24 ஏப்ரல் 2015 வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் 1992லிருந்து 2012 வரை வருடத்தில் ஒரு முறையாவது கவிதை வாசித்த மொத்த அமெரிக்கர்களின்எண்ணிக்கை பாதிக்கும் மேல் 17%லிருந்து 6,7%க்குக் குறைந்து போனதாகக் காட்டுகின்றன.
இந்தப் புள்ளிவிவரங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இசை, நாடகம், நடனம், ஓவியம் முதலான கலைகளில் அமெரிக்கர்களின் ஈடுபாடு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து திரட்டப்பட்டவை. கருத்துக் கணிப்பின்படி கவிதை வாசிப்பில் மட்டுமே இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. ஒப்பு நோக்க அமெரிக்கர்கள் ஜாஸ் இசை, நடனம், நாவல் வாசிப்பது, இசைக்கருவி, பாட்டுப் பாடுவது ஆகியவற்றின் மீது கொண்டிருந்த ஈடுபாடு பலமாகவே இருந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 45% அமெரிக்கர்கள் ஒரு வருடத்தில் ஒரு முறையாவது நாவலை வாசித்ததாகச் சொல்லி இருந்தார்கள்.
2004லிருந்து 2015 வரையில் கூகுளில் கவிதைகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கையும் 80% குறைந்திருந்தது.
அமெரிக்கர்கள் அரசாங்க கணக்கெடுப்புக்கு அஞ்சித் தங்கள் கவிதை வாசிப்பை மறைக்க வேண்டிய எந்தக் காரணமும் இல்லாத பட்சத்தில் இந்த எண்ணிக்கைகள் ஆங்கிலக் கவிதைகள் குறைவாகவே வாசிக்கப்படுவதாகக் காட்டுகின்றன.
நாவல் வாசிப்பைவிட கவிதை வாசிப்பு சுலபம் போல் தோன்றுவதாலும், சமூக வலைத்தளங்களில் நாவல்களைவிட பல நூறு மடங்கு கவிதைகள் தினமும் பதிவேற்றப்படுவதாலும் அமெரிக்கக் கவிதை வாசகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சி அதிர்ச்சியளிக்கக் கூடியதே.
தமிழில் இத்தகைய புள்ளிவிவரங்கள் உண்டா என்று தெரியவில்லை. ஒரு வேளை தமிழில் கவிதை வாசகர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் மிகவும் உயர்ந்திருக்கவும் கூடும்.
ஆனால் அமெரிக்காவில் நடந்தது போன்ற கணக்கெடுப்புக்களைத் தவிர மற்ற வழிகளாலும் கவிதை வாசிப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம்.
முதலாவதாக, சமீபத்திய கவிதைகள் வெகுஜன ஊடகங்களில் மேற்கோள் காட்டப்படுகின்றனவா என்ற கேள்வி. அச்சிலும் சமூக ஊடகங்களிலும் தினமும் நிறைய கவிதைகள் வெளிவருகின்றன என்பது உண்மைதான். ஆனால் இவற்றில் எத்தனைக் கவிதைகள் நாவல், சிறுகதை போன்ற மற்ற இலக்கிய வடிவங்களிலும், சினிமாவிலும் மற்ற வெகுஜன ஊடகங்களிலும் மேற்கோள் காட்டப்படுகின்றன என்பது நல்ல கேள்வி. உண்மையில் பாரதியார் போன்ற மிகச் சிலக் கவிஞர்களின் குறிப்புட்ட மிகச் சில கவிதை வரிகள் தவிர நாவல்களும் நாவல் கதாபாத்திரங்களும் வெகுஜன ஊடகங்களில் மேற்கோள் காட்டப்படும் அளவுக்கோ எடுத்தாளப்படும் அளவுக்கோ கவிதைகள் மேற்கோள் காட்டப்படுவதில்லை எனலாம். நிச்சயமாகச் சினிமா மேற்கோள் காட்டப்படும் அளவுக்குக் கவிதைகள் மேற்கோள் காட்டப்படுவதில்லை. உலகிலேயே போலந்து, உக்ரைன், ரஷியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் கவிதைகள் அவ்வளவு அதிகமாக மேற்கோள் காட்டப்படுவதில்லை.
