அவரவர் செய்த குற்றங்களால் ஏற்படும் விளைவுகளை எகிர்கொள்ளும் மனிதர்களுக்குள் எழும் உளவியல் மாற்றங்களையும் அவற்றின் பலனாக அவர்களின் வாழ்க்கையிலும் உறவுகளிலும் ஏற்படக்கூடிய சவால்களையும் புனைவில் முதன்முதலாக மிகத் துல்லியமாக விவரித்தவர் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதோர் தஸ்தவ்யெஸ்கி. அவருடைய நாவல்களில் விவரிக்கப்படும் குற்றங்கள் தனி மனித விருப்பு வெறுப்புக்களிலிருந்து எழுவதாக தஸ்தவ்யெஸ்கி காட்டினாலும்கூட அக்குற்றங்களின் கனத்தையும் விளைவுகளையும் பழுதுபட்ட அரசியல், ஆன்மீக, பொருளாதார மற்றும் சமூக அமைப்புக்கள் மேலும் சிக்கலானவையாக மாற்றுவதாகவும் காட்டுகிறார்.
தஸ்தவ்யெஸ்கியின் நாவல்களில் விவரிக்கப்படும் கிறிஸ்துவின் மீட்பு வெறும் தனிமனித இரட்சிப்பு அல்ல. அது தனிமனிதர்களோடு சேர்த்து ஒரு முழு சமூகக் கட்டுமானத்துக்கும் இயேசுவால் வழங்கப்படும் இரட்சிப்பாகவும் உயிர்த்தெழுதலாகவுமே செயல்படுகிறது. குற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்நிக்கோவ் அவன் செய்த அர்த்தமற்ற கொலையால் தனக்குள் மட்டும் பிளவுபடவில்லை (ரஷ்ய மொழியில் ரஸ்கோல் என்ற வார்த்தைக்குப் பிளவு என்று பொருள்). அவன் செய்த குற்றம் மொத்த சமூகத்திடமிருந்தே அவனைப் பிளவுபடுத்தித் தனிமையாக்குகிறது.
வில்லியம் ஃபோல்க்னரின் நாவல்களை அமெரிக்க இலக்கியத்தில் தெற்கத்திய காத்திக் வகையைச் சேர்ந்தவை என்கிறார்கள். ஆளுமையில் ஏதேனும் முக்கியக் குறையுடைய, விசித்திரமான கதாபாத்திரங்களைக் கொண்டிருப்பதும் வறுமை, தனிமைப்படுத்தப்படுதல், குற்றம், வன்முறையால் இக்கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுவதும் இதன் விளைவால் அவர்கள் விநோதமான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டு அவர்களுக்கு ஏற்படும் சீர்கேடுகளும் தெற்கத்திய காத்திக் இலக்கியத்தின் முக்கிய இலக்கணங்கள். கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சீரழிவுக்கு உருவகமாக ஃபோல்க்னரின் பெரும்பான்மையான நாவல்களில் வரும் கதைகளும் சீரழிவுக்கு உட்பட்ட சமுதாயச் சூழல்களில் நடந்தேறுகின்றன.
1929ல் வெளிவந்த தி சவுண்ட் அண்ட் தி ஃப்யூரி நாவல் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்து சீரழிந்து போன காம்ஸன் குடும்பத்தாரின் கதையைச் சொல்கிறது. நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலில் முறையே (1) மூளை வளர்ச்சியில்லாத மகனின் பார்வையிலும், (2) திருமணமான தனது சகோதரி பல்வேறு ஆடவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு கள்ளக் காதலனோடு ஒரு மகளையும் பெற்றுக் கணவரால் துரத்தப்படுவதைப் பொறுக்க முடியாமல் நீரில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ளும் ஹார்வர்ட் பல்கலைக்.கழக மாணவனான வேறொரு மகனின் பார்வையிலும் (3) பணத்துக்காக பல்வேறு தந்திரங்களைக் கையாண்டு குடும்பத்தாருக்கே துரோகம் செய்யத் துணிந்தாலும் கடைசியில் தோற்றுப் போகும் மற்றொரு மகனின் பார்வையிலும், (4) ஒரு காலத்தில் சமுதாயத்தின் தூண்களாக இருந்த தன் எஜமானர்கள் சீரழிந்து போவதைக் கண்டு வேதனைப்படும் கறுப்பின வேலைக்காரியின் பார்வையிலும் எழுதப்பட்டிருக்கிறது.
