போர் என்பது அடிப்படையில் மாபெரும் சிதைவு. போரால் நாடுகள் நகரங்கள் மட்டுமன்றி மனித உறவுகளும், குடும்பங்களும் சிதைகின்றன. ஆனால் இத்தனைச் சிதைவுகளின் மிக நேரடியான வெளிப்பாடாகவும் குறியீடாகவும் போர் மனித உடல்களைச் சிதைக்கிறது. நவீனப் போர்முறைகள் மனித உடல்களை பல விதமாகச் சிதைக்கக் கூடிய தொழில்நுட்பச் சாத்தியங்களை உடையவை. பல்லாயிரம் மனிதர்களின் ஒரே நேரத்தில் சிதைக்கக் கூடிய பீரங்கிகள், டாங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியவை முதன்முதலாக 1914ல் ஆரம்பமான முதலாம் உலகப் போரில்தான் அறிமுகம் கண்டன. மனிதர்கள் ஒருவரை ஒருவர் இன்னும் லகுவாகக் கொலை செய்ய விஞ்ஞானம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வழிகளை 1914 தொடங்கிப் பல புனைவு இலக்கியக்கள் – கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் உட்பட – விமர்சனம் செய்திருக்கின்றன.
ஆனால் இவையனைத்தும் சீருடை அணிந்த போர்வீரர்கள் ஒருவர் மீது ஒருவர் நடத்திக் கொண்ட வன்முறைகள். 2003ல் தொடங்கிய ஈராக்கியப் போரிலும் அதன் பிறகு அமெரிக்கப் படைகள் ஈராக்கின்மீது நடத்திய படையெடுப்பின்போதும் படைவீரர்கள் மீது மட்டுமன்றிப் பொதுமக்கள் மீதும் கற்பனை செய்ய முடியாத வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அஹமெத் சதாவியின் 2018ம் ஆண்டில் வெளிவந்த நாவலான “ஃபிராங்கன்ஸ்டைன் இன் பாக்தாத்’ என்ற நாவல் ஒருவகையானப் போலி விஞ்ஞான சாத்தியத்தைக் காட்டியே விஞ்ஞான யுகத்தின் மனிதர்கள் ஒருவர்மீது ஒருவர் நடத்திய வன்முறைகளை விமர்சனம் செய்கிறது.
2005ம் ஆண்டு. ஈராக் அமெரிக்கப் படைகளின் பிடியில் இருக்கிறது. நகரமெங்கும் அமெரிக்க இராணுவக் கவச வாகனங்கள் ஓயாமல் இரவும் பகலும் சுற்றி வருகின்றன. ஒரு பெருமைமிக்க நாகரிகம் அந்நியர்களின் காலடியில் கிடக்கிறது. ஈராக்கின் தலைநகரமான பாக்தாத் நகரத்தில் ஒவ்வொரு நாளும் தவறாமல் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்களில் சிக்கிக் கொத்துக் கொத்தாக பொது மக்கள் சாகிறார்கள். இந்தக் குண்டுவெடிப்புகளின் விளைவாக மனித உடல்கள் தெருவெங்கும் சிதறுவதாக சதாவி தனது நாவல்களில் காட்டுகிறார். சாலைகளிலும் நடைபாதைகளிலும் சிதறிய உடல் பாகங்கள் கிடப்பதாக சதாவி காட்டுகிறார். சில நேரங்களில் அதிக சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகளின் விளைவாக உடல் பாகங்கள்கூட மிஞ்சாமல் வெறும் சிவப்புப் பனிப்படலமே எங்கும் பரவுகிறது.
அமெரிக்கப் படைகளின் பிடியில் இருக்கும் பாக்தாதின் ஒரு சிறிய புறநகர்ப் பகுதியில் வாழும் பழைய சாமான் வியாபாரியான ஹாடி என்பவன் எப்படி பழைய சாமான்களைப் பொறுக்குவானோ அதே மாதிரி தெருக்களில் தற்கொலைத் தாக்குதல்களில் சீந்துவாரில்லாமல் சிதறிக் கிடக்கும் உடல் பாகங்களை அள்ளிக் கொண்டு வருகிறான். ஒரு வேளை சிதறிக் கிடக்கும் உடல் பாகங்களை ஒன்றாகத் தைத்து முழு உடலாகச் செய்துவிட்டால் முழுமையான உடல்களுக்கு யாரேனும் சரியான சவ அடக்கம் செய்துவைப்பார்கள், செத்துப் போனவர்களின் ஆத்மாவும் சாந்தி அடையும் என்ற நம்பிக்கையில் கிடைத்த உடல் பகுதிகளை ஒன்றோடொன்று சேர்த்துத் தைத்துவிடுகிறான். அப்படி அவன் தைத்த உடல்களில் ஒன்றில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் இறந்த ஹோட்டல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் ஆவி புகுந்து விடுகிறது. ஒன்றோடொன்று பொருத்தமே இல்லாமல் தைக்கப்பட்ட விசித்திரமான உடல் பாக்தாத் நகரத்திற்குள் தப்பிச் சென்று தன் சாவுக்குப் பழி வாங்கி நீதியை நிலைநிறுத்தும் வண்ணமாகக் கொடூரமான கொலைகளைச் செய்கிறது.
