட்டிக் கொடுத்தன.
தமிழ்க் கவிதையை ஆங்கிலத்தில் பெயர்க்க விக்டோரிய மகாராணி காலம் தொடங்கி கி.பி. 1920களில் காலாவதியாகி விட்ட ஆங்கிலக் கவிதை நடை.
ஆங்கில மொழியின் இயல்பான ஓசைநயத்தைப் பற்றிய குறைந்தபட்சக் கவலைகூட இல்லாமல் தீர்மானிக்கப்பட்டிருந்த வரிகள்.
தேவை இல்லாத இடங்களில் தோன்றி திகிலூட்டும், திடுக்கிட வைக்கும் ஆங்கிலக் கேப்பிடல் எழுத்துக்கள்.
இதற்கும் மேல் சமாதானமே சொல்ல முடியாத இடங்களில் இலக்கணப் பிழைகள்.
எனக்கு ஒன்று தோன்றுகிறது. நேரடி மொழிபெயர்ப்புச் சரியாக வரவில்லை என்றால் தமிழ்க் கவிதையைத் தமிழிலும் ஆங்கில எழுத்துக்களில் transliterate செய்த வடிவத்திலும் கொடுத்து இவற்றின் கீழே கவிதையின் முக்கியமான உள்ளடக்கத்தையும் படிமங்களையும் ஆங்கில உரைநடையாகத் தந்தால் என்ன?
Transliteration செய்யப்பட்ட கவிதையின் மூலம் தமிழ்க் கவிதையின் ஓசையை மாற்று மொழியினர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உள்ளடக்கத்தின் சிறப்பை (?) உரைநடை காட்டிவிடும்.
மொழி எடுத்தவர் எல்லாம் மொழிபெயர்ப்பாளராகி விட்ட காலம்.
கொஞ்சம் மாற்றி யோசித்தால் மோசமான மொழிபெயர்ப்புக்களிலிருந்து தமிழ்க் கவிதை கொஞ்சம் தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு.
Well said sir!
LikeLike