செத்துப்போன எழுத்தாளரும் இலக்கிய விமர்சனமும்

ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் எழுத்தாளர் செத்துப்போய் விடுகிறார் என்று 1967ல் புகழ்பெற்ற பிரஞ்சு இலக்கிய விமர்சகர் ரோலண்ட் பார்த்ஸ் கட்டுரை எழுதினார். ‘எழுத்தாளரின் மரணம்; என்ற தலைப்பிட்டிருந்த அந்தக் கட்டுரையில் பார்த்ஸ் இலக்கிய விமர்சனத்தில் எழுத்தாளரின் நோக்கத்தையும் அவர் எழுதிய கால தேசச் சமூகச் சூழல்களையும் கருத்தில் எடுத்துக் கொள்ளும் பாரம்பரியமான இலக்கிய விமர்சன அணுகுமுறையைக் கடுமையாகச் சாடுகிறார்.

பார்த்ஸின் வாதத்தின்படி இலக்கிய விமர்சனம் நோக்கம் எழுத்தாளரின் படைப்பயும் – அதாவது தாளில் அச்சிடப்பட்டிருக்கும் வார்த்தகளையும் – அவற்றின் சாத்தியங்களையும் கருத்தில் கொள்வதே அன்றி எழுத்தாளரின் எண்ணங்களையும் நோக்கத்தையும் ஆராய்ந்து அவற்றுக்கு ஒரே பொருளை நிர்ணயிப்பதல்ல.

ஒரு படைப்பை எழுதி முடித்தவுடன் எழுத்தாளர் அந்தப் படைப்பின் அர்த்தம் என்ன என்பதைச் சொல்லும் தகுதியை இழந்து விடுகிறார் என்பது பார்த்ஸின் வாதம். அப்படி ஏதேனும் அர்த்தத்தைப் படைப்புக்குள் வைக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் அவர் அந்தப் படைப்பை எழுதும் சமயத்தில் அதைச் செய்திருக்க வேண்டும். அப்போதும்கூட படைப்பு வெளிவந்த பின் படைப்பிலுள்ள வார்த்தைகளுக்கு அவர்கள் விருப்பப்படி அர்த்தம் கற்பித்துக் கொள்வது வாசகர்களின் உரிமையே தவிர, அதில் எழுத்தாளருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பார்த்ஸ் சொல்கிறார்.

ஒரு படைப்பின் அர்த்தத்துக்கு எழுத்தாளரை நம்பியிருப்பது ஒரு வகையில் இலக்கியச் சர்வாதிகாரம் என்பது பார்த்ஸின் கருத்து. இப்படிப்பட்ட சர்வாதிகாரம் படைப்பின் சாத்தியங்களை நிராகரித்து படைப்பை எழுத்தாளரின் எண்ணம் என்ற ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டுவர முயல்கிறது என்பது அவருடைய வாதம்.

பார்த்ஸின் இந்த வாதம் அமெரிக்காவில் 1940களிலிருந்து 1970 வரை செல்வாக்குப் பெற்றிருந்த ‘புது விமர்சனம்’ என்ற கொள்கையின் தழுவி எழுந்ததைப் போல தோற்றமளிக்கக் கூடியது. சில விவரங்களில் பார்த்ஸின் கொள்கையோடு வேறுபட்டாலும் புது விமர்சனம் படைப்பு அது பிறக்கும் நேரத்தில் எழுத்தாளரிடமிருந்து பிரிந்து சுயாதீனமான இருப்பைப் பெற்றுக் கொள்கிறது என்ற அடிப்படையில் பார்த்ஸின் கருத்தோடு ஒத்துப்போனது.

ஒரு  அபடைப்புக்கு ‘அதிகாரப்பூர்வமான’ அர்த்தமும் இல்லை என்ற பார்த்ஸின் கருத்துக்கு அவர் காலத்திலேயே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. பார்த்ஸின் கருத்தை விமர்சித்தவர்கள் பார்த்ஸின் கூற்று உண்மை என்றால் அவர் கட்டுரைக்கும் எந்த அர்த்தமும் இருக்க முடியாது என்று கூறினார்கள். புகழ்பெற்ற பிரஞ்சு தத்துவ அறிஞர் ஜாக் தெரிதா “ரோலண்ட் பார்ஸின் மரணங்கள்” என்று விமர்சனக் கட்டுரை எழுதினார். மற்றவர்கள் எழுத்தாளருக்குப் படைப்பின் மீது உரிமை இல்லை என்று சொன்ன பார்த்ஸ் அவர் கட்டுரையின் அடியில் தனது பெயரைப் போட்டுக் கொண்டதை நக்கலடித்தார்கள்.

பார்த்ஸின் ரசிகர்கள் அவர் அந்தக் கட்டுரையின் மூலம் பார்த்ஸ் புரையோடிப் போன பழைய பாணி இலக்கிய விமர்சனத்தை விமர்சிக்க நினைத்தாரே அன்றிப் படைப்புகளுக்குத் தெளிவான அர்த்தம் எதுவும் இல்லை என்று சொல்ல வரவில்லை என்று வியாக்கினம் எழுதினார்கள்.

உண்மையில் பார்த்ஸ் என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆராய்வது அவசியம்.

முதலில் பார்த்ஸ் விமர்சித்த பழைய பாணி இலக்கிய விமர்சனம் கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ காலப் பழமையுடையது. தனது பேத்ரஸ் என்ற உரையாடலில் பிளேட்டோ ‘எழுத்தாளர்தான் ஒரு படைப்புக்குத் தந்தை’ என்ற கருத்தை முன்வைக்கிறார்.

