இத்தாலிய எழுத்தாளர் உம்பெர்ட்டோ எஃகோ பேசியதாக ஓர் உரை இருக்கிறது. அதன் தலைப்பு “எதிர்காலத்தைப் பற்றிப் பொய் சொல்வது வரலாற்றை உருவாக்குகிறது” என்பதாகும்.
புனைவுக்கும் வரலாற்றுக்கும் இடையே சிக்கல் நிறைந்த ஆனால் அத்தியாவசியமான, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. வரலாறு என்பது ஒருவரின் பார்வையில் மட்டும் எழுதப்பட்ட புனைவு என்று வாதிடுவோரும் உண்டு, உதாரணத்துக்கு ஹிட்லரின் நாஜிக்கள் இரண்டாம் உலகப் போரை வென்றிருந்தாலோ, ஆசியா கண்டத்தின் மிகப் பெரும் பகுதியை ஆங்கிலேயேர்களும் பிரஞ்சுக்காரர்களும் கைப்பற்றாமல் டச்சுக்காரர்கள் கைப்பற்றி இருந்தாலோ வரலாறு மிக வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும்
புனைவும் வரலாறும் குறிப்பிட்ட சம்பவங்களின் தொகுப்புத்தான் என்றாலும் சம்பவங்கள் எப்படி அடுக்கப்பட்டு எப்படிப்பட்ட முறைமையில் எப்படிப்பட்ட முக்கியத்துவத்தோடு வாசகர் முன்னால் வைக்கப்படுகின்றன் என்பதில் அவற்றின் அர்த்தமும் மாறுகிறது. உதாரணத்துக்கு, சுப்பிரமணியம் என்பவர் மாவீரன் அலெக்ஸாண்டரைப் பார்க்கப் போகிறார். அந்தச் சந்திப்பு முடிந்து சில மாதங்களுக்குப் பின் அலெக்ஸாண்டர் நோயால் இறக்கிறார். ‘சுப்பிரமணியத்தைச் சந்தித்தப் பிறகு அலெக்ஸாண்டர் செத்துப் போனார்’ என்று எழுதினால் அதில் தவறில்லைதான். ஆனால் இந்தச் சம்பவ அடுக்கின் அர்த்தம் மிக விபரீதமாக மாறிவிடுகிறது.
2000ம் ஆண்டு வெளிவந்த உம்பர்ட்டோ எஃகோவின் ‘பௌடலினோ’ நாவலில் பேரரசர் ஃப்ரெடரிக்கினால் தத்தெடுக்கப்படும் ஏழைப் பையனான கதையின் நாயகன் வரபோகும் போரில் ஃப்ரெடரிக் வெற்றிப் பெற்றதுபோல் கனவு கண்டதாகப் பொய் சொல்கிறான். அவன் பொய்தான் சொல்கிறான் என்று ஃப்ரெடரிக்குக்கும் தெரிகிறது. ஆனால் அவன் உண்மையில் வெற்றிப் பெறுகிறார். அவர் வெற்றி பெற்றதற்குக் காரணம் பின்னால்தான் தெரிய வருகிறது. ஃப்ரெடரிக்கின் போர்க்கூடாரத்தில் அந்தப் பொய்யைச் சொன்னபோது அங்கிருந்து விஷயத்தை ஒட்டுக் கேட்ட எதிரி நாட்டினர் கனவை உண்மையென்று நம்பி அவர்களுடைய படைத்தளபதிகளிடம் சொல்ல கடவுளே ஃப்ரெடரிக்கின் பக்கம் இருப்பதாக நம்பும் எதிரிகள் மனம் தளர்ந்து ஃப்ரெடரிக்கின் படைகளிடம் தோற்றுவிடுவதாக நாவல் தொடர்கிறது.
பேரரசரின் அன்பைப் பெற வேண்டி ஒரு ஏழைப் பையன் சொன்ன பொய் ஐரோப்பாவின் எதிர்கால வரலாற்றை மாற்றியமைத்து விடுகிறது. பொய்யால் பெற்றதுதான் என்றாலும் வெற்றி பொய்யாகிவிடுமா என்பதுதான் பௌடலினோ நாவலின் அடிப்படைக் கேள்வி. வெற்றியின் அடிப்படைக் காரணம் பொய் என்பதால் நாம் அந்த வெற்றியையும் அதன் விளைவுகளையும் நிராகரிக்க முடியுமா?
அதேபோல் வரலாற்றின்படி ஃப்ரெடரிக் நீரில் மூழ்கிச் சாகிறார். ஆனால் பௌடலினோ நாவலில் எஃகோ ஃப்ரெடரிக் ஆர்மீனிய பிரதானி ஒருவரின் கோட்டையில் கொலை செய்ய்பட்டு மரணமடைவதாகச் சொல்கிறார். எஃகோவின் தி நேம் ஆஃப் தி ரோஸ் நாவலைப் போலவே பௌடலினோ நாவலில் விவரிக்கப்படும் ஃப்ரெடரிக்கின் மரணமும் மர்மங்கள் நிறைந்ததாக இருக்கிறது. பூட்டிய அறைக்குள் அந்தக் கொலை நிகழ்கிறது. அதன் காரணங்களை அவ்வளவு எளிதாகத் தீர்க்கமுடியாமல் நாவலின் கதாபாத்திரங்கள் தவிக்கிறார்கள்.