மிகக் குறைந்த வரிகளே உள்ள ஒரு இலக்கிய வடிவத்தை வாசகர்கள் நினைத்தால் சுலபமாக மேற்கோள் காட்டலாம்தான். ஆனால் பல கவிதைகள் மனதில் ஒட்டாமல் போவதற்கு என்ன காரணம் என்று ஆராய்வதும் முக்கியம்.
புலன்களை உலுக்குவதாகவும், புதிய சிந்தனைச் சாத்தியங்களை உள்ளடக்கியதாகவும் உள்ள படைப்புக்களே வாசகர்களின் கவனத்தில் ஒட்டிக் கொள்ளும் என்கிற பட்சத்தில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொட்டி எழுதப்படும் கவிதைகள் ஒட்டாமல் போவதற்கு அவை பெரும்பாலும் ஒன்றைப்போல் ஒன்று இருப்பதும் காரணமாக இருக்கலாம். இதே காரணத்தால்தான் சமீபத்தில் எழுதப்பட்ட பல கவிதைகளை எடுத்துப் போட்டால் இது யார் எழுதியது என்று சொல்ல வாசகர்கள் பெரும்பாலும் தவித்துப் போகிறார்கள்.
இலக்கியப் புனைவு வடிவங்கள் அத்தனையிலும் கவிதைகளே போலிகள் உருவாக்க மிகவும் ஒத்தாசை செய்கின்றன. கொஞ்சம் சந்தமும், புத்திசாலித்தனமான சில படிமங்கள், உவமைகள், உருவகங்கள், வார்த்தை விளையாட்டுக்கள் என்று சேர்த்துப் போட்டு யாராலும் சிறுகதையோ நாவலோ உருவாக்கிவிட முடியாது. ஆனால் இவற்றையெல்லாம் கலந்து எழுதி அது கவிதை என்று மற்றவர்களை நம்ப வைத்துவிட முடியும். பல நேரங்களில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் முடியும்.
இந்த நிலைமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, நாகரிகம் கருதி மோசமான கவிதைகளை மோசமான கவிதைகள் என்று அழைக்கத் தயங்கும் பொதுபுத்தி. இரண்டு, காதல், கடவுள், நட்பு, பாசம் என்ற விஷயங்களைப் பற்றி யாரேனும் கொஞ்சம் எதுகை மோனையோடு (’மாடர்ன்’ கவிதை என்றால் கொஞ்சம் உரைநடைத்தனமான மொழியில்) யாராவது எழுதிவிட்டால் அதைப் பாராட்டி வைக்கும் மூட நம்பிக்கை (இந்த இரண்டு காரணங்களும் ஒன்றல்ல).
அதைவிட நீளமான பல இலக்கிய வடிவங்களைப் போலவே கவிதையும் தீவிரமான சிந்தனையையும், அகண்ட வாசிப்பையும், காத்திரமான உழைப்பையும், எழுதிய முதல் பிரதியைப் பல முறை மாற்றி எழுதுவதையும் கோருவது. இதைக் கவிஞர்கள் உணர்ந்தால் ஒரு வேளை கவிதைகள் வாசகர்களின் மனதிலும் ஒட்டக்கூடும். கவிதை வாசிப்பும் உயரக் கூடும்.
ஆனால் ஒரு கேள்வி மிச்சமிருக்கிறது. இவ்வளவு வீழ்ச்சிக்கு மத்தியிலும் கவிதை ஏன் இன்னும் சாகவில்லை என்ற கேள்விதான். இதற்குப் பல வழிகளில் பதில் சொல்லலாம்தான்.
இன்னமும்கூட மிகச் சிறந்த கவிதைகள் அவ்வப்போது வந்து கொண்டிருப்பதும்கூட கவிதை சாகாததற்குக் காரணமாகவும் இருக்கலாம்.