சமீபத்தில் சீன எழுத்தாளர் தோங் ஜூன் -இன் நாவலை மொழிப்பெயர்க்கும்போது சீனத் தத்துவங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாகவே வாசிக்க நேர்ந்தது.
சீனத் தத்துவச் சிந்தனை மட்டுமல்ல, பண்டைய சீன ஆன்மீகம், போர்க்கலை, இலக்கியம், சமூக வாழ்வு, உணவு முறை என்ற அத்தனையும் யின் – யாங் என்ற இருமைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அது என்ன யின் – யாங்? ஒரு வட்டத்துக்குள் மீனின் உருவம் போலவும் ஆண் விந்தின் உருவம் போலவும் கறுப்பும் வெள்ளையுமாய் இரண்டு உருவங்கள் ஒட்டிப் பிணைந்திருக்கின்றன. கறுப்பின் உள்ளே ஒரு வெள்ளை வட்டம். வெள்ளையின் உள்ளே ஒரு கறுப்பு வட்டம்.
வெள்ளை என்பது யாங் தத்துவம். இது ஆண்மையை, வலிமையை, பகலை, சூரியனை, வெப்பத்தை, நல்லதை, நேர்மறையை மற்றும் செயலைக் குறிக்கும். யின் என்பது பெண்மை, பலவீனம், இரவு, நிலவு, குளிர்ச்சி, தீயது, எதிர்மறை மற்றும் செயலற்ற தன்மை. பண்டைய சீனர்களின் பார்வையில் இந்த இருமைகள் கலந்ததுதான் உலகமும் பிரபஞ்சமும். இந்த இருமை என்றும் நிலைத்திருப்பது. அவற்றைப் பிளக்க முடியாது. ஒன்றினால் ஒன்றை முழுக்க மறைத்தொழிக்க முடியாது. நேர்மறைகளும் எதிர்மறைகளும் கலந்த உருவமான அணுவைப் பிளந்தால் என்னாகும்? மிகப் பெரிய அழிவு ஏற்படும்.
இருமைகளின் சமனத்தில் பிரபஞ்சம் சீராய் இயங்குவதாய்ப் பண்டைச் சீனர்கள் நம்பினார்கள். மனிதர்களின் எல்லாச் செயல்களிலும் இந்தச் சமநிலையை அடைவதுதான் பண்டையச் சீனர்களின் குறிக்கோளாக இருந்தது. எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் நல்லதோடு தீயதும் கலந்திருக்கும் என்பது சீனத் தத்துவ தரிசனத்தின் அடிப்படையாகும்.
என்ன முயன்றாலும் தீமையை நம்மால் முற்றாக உலகிலிருந்து அகற்றிவிட முடியாது. நல்லதைப் போல அதுவும் உலகத்தின் அல்லது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாய் இருந்து கொண்டுதான் இருக்கும். நல்லதுக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் இந்த நித்தியமான போராட்டத்தை உணர்ந்து அவற்றுக்குள் ஒருவிதமான சமநிலையை ஏற்படுத்துவதே சீனத் தத்துவஞானிகளின், ஆன்மீக அறிஞர்களின், அரசியல் தலைவர்களின், இலக்கிய கர்த்தர்களின் குறிக்கோளாய் இருந்து வந்திருக்கிறது.
ஒப்பு நோக்க மேற்கத்திய அரசியலமைப்பு தத்துவம், இலக்கியம் என்ற அத்தனையும் நல்லதால் தீயதை அகற்றவும் அறிவால் அறியாமையைப் போக்கவுமே முயன்று வந்திருக்கின்றது சுருங்கச் சொல்லப் போனால் மேற்கத்திய தத்துவமும் இலக்கியமும் முரண்களை வெறுப்பவை. எப்படியேனும் இடது அல்லது வலது, நல்லது அல்லது கெடுதல், சரி அல்லது தவறு என்று முடிவெடுக்கச் சொல்பவை. மேற்கத்திய பார்வையில் சீனத் தத்துவமும் இலக்கியமும் அறமில்லாதவைகளாகவும், நேர்மையில்லாதவைகளாகவும் – சுருங்கச் சொல்லப் போனால் முரண்கள் நிறைந்தவையாகவும் தோன்றுகின்றன.
