நாலாந்தர இலக்கியத்தைப் பற்றி விவாதம் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் ஆங்கிலம் முதலான மேற்கத்திய மொழிகளில் வருடா வருடம் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்து நிறைய விற்கும் ரோமான்ஸ் நாவல்களை ஒரு பார்வை பார்த்துவிடுவது நல்லது.
அடையவே முடியாத என்று எல்லோரும் கருதும் அழகான இளம் பெண்ணும் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுக்கும் மிகக் கட்டுமஸ்தான ஆணும் காதல் வயப்படுவதையும், அந்தக் காதலால் விளையும் சவால்களையும் சொல்வதுதான் இன்றைய மேற்கத்திய ல்ரோமான்ஸ் நாவல்களின் அடிப்படை உள்ளடக்கம். கதையைச் சுவாரஸ்யமாக்குவதற்காக அடைய முடியாத பெண் இளவரசியாகவோ, மற்றவனின் மனைவியாகவோ, பெரும் வியாபார நிறுவனத்தின் நிர்வாகியாகவோ இருக்கலாம். அதுபோலவே அடங்க மறுக்கும் ஆண் கடற்கொள்ளையன், திருடன், குடியிலும் கும்மாளத்திலும் வாழ்க்கையைக் கடத்தும் பெரும் பணக்கார இளைஞன் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஜேன் ஆஸ்டனுக்குப் பிறகு 1921ல் நவீன ஐரோப்பிய ரோமான்ஸ் நாவல்களைத் தொடக்கி வைத்தவர் என்று ஜார்ஜெட் ஹேயர் என்ற பெண் எழுத்தாளர் சொல்லப்படுகிறார்.
2016ல் பிபிசி நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்று இத்தகை ரோமான்ஸ் நாவலகள் அறிவியல் புனைவு, மர்மம் மற்றும் ‘இலக்கியத் தரம் வாய்ந்த’ நாவல்களைவிட அதிகம் விற்பதாகச் சொல்கிறது. இதைக் கவனிக்கும்போது அமெஸான் கிண்டலின் வியாபார உத்தி ஓரளவுக்குப் பொருளாதார அடிப்படைகள் கொண்டதுதான் என்று தோன்றுகிறது.
ரோமான்ஸ் நாவல்கள் எப்படித் தோன்றின? ரோமர்கள் ஐரோப்பியாவை ஒரே குடையின் கீழ் ஆண்ட போது அவர்கள் பேசிய லத்தீன் மொழி பிரான்சு, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இலக்கண, உச்சரிப்புப் பேதங்களோடு பேசப்பட்டது. ரோமப் பேரரசு முடிவடைந்த பிறகு இந்த நாடுகளில் பேசப்பட்ட லத்தீன் கலப்பு மொழியில் இலக்கியங்கள் உருவாகின. இப்படி உருவான ஆரம்பக் காலப் படைப்புக்கள் பெரும்பாலும் கவிதை நடையில் எழுதப்பட்டவையாக, அலெக்ஸாண்டர், ஆர்தர், பிரான்சின் சார்லஸ் மன்னர் மற்றும் இவர்களுடைய அவையில் இருந்த பெரும் போர்வீரர்களின் வீரதீரச் செயல்களைச் சொல்பவையாக இருந்தன. அந்நாளைய வழக்கத்தின்படி இம்மன்னர்களும், அவர்களுடைய வீரர்களும் அவரவர் சமூக நிலைக்கு ஏற்றபடி யாரேனும் தூரத்து அரண்மனையில் இருக்கும் ஒரு அழகிய, நற்குணமுள்ள பெண்ணுக்காக ஏங்குவார்கள். அவளுடைய நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ள செய்வதற்குக் கடினமான சாகசச் செயல்களைச் செய்வார்கள். இந்தச் சாகசச் செயல்கள் பல நேரங்களில் அமானுஷ்ய அனுபவங்கள் நிறைந்தவையாக இருந்தன (உதாரணம்: டிராகன்களைச் சாகடிப்பது).
இப்படி இவர்கள் செய்த செயல்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பாக இந்த ஆரம்பக் கால ஐரோப்பிய இலக்கியங்கள் இருந்தன. ரோமர்கள் பயன்படுத்திய லத்தீன் மொழியிலிருந்து பிறந்த மொழியில் எழுதப்பட்டதால் இவை ரோமான்ஸ் இலக்கியங்கள் என்றழைக்கப்பட்டன.
பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி ஐரோப்பாவில் வெளிவந்த நாவல்கள் இதே வகையான கதைகளை நவீனமயமாக்கின. தூரத்து தேசங்களிலும், மர்மமான சூழ்நிலைகளிலும் கதாபாத்திரங்கள் சந்திக்கும் அமானுஷ்யங்களைப் பற்றியும், யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட பயங்கர மர்மங்களைப் பற்றியும் சர் வால்டர் ஸ்காட் போன்றவர்களால் நாவல்கள் எழுதப்பட்டன. அதே சமயம், ஜேன் ஆஸ்டன் போன்றவர்கள் அடைய முடியாத பெண், அடங்க மறுக்கும் ஆடவன் என்று அவர்கள் வழியில் காதல் கதைகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த நாவல்கள் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுக் காதல் வயப்பட்ட பெண்களின் பார்வையில் கதைகளை முன்னெடுத்துச் சென்றன.
சாகசம், காதல் என்ற இந்த இரு வேறு வகையான நாவல்கள் அனைத்தும் தமது ஐரோப்பிய இலக்கிய மூதாதைகளின் பெயரால் ரோமான்ஸ் நாவல்கள் என்றே அழைக்கப்பட்டன. ஜேன் ஆஸ்டன் போன்றவர்கள் எழுதிய காத்திக் வகையான நாவல்களான நார்தேஞ்சர் அபி, சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிடி ஆகியவற்றில் சாகசமும் காதலும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். இதே காலக் கட்டத்தில் முன்னர் இத்தகைய ரோமான்ஸ் கதைகளில் இலை மறைவு காய் மறைவாக இருந்த காமம் மெல்ல மெல்ல இன்னும் தெளிவாக விவரிக்கப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டில் பார்பரா கார்ட்லேண்ட், நோரா ராபர்ட்ஸ், சோஃபி கின்ஸெலா போன்றோர் மிகப் பழைய வாய்ந்த இந்த ரோமான்ஸ் நாவல் இலக்கியத்தை முன் நகர்த்திச் சென்றவர்களில் முக்கியமானவர்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வாசக அபிமானிகள் லட்சக்கணக்கானவர்கள்.
இன்றுவரை ரோமான்ஸ் நாவல் நல்ல லாபகரமான வடிவமாகவே இருக்கிறது.