பல வருடங்களுக்கு முன்னால் என் வீட்டில் இருக்கும் நூல்களைப் பார்த்த போது எனக்கு ஓர் உண்மை விளங்க ஆரம்பித்தது. என்னிடமிருந்த நூல்களில் பல நூல்கள் மற்றவர்களின் பரிந்துரையில் நான் வாசித்தது. யாரேனும் நலன்விரும்பி நான் எழுத்துத் துறையில் போதிய பாதுகாப்புகளைச் செய்து கொள்ளாமல் காலடி எடுத்து வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு ‘இந்திந்த நூல்களை நிச்சயம் வாசியுங்கள்’ என்பார். இந்த நூல்களை வாசிப்பது எழுத்துத் துறையில் என்னை ஏதோ ஒரு வகையில் பாதுகாக்கும் என்று அவர் கருதியிருக்கலாம். குறைந்தபட்சம் என்னை அறிவாளி என்று காட்டிக் கொள்ள இந்த நூல்கள் என்னிடம் இருப்பது உதவக்கூடும் என்றுகூட அவர் நினைத்திருக்கலாம். (இந்தக் கடைசி கருத்தின் நம்பகத்தன்மை ஆராய்ச்சிக்குட்பட்டது. இந்நூல்களை வாசித்ததால் என் வளர்ந்த து என் அறிவா அல்லது போலியான பாதுகாப்பு உணர்வு + போலியான சுய மதிப்புத்தானா என்று வாரக்கணக்கில் விவாதிக்கலாம்].
ஆனால் எல்லோரும் வாசித்துப் பரிந்துரைத்த நூல்களை வாசித்த பின் எனக்கு இரு வேறு துல்லியமான எண்ணங்கள் தோன்றின:
- பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் யாவும் பல நூறு பேர்கள் வாசித்துப் பரவலான கவனம் பெற்று பல நூறு கட்டுரைகள் மற்றும் முகநூல் பதிவுகளுக்குக் காரணமாக இருக்கும் நூல்கள். இத்தனை பேரின் முன்முடிவுகளின் பின்னால் இந்நூல்களை வாசிக்கும்போது நான் இத்தனைப் பேரின் அபிப்பிராயத்தை வாசித்தேனே அன்றி உண்மையில் அந்தந்த நூலை முன்முடிவுகளற்ற மனநிலையில் வாசிக்கவில்லை;
- பல ஆயிரம் தடவை ஜீரணித்து முடிக்கப்பட்ட நூல்களை வாசித்து முடித்தபின் எனக்கு அவற்றைப் போலவே சிந்திக்கத் தோன்றியதே அன்றி, எனக்கென்ற தனித்துவமான சிந்தனை இந்தப் புனைவு நூல்களை வாசித்ததால் தோன்றவில்லை.
அம்பர்ட்டோ எஃகோ ‘எதிர் நூலகம்’ என்ற ஒரு கருத்தை முன்வைக்கிறார். அதாவது, எல்லோரையும் போல் எல்லோருக்கும் தெரிந்த நூல்களைச் சேகரிக்காமல், யாரும் வாசிக்காத புனைவு மற்றும் அபுனைவு நூல்களைச் சேகரித்தல். யாரும் அறியாத துறைகளில், புனைவு இலக்கியங்கள்மீது நாம் செலுத்தும் கவனமே புதுமை வாய்ந்த படைப்புக்களை உருவாக்க உதவும் என்பது எஃகோவின் கருத்து. முதலாவதாக, மற்ற எழுத்தாளர்கள் கவனம் செலுத்தாத துறைகள் – உ.தா. அகழ்வாராய்ச்சி, பழைய செப்பேடுகள், வரலாறு, மொழியியல் போன்றவை – புனைவு உருவாக்கத்தைச் செழிப்பாக்கிப் புதிய திசைகளில் பயணிக்கச் செய்யும். இரண்டு, யாரும் வாசிக்காத புனைவுகளை வாசிப்பது மட்டுமே அரைத்த மாவை மீண்டும் மீண்டும் அரைக்கும் நிலையைத் தவிர்த்துப் புனைவில் பல்வேறு புதிய சாத்தியங்களை ஏற்படுத்தித் தரும்.
எஃகோவின் மிகப் புகழ்பெற்ற நாவல்களான தி நேம் ஆஃப் தி ரோஸ் மற்றும் ஃபோகல்ட்ஸ் பெண்டுலம் இரண்டின் வரிகளின் மற்ற நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்கோள்கள் உள்ளதாக விமர்சகர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். எஃகோவின் நூல்களில் மேற்கோள் காட்டப்படும் நூல்களின் பட்டியல் தனிப் புத்தகமாகவே வந்திருக்கிறது. எஃகோ வீட்டில் இருக்கும் நூலகத்தில் 30,000 நூல்கள் உள்ளதாக அவரே பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார்.
எஃகோவைவிட முராகாமி செற்செட்டு மிகுந்தவர். (எஃகோவின் எழுத்துநடை பாம்பு போல் நெளிந்து நீண்டிப்பதாக இத்தாலியில் ஒரு விமர்சனம் கூட உண்டு. ஆனால் அவர் எழுத்தாளராக மட்டுமில்லாமல் பேராசிரியராகவும் இருப்பதால் இத்தாலியர்கள் எஃகோவிற்கு நிறைய சலுகைகளைத் தருகிறார்கள்).
முராகாமி கேட்கிறார்: எல்லோரும் படிக்கும் நூல்களை நானும் படைத்தால் நான் எப்படி புதுமையான படைப்புக்களை உருவாக்குவது?
முராகாமியின் இந்தக் கேள்வி எஃகோவின் எதிர் நூலகக் கருத்துக்கு நெருக்கமானது. புகழ்ப்பெற்ற எழுத்தாளர்கள் முக்கியமான நூல்கள் என்று தாங்கள் கருதும் நூல்களில் பட்டியலைப் பார்த்தால் நம்மில் யாருமே படிக்காத நூல்கள் மறுபடியும் மறுபடியும் தென்படுவதை நாம் காணலாம். உதாரணத்துக்கு ஹெர்மன் மெல்விலின் மோபி டிக், டிரிஸ்டம் சாண்டி என்ற ஆங்கில நாவல், டேனியல் டிஃபோவின் ராபின்சன் க்ரூஸோ, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சனின் நாவல்கள் – இப்படிப் பல. இந்த நூல்கள் எவையேனும் பொதுவான வாசகர்களால் அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கின்றனவா என்றால் பதில் இல்லை என்றுதான் வரும்.
அப்படியென்றால் நல்ல ‘கிளாசிக்’ நூல்களைப் படிக்கக் கூடாதா என்று பலர் என்னுடன் சண்டைக்கு வரலாம். அப்படிச் சொல்வது என் எண்ணமல்ல. வெவ்வேறு நோக்கங்களுக்கு வெவ்வேறு நூல்கள் என்பதுதான் என் நிலைப்பாடு. இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நிச்சயமாக செவ்விலக்கியங்களைப் படிக்கத்தான் வேண்டும். ஆனால் எழுத்தாளராக இந்த நூல்கள் கொஞ்சம் கூட உதவாது.
அதற்கு நமக்குத் தேவை வீட்டிலேயே ஒரு எதிர் நூலகம்.