எல்லா வாசிப்பு, எழுத்து மற்றும் ஜோதிடம் தொடர்பான பயிற்சிப் பட்டறைகளிலும் வேத வாக்காக வழங்கப்படும் அறிவுரை அந்தந்தத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் நிறைய அல்லது தீவிரமாக வாசிக்க வேண்டும் என்பது.
எண்ணிக்கையே தீவிரம் என்று மிகப் பரவலாகக் கருதப்படுவதால் இந்த அறிவுரையைக் கேட்பவர்கள் அந்தத் தருணத்தில் பேனாக்களை மேசைமேல் வைத்துவிட்டு அறிவுரை வழங்குபவரை லட்சிய உணர்வோடு வெறித்துப் பார்ப்பார்கள்.
ஆனால் நிறைய வாசித்தலுக்கும் தீவிரமாக வாசித்தலுக்கும் தெளிவான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக நமக்கு மிகப் பரிச்சயமான மிருகம் நிறைய வாசித்தலே.
நிறைய வாசித்தல் என்பது தெளிவான இலக்குகள் உள்ளதுபோல் தோன்றினாலும் அது உண்மையில் இலக்கில்லாதது. குழந்தைகளைக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் நிறைய வாசிப்பது தெரியும். நூலகங்களுக்குக் குழந்தைகளோடு போகும் பெற்றோர் எட்டிலிருந்து பத்துக் கதைப் புத்தகங்கள்வரைகூட இரவல் வாங்குவார்கள். எல்லாப் புத்தகங்களையும் குழந்தை ஓரிரு நாட்களுக்குள் படித்துவிட்டுப் பெற்றோரின் முகத்தைப் பார்க்கும். சிறந்த குழந்தை எழுத்தாளராவதற்கு மிகுந்த திறமையும் பூர்வ ஜென்ம.புண்ணியமும் வேண்டும்.
இதுபோல் நிறைய வாசிப்பவர்கள் எவ்வித திட்டமும் இன்றியே பல நூல்களைக் கடந்து போகிறார்கள். ஏதோ ஒரு மாய மந்திர உத்தியால் தாங்கள் படிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கமும் கட்டுமானமும் தமக்குள் இறங்கிவிடுவதாக அவர்கள் எண்ணக் கூடும். ஆனால் இது யாரேனும் ஒருவர் கை வைத்து ஆசீர்வதித்தால் படிக்காமலேயே பரீட்சையில் தேறிவிடுவோம்.என்று நம்புவதற்கு ஒப்பானது.
ஆனால் இது தீவிரமான வாசிப்பு அல்ல. தீவிரமான வாசிப்பு இரு வேறு தளங்களில் பயணிப்பது. ஒரு தளம் ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து ஊன்றி வாசிப்பது. அடுத்த தளம் அந்த இலக்கியம் பிறந்த அரசியல்.மற்றும் கலாச்சாரச் சூழ்நிலையை, ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பின்னணி, இலக்கிய விமர்சனப் போக்கு ஆகிய அமைத்தையும் அறிந்து கொள்வது.
ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் சிதந்த நூல்களை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதில் பலருக்குக் குழப்பம் ஏற்படக் கூடும். இத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் முதலில் நடைமுறையில் உள்ள பட்டியல்களைத் தாண்டியும் போக வேண்டும். பட்டியல்கள் உண்மையில் அவ்வளவாக உதவாதவை என்பது என் கருத்து. பட்டியல்களைத் தயாரிப்பவர்கள் பல சிறப்புக் காரணங்களால் அவற்றைத் தயாரிக்கிறார்கள். உதாரணத்துக்கு நடைமுறையில் உள்ள புனைவு குறித்த கருத்துக்களின் – கதை என்றால் இப்படி இருக்க வேண்டும், வடிவம் இப்படி இருக்க வேண்டும் என்ற சமகால வரையறைகளின் – அடிப்படையில் இப்பட்டியல்கள் அமையலாம். இந்தப் பட்டியல்கள் வழிகாட்டிகளாக இருந்த போதும் குறிப்பிட்ட இலக்கியத்தின் சிறப்பான நகர்வுகளைப் பற்றிய அறிவை அவை நமக்குத் தருமா என்பது சந்தேகமே.