உண்மைகளும் புனைவுகளும் கலந்த நாவலில் உண்மை எதுவென்று கண்டுபிடிக்க முயலும் வாசகர்களின் நிலையும் இதுவேதான்.
ஒரு நாவலிலோ கதையிலோ உள்ள உண்மையைக் கண்டுபிடித்தவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் வாசகர்களையும் விமர்சகர்களையும் (இரண்டும் வேறு வேறு – சத்தியமாக, நம்புங்கள்!) கேலி செய்யும் வகையில் எஃகோ பௌடலினோ நாவலின் முதல் பகுதியை 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த ஐரோப்பிய வரலாற்றின் துல்லியமான விவரங்களால் நிரப்பி உள்ளார். ஆனால் ஃப்ரெடரிக்கின் மரணத்திற்குப் பின்னால் கதாநாயகன் எத்தியோப்பியாவில் இருப்பதாக நெடுங்காலமாக ஐரோப்பியர்களால் நம்பப்பட்டன் ஒரு கிறித்துவ பேரரசுக்கு முன்னெடுத்த பயணத்தை விவரிக்கும்போது சராசரி வாசகர்களால் நம்ப முடியாத முழுக்க முழுக்க கற்பனையான சம்பவங்களாலும் யூனிகார்ன்கள் தேவதைகள் போன்ற உருவங்களாலும் நிறைத்து விடுகிறார். கதாநாயகன் மனிதனும் குதிரையும் கலந்த தேவைதையிடம் காதல் கொள்கிறான். அந்த உருவம் அவனுக்கு உலகம் எப்படிப் படைக்கப்பட்டது என்று ஒரு நீண்ட கதையைச் சொல்கிறது.
உண்மையை ஆராய்ந்தால் நாவலின் இரண்டாம் பகுதியில் எத்தியோப்பியப் பயணத்தின்போது கதாநாயகன் பார்த்த சம்பவங்களும் உருவங்களும் எத்தனைக்கு எத்தனை சந்தேகத்துக்குரியவைகளோ அது போலவே ‘வரலாற்றுப் பூர்வமான’ முதல் பகுதியில் விவரிக்கப்படும் ஐரோப்பிய வரலாற்றுச் சம்பவங்களும் சந்தேகத்துக்குரியவையே என்று வாசகனுக்குப் புலனாகிறது. இந்தச் சந்தேகத்தைப் பலப்படுத்தும் வகையில் எஃகோ வரலாறு தொடர்பாக விவரிக்கும் பகுதிகளிலும் சிறு சிறு பொய்களையும் கற்பனைகளையும் கலந்து விடுகிறார். அதே போல் முழுக்க முழுக்கக் கற்பனை என்று வாசகர்கள் ஒதுக்கக் கூடிய பகுதிகளிலும் உண்மையான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
13ம் நூற்றாண்டிக் ஐரோப்பாவில் எழுதப்பட்ட பல ‘வரலாற்றுப்’ புத்தகங்களின் உள்ளடக்கத்தை நினைவுறுத்தும் வகையில் பௌடலினோ நாவலை பல வகையான உண்மைச் சம்பவங்கள், கற்பனைக் கதைகள், ஆன்மீகப் பேருரைகள், தொன்மக் குறிப்புக்கள், தத்துவம், வானவியல், தாவரவியல், நிலவியல் குறிப்புக்கள், சிறு சிறு துணுக்குகள் என்பவனவற்றின் மொத்தத் தொகுப்பாக எஃகோ எழுதியிருக்கிறார்.
நாவலின் சுமார் பத்துப் பக்கத்து மேல் லத்தீன், அந்தக் காலத்திய இத்தாலிய மொழி, மற்ற ஐரோப்பிய மொழிகளின் வார்த்தைகள் கலந்த ஒரு கலவையான மொழியில் எழுதப்பட்டிருப்பது ரோமப் பேரரசின் ஒற்றை அரசில் இருந்து 13ம் நூற்றாண்டு வாக்கில் சின்னச் சின்ன சுதந்திர நகரங்களாகப் பிளவுப்பட தொடங்கியிருந்த ஐரோப்பிய அரசியலமைப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
திரிக்கப்பட்ட வரலாறு பல வேளைகளில் மாபெரும் வரலாற்றுத் திருப்பங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. எதிரி நாட்டுத் தலைவர்களின் எண்ணங்களைப் பற்றிய தவறான தகவல்கள் போர்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
உம்பர்ட்டோ எஃகோவின் பௌடலினோ நாவல் உண்மைக்குள் இருக்கும் பொய்களைப் பற்றியும் பொய்களுக்குள் இருக்கும் உண்மையைப் பற்றியும் ஆழமான நீண்ட தியானம்.
வாசித்து வருகிறேன்.பல்வேறு மொழிகளின் புனைவிலக்கியத்தை வாசிக்க வைக்க முனைகிறீர்கள்.நன்றி.
LikeLike