பிளேட்டோவின் கருத்துப்படி எழுத்தாளரான தந்தையுடன் இருக்கும் வரைதான் கோலோஸ் என்று அழைக்கப்ப்டும் அவருடைய படைப்புக்கு அர்த்தம் கிடைக்கிறது. தந்தையான எழுத்தாளரிடமிருந்து பிரிந்த எழுத்து பலராலும் பல வகையிலும் பொருள் கொள்ளப்பட்டுக் கடைசியில் அர்த்தமில்லாததாகவும், மனிதர்களை வழித்தவறிப் போக வைக்கும் சாத்தியங்கள் உள்ளதாகவும் மாறக் கூடும் என்று பிளேட்டோ எச்சரிக்கிறார்.

இந்தக் கூற்றை எடுத்துக்காட்ட பேத்ரஸ் உரையாடலில் பிளேட்டோ சேர்த்துள்ள கதையில் எகிப்திய கடவுளர்களின் தலைவனான அம்மோனிடம் எழுதும் கலையைக் கண்டுபிடித்த தெயூத் போவதாகக் காட்டுகிறார். தான் கண்டுபிடித்த எழுத்துக் கலையை அம்மோனிடம் அறிமுகம் செய்யும் தெயூத் ‘மனிதர்களின் ஞானத்துக்கும் நினைவாற்றலுக்கும் உதவியாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். இந்த இடத்தில் ஓர் அழகிய சொல் விளையாட்டை பிளேட்டோ தெயூத்தின் வார்த்தைகளுக்குள் நுழைக்கிறார். மருந்தைக் குறிக்கத் தெயூத் பயன்படுத்தும் ஃபார்மகோன் என்ற வார்த்தை விஷத்தையும் குறிக்கக் கூடியது.

அம்மோன் தெயூத்தின் கண்டுபிடிப்பை ஆராய்ந்துவிட்டு ’உன் கண்டுபிடிப்பு மாணவர்களைச் சரியான வழிகாட்டுதலின்றிப் பல விஷயங்களைக் கேட்கச் செய்யும். ஒன்றையும் அறியாமலேயே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தது போன்ற மயக்கத்தை ஏற்படுத்தும்’ என்று சொல்கிறார்.

அதாவது  எழுத்துக்களை எழுதியவரின் நேரடி வழிகாட்டுதலில்லாமல் எழுத்து முற்றிலும் அர்த்தமற்றது அல்லது ஆபத்தானது என்பது பிளேட்டோவின் வாதம்.

பிளேட்டோவின் இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய இலக்கிய விமர்சனம் நாளடைவில் தாளில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளுக்குத் தந்த முக்கியத்துவத்தைவிட எழுத்தாளரோ, கவிஞரோ சொல்ல வந்த கருத்துக்கும், அவருடைய நோக்கத்துக்கும், எழுத்தாளரின் சமூகத் தகுதிக்கும், அவர் வாழ்ந்த அரசியல் ஆன்மீக சமுதாயச் சூழலின் தேவைகளுக்கும் அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்தது.

இதன் பயனாக ஐரோப்பிய கண்டத்திலும் இங்கிலாந்திலும் அழகியல் உணர்வு மெல்லத் தேய்ந்துபோய் எழுத்தாளரின் உயர்ந்த நோக்கம்/எண்ணம்/ சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல மொக்கையான படைப்புகளும் கவிதைகளும் கொண்டாடப்பட்டன. இதன் விளைவாக இன்னும் பல மொக்கையான படைப்புகள் வெளிவந்து அவையும் புகழப்பட்டன.

புது விமர்சனமும் ரோலண்ட் பார்த்ஸும் இந்தப் போக்கும் சாடும் வண்ணமாகவே எழுத்தாளரின் மரணத்தை முன் வைத்தார்கள் என்று நான் கருதுகிறேன்.

ஒரு படைப்பைப் புரிந்து கொள்ள எழுத்தாளரைக் கேட்க வேண்டுமா என்பதோ படைப்புக்குத் தெளிவான அர்த்தம் இருக்கிறதா என்பதோ உண்மையில் பார்த்ஸ் நமக்கு முன்னால் வைக்கும் விவாதமல்ல.

 படைப்பின் கட்டமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உள்ள அழகியல் அம்சங்களின் நேர்மையான மதிப்பீட்டைத் தாண்டி எழுத்தாளரின் நோக்கத்துக்கும் நல்லெண்ணத்துக்கும் விமர்சனத்தில் மதிப்பெண் உண்டா என்பதுதான் ரோலண்ட் பார்த்ஸ் நமக்கு முன்னால் வைக்கும் உண்மையான கேள்வி.

படைப்பின் கட்டமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உள்ள அழகியல் அம்சங்களைப் பற்றிய நேர்மையான மதிப்பீட்டைத் தாண்டி எழுத்தாளரின் நோக்கத்துக்கும் நல்லெண்ணத்துக்கும் விமர்சனத்தில் மதிப்பெண் உண்டா என்பதுதான் ரோலண்ட் பார்த்ஸ் நமக்கு முன்னால் வைக்கும் உண்மையான கேள்வி.


நான் ஒரு படைப்பை எப்படி வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். நான் உயர்வான பொருளை, உயர்வான நோக்கத்துக்காகத்தானே எழுதுகிறேன் அதற்காக என்னைப் பாராட்டக் கூடாதா என்று வாதிடுவோரின் கருத்துக்கு ரோலண்ட் பார்த்ஸின் கட்டுரை ஒரு சவுக்கடி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s