ஒரு குறிப்பிட்ட இலக்கியத்துக்குள் குதிக்கும் முன்னால் அந்த இலக்கியத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறந்த அறிமுகத்தை நாம்.வாசித்துவிடுவது அவசியம். இது ஒரு நகரத்துக்குள் நுழையுமுன் அதன் முழு வரைபடத்தையும் பார்த்துவிடுவதற்கு ஒப்பானது. ஒரு நகரத்தில் உள்ள முக்கிய இடங்கள், உல்லாசச் சாத்தியங்கள், கடைவீதிகள், தவிர்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றை முழுவதும் அறிந்து கொள்ளலாம். இப்படித் தெரிந்து கொள்வது ஏன் முக்கியமென்றால் பாரீஸ் என்றால் எய்ஃபெல் கோபுரம் மட்டும்தான் என்றும் லண்டன் என்றால் பிக் பென் கடிகாரம் மட்டும்தான் என்றும் ஊருக்கு வந்து பெருமை பேசிக் கொள்ளும் மேம்ப்போக்கான புத்தியைத் தவிர்க்கும்.
ஜெர்மன் இலக்கியம் என்றும், லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றும் பேசும் பலரிடம் இந்த மேம்போக்கான புத்தியே இருக்கிறது.
மேலும் குறிப்பிட்ட நகரத்துக்குப் போகும்போது நாம் புகழ்ப்பெற்ற இடங்களை மட்டும் போய்ப் பார்ப்பதில்லை. சில உல்லாச இடங்களுக்கும் போகிறோம். சிலர் இரவு விடுதிகளையும், சிவப்பு விளக்குப் பகுதிகளையும் (சும்மா தெரிந்த் கொள்வதற்காகத்தான்) போய்ப் பார்ப்பார்கள். இது எல்லாமும் கலந்ததுதான் ஒரு நகரம். அதுபோலவே ஒரு இலக்கியத்தின் முழு வீச்சை தெரிந்த் கொள்ள வேண்டும் என்றால் அதன் இலக்கியத்தனமான நூல்களை மட்டுமல்லாமல் சில முக்கிய பொழுதுபோக்கு இலக்கியக்களையும் சில முக்கிய மோசமான படைப்புக்களையும் வாசிப்பது அவசியமாகும்.
மோசமான படைப்புக்களே அவற்றின் சமகாலத்தில் வந்த சிறந்த படைப்புக்களின் தரத்தைப் பல நேரங்களில் நிலைநாட்ட உதவியாக இருக்கின்றன.
ஆனால் ஓர் எழுத்தாளனுக்கு இந்தத் தளத்தில் மட்டும் பயணிப்பது போதாது. அந்தக் காலக் கட்டத்தில் வெளிவந்த அரசியல், ஆன்மீக், பொருளாதார, கலை, ஓவிய, வரலாற்று நகர்வுகளை அறிந்து கொள்வதும் தீவிர வாசிப்பின் மிக முக்கியமான பகுதியாகிறது. ஆனால் இதற்கு மிகுந்த பொறுமையும் உழைப்பும் தேவைப்படுவதால் யாரும் இந்த வாசிப்பில் அக்கறை காட்டுவதில்லை. இந்தக் காரணத்தால் பலரது வாசிப்பு முடமாகவே இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட இலக்கியத்தின் படைப்புக்கள் பிறந்த சூழ்நிலையை அறிந்து கொள்வது அந்தப் படைப்புக்களின் உள்ளார்ந்த நகர்வுகளையும் அவற்றின் வடிவத்திற்கு அடிப்படையாக இருக்கும் காரணங்களையும் அறிந்த் கொள்ள உதவுகிறது. இந்த அறிதல் நமது சொந்த வாசிப்பையும் எழுத்தையும் மிகவும் வளமாக்க உதவும்.
தலைசிறந்த எழுத்தாளர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களில் மிகப் பெரும் பான்மையினர் நான் கூறிய இரு தளங்களிலும் பயணிப்பது தெளிவாக விளங்கும். இத்தகைய எழுத்தாளர்கள் புனைவுகள் எழுதும் அதே நேரத்தில் புனைவைத் தாண்டியும் நகர்ந்து வரலாறு, ஆன்மீகம், தத்துவம், சினிமா, இசை என்று பல துறைகளை ஊன்றிக் கவனிக்கிறார்கள். அவற்றைப் பற்றி வாசிக்கவும், எழுதவும் நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள்.
பலர் இந்நாளைய எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புக்களின் வீச்சைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்களின் மிகப் பெரிய வெற்றிக்குப் பின்னால் இந்த உழைப்பு இருக்கிறது.