ஆனால் யின் – யாங் தத்துவப்படி மிக அதீதமான நன்மை தீமையாகிறது. மிக அதீதமான தீமை நன்மையாகிறது. இதைக் காட்டத்தான் யின் – யாங் சித்திரத்தில் உள்ள கறுப்பு வடிவத்தின் உள்ளே வெள்ளை வட்டமும், வெள்ளை வடிவத்துக்கு உள்ளே கறுப்பு வட்டமும் வைக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு நீதியையும் நியாயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீதியும் கருணையும் இருவேறு துருவங்கள். கருணையே இல்லாத அளவுக்குத் தீவிரமாகும் நீதி நன்மையைவிட கெடுதலைச் செய்கிறது. அதுபோல் நீதியே இல்லாத கருணை வெறும் புத்தி மயக்கமாக முடிந்து போகிறது, இரண்டினாலும் உலகத்துக்குப் பயனில்லை. நீதிக்குள் கருணை என்ற முரணும், கருணைக்குள் கண்டிப்பு என்ற முரணும் இருந்தால்தான் அவை உலகத்தாரால் ஏற்கப்படுகின்றன. ஷேக்ஸ்பியரின் வெனீஸ் வணிகன் நாடகத்தில் யூத வணிகனான ஷைலாக்குடன் வாதம் செய்யும் போர்டியா தெய்வீகத் தன்மையை எட்ட நீதி எப்படி கருணையால் மென்மையாக்கப்பட வேண்டும் என்று சொல்லி வாதம் செய்கிறாள்.
அழகியலிலும் இது பொருந்தும். கடுமைக்குள் எட்டிப்பார்க்கும் சிறு நளினமும் லாவகமும், மென்மையான பொருளில் புதைந்திருக்கும் கடுமையும் அவற்றை அழகாக்குகின்றன. மென்மையே இல்லாத தீவிரமான கடுமையும் கடுமையின் கலப்பே இல்லாத தீவிரமான மென்மையும் வெறுப்பிற்குப் பாத்திரமாகும்.
பண்டைய சீனர்கள் இருமையான பண்புகளுக்குள் உள்ள இந்த முரண்களை லாவகமாகக் கையாள்வதில்தான் மனிதனின் வெற்றி உள்ளது என்று நம்பினார்கள். அழகியல், ஆன்மீகம், இலக்கியம், உணவு, உடலுறவு அனைத்திலும் அவர்கள் ‘சொங்யொங்’ அல்லது ‘நடுநிலை’ என்ற தத்துவத்தைக் கையாண்டார்கள்.
சொங்யொங் என்ற நிலையை அடைய உதவும் வழி அல்லது மார்க்கம் ‘தாவோ’ என்று அழைக்கப்பட்டது. தாவோ என்ற வார்த்தைக்கு வழி என்று அர்த்தம்.
நன்மைகளோ அடைவதற்காகவோ தீமைகளை அழிப்பதற்காகவோ போராடும் கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் கதைகளோடு ஒப்பிடும் போது நவீனச் சீனக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் இருமைகளுக்கிடையில் நடக்கும் இந்த ஓயாத நடுநிலைக்கான தேடலைப் பிரதிபலிக்கின்றன.
டோங் ஜூனின் “பேராசிரியர் சூ ஜின்’ஆன்-இன் முதுமைக் காலம்” குறுநாவலில் சித்தரிக்கப்படும் முதிய தத்துவப் பேராசிரியர்கள் வளர்ந்து தேய்ந்து கொண்டிருக்கும் வயதோடும் அறிவாற்றல் நினைவாற்றல் ஆகியவற்றைச் சமாளித்து நடுநிலை காண முயல்கிறார்கள். அவர்களுடைய வன்மங்களும், சாதனைகளும், சிறுச் சிறு அபத்தங்களும், எழுத்துப் பணியும், பொறாமைகளும், தேடல்களும், வெற்றிகளும், நோய்களும், மரணங்களும் இந்த வளர்ச்சியிலும் தேய்தலிலும் கரைந்து ஒரு வகையான அத்துவைத நிலைக்கு நகர்கின்றன.
மனிதர்களின் ஓயாத அசைவுக்கிடையில் மரணம் என்னும் பேரமைதி நடக்கிறது. அந்தப் பேரமைதி கதைகள் என்னும் ஓயாமல் அசையும் காட்சிகள் பிறக்கக் காரணமாக இருக்கிறது.
ஒன்றில்லாமல் மற்றொன்றுக்கு அர்த்தம் இல்லை. இந்த ஓயாத பரிவர்த்தனையால் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
முரண்பாடுகளின் இந்தக் கொண்டாட்டத்தால் வாழ்க்கை நடக்கிறது.