சாங்டுவரி, அப்சலோம்! அப்சலோம்! அஸ் ஐ லே டையிங் போன்ற அவருடைய மற்ற புகழ்ப்பெற்ற நாவல்களைப் போலவே ஒரு காலத்தில் சிறப்பாக வாழ்ந்த மனிதர்களின் சீரழிவை ஃபோல்க்னர் தி சவுண்ட் அண்ட் தி ஃப்யூரி நாவலில் மிகத் துல்லியமாகச் செதுக்கப்பட்ட உரையாடல்களின் வழியாகவும், கதாபாத்திரங்களின் உள்ளே நடக்கும் நுணுக்கமான மாற்றங்களின் வழியாகவும் எடுத்துக் காட்டுகிறார். அவரது சமகாலத்தில் எழுதிய ஹெமிங்வேயின் மிக எளிய உரைநடையை ஒப்புநோக்க ஃபோல்க்னரின் எழுத்துநடை நீளமான வாக்கியங்கள் உள்ளதாகவும், சிக்கலான கட்டுமானமுள்ளதாகவும் ஒரே நேர்க்கோட்டில் கதைகள் சொல்லப்படாமல் காலத்தால் கதை முன்னும் பின்னும் நகர்ந்து வாசகரைக் குழப்புவதாகவும் விமர்சனம் உள்ளது.
ஆனால் கதாபாத்திரங்களின்.உளவியல் நகர்வுகளைத் தஸ்தவ்யெஸ்கியைப் போலவே உரையாடல்கள் கதாபாத்திரங்களின் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்களை விவரிப்பது போன்ற நவீன நாவல் உத்திகளால் அசாத்தியமான கூர்மையோடு விவரிக்கும் ஃபோல்க்னர் நாவலின் கதை கட்டுமானத்தையே கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டமைத்திருப்பது அவர் நாவல்களைக் கூர்ந்து வாசிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்வார்கள். தி சவுண்ட் அண்ட் தி ஃப்யூரி நாவலில் மூளை வளர்ச்சியில்லாத மகனின் பார்வையில் சொல்லப்படும் முதல் பகுதியும் தன் சகோதரி தூய்மையில்லாமல் இருக்கிறாளே என்று தவிக்கும் அடுத்த சகோதரனின் பார்வையில் சொல்லப்படும் இரண்டாவது பகுதியும் கறுப்பின வேலைக்காரியின் பார்வையில் சொல்லப்படும் இறுதிப் பகுதியும் கதைகூறலில் இத்தகைய நுணுக்கமான வேற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன.
19ம் நூற்றாண்டில் தஸ்தவ்யெஸ்கி பெரும் தீவிரத்தோடு முன்னெடுத்த நவீன உளவியல் நாவல் வடிவத்தை ஃபோல்க்னர் மேலும் முன் நகர்த்தியதாகத் துணிந்தே சொல்லலாம்.
1949ல் ஃபோல்க்னருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது அதற்குக் காரணமாக நோபல் பரிசுக் கமிட்டியார் அவர் நவீன அமெரிக்க நாவல் வடிவத்துக்குச் செய்த மாபெரும் பங்களிப்புக்குப் பரிசு வழங்கப்படுவதாகச் சொன்னதை இங்கு நினைவுகூரலாம்.
மிகச் சிறந்த நாவலாசிரியராகக் கருதப்பட்ட ஃபோல்க்னர் தலைசிறந்த சிறுகதை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். பெருமைவாய்ந்த தெற்கத்திய குடும்பத்தில் பிறந்து தனிப்பெண்ணாக இருப்பதால் ஊராரின் புறக்கணிப்புக்கும் நுணுக்கமான மனவியல் சித்திரவதைகளுக்கும் ஆளாகிச் செத்துப் போகும் எமிலி என்ற கிழவிக்க ஊர் ஏற்பாடு செய்யும் இறுதிச் சடங்குகளை விவரிக்கும் ‘எ ரோஸ் ஃப்ப்ர் எமிலி’ என்ற கதை ஆங்கிலச் சிறுகதைகளில் தலைசிறந்தவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எமிலியின் வீட்டிலிருந்து வருன் துர்நாற்றத்துக்கு ஃபோல்க்னர் கூறும் காரணம் எந்த வாசகரையும் உலுக்கக் கூடியது.
தி சவுண்ட் அண்ட் தி ஃப்யூரி 20ம் நூற்றண்டில் வெளிவந்த மிகச் சிறந்த 100 நாவல்களில் ஆறாவது இடத்தை இன்றுவரை தக்க வைத்திருக்கிறது.