ஒரு கிழட்டு கிறிஸ்துவப் பெண்மணி பெயரில்லாத இந்த உடலைத் தனது மகன் என்று நம்ப ஆரம்பிக்கிறாள். இந்த உடலைப் பற்றிய செய்தி ஒரு சஞ்சிகையில் வெளியாக நகரமெங்கும் அதைப் பற்றிய அச்சமும் பதற்றமும் பரவுகிறது. அதே சமயம் நாவலில் எங்கெங்கோ இருந்து எடுத்து ஒன்றாகத் தைக்கப்பட்ட உடல் பாகங்களைக் கொண்டிருப்பதால் ‘முதல் உண்மையான ஈராக்கியன்’ என்று அழைக்கப்படும் இந்த உடல் தன் உடலில் தைக்கப்பட்டிருக்கும் உடல் பாகங்களின் மாஜி சொந்தக்காரர்களின் சாவிற்குப் பழி வாங்கவில்லையென்றால் அந்த உடல் பாகம் விழுந்து விடும் என்று உணர்ந்து கொள்கிறது. ஆனால் உடல் பாகங்களுக்குச் சொந்தக்காரர் அயோக்கியராய் இருக்கும் பட்சத்தில் நீதியை நிலைநாட்டும் அதன் நோக்கத்திற்குக் களங்கம் ஏற்பட்டுவிடுமே என்றும் அஞ்சுகிறது.
போரின் விளைவால் ஏற்படும் சிதைவும் பயங்கரமும் குழப்பம் ஆகியவற்றின் மொத்த உருவமாக இந்த பெயரில்லாத உடலைச் சதாவி தனது நாவலில் காட்டுகிறார். மேரி ஷெல்லியின் 18ம் நூற்றாண்டு நாவலான ஃப்ராங்கன்ஸ்டைனின் வரும் விஞ்ஞானி டாக்டர் விக்டர் ஃபிராங்கன்ஸ்டைனின் சாயலாகவே ஹாடி இருக்கிறார். இருவரும் மனித உடல் பாகங்களைத் தைத்து ஒரு வகையான ராட்சச உருவத்தை உருவாக்கி அதற்கு எதிர்பாராத விதமாக உயிர் தருகிறார்கள். ஆனால் ஷெல்லியின் நாவலில் வருபவர் உண்மையான விஞ்ஞானி. சதாவியின் நாவலில் வருபவர் பழைய சாமான் வியாபாரி, போதைப்பித்தன், குடிகாரர். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விபச்சாரிகளோடு நேரத்தைச் செலவழிப்பவர். இப்படிப்பட்ட மனிதரை நீதி நிலைநாட்ட புறப்படும் இந்த உருவத்தின் காரணமாகக் காட்டுவதன் வழியாக உலகமும் நவீனப் போர்முறையும் நம்பகத்தன்மை அறவே இல்லாத விஞ்ஞானிகளின் கைகளில் போயிருப்பதைச் சதாவி காட்டுகிறார்.
நகைமுரண்களின் வழியாகவும் கதையில் வரும் தினசரி சம்பவங்களில் இருக்கும் நகைச்சுவையையும் அபத்தத்தையும் எடுத்துக் காட்டுவதன் வழியாகவும் வன்முறையையும் அவலத்தையும் பெரிதாக்கிக் காட்டுவது தலைசிறந்த எழுத்தாளர்களுக்கே கைவந்த கலை. ஹெமிங்வே, வோனகுட் ஆகிய எழுத்தாளர்களுக்குக் கைவந்த இதே ஆற்றல் சதாவிக்கும் கைவந்திருக்கிறது.
ஆனால் நவீனப் போர் முறையையும் கொத்துக் கொத்தாக மனிதர்களைச் சாகடிப்பதையும் சாத்தியப்படுத்தியதால் மனித சமுதாயத்திற்குப் விஞ்ஞானம் செய்த கெடுதலை மட்டும் விமர்சிப்பது சதாவியின் நோக்கமல்ல. சதாவியின் நாவலில் வரும் பல் வேறு உடல் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட பெயரில்லாத உருவம் போரினால் சிதைந்துபோன குடும்பங்களின், உறவுகளின், மனித நாகரித்தின், ஈராக் என்னும் பெருமை மிகுந்த நாட்டின் உருவகமானவே இருக்கிறது. முழுமையான சுய அடையாளத்தை இழந்து அலையும் உருவம் நீதியை நிலைநாட்ட முயன்றாலும் இறுதியில் அதனால் மற்றவர்களிடையே அச்சத்தையும் வெறுப்பையும் மட்டுமே தூண்ட முடிகிறது. வன்முறையால் ஆழமான காயங்களை அடைந்து நீதியைத் தேடும் உருவத்தை வரவேற்கவோ தங்களோடு சேர்த்துக் கொள்ளவோ யாரும் தயாராகவில்லை.
பொதுவாகவே ரஷ்ய, லத்தீன்/தென் அமெரிக்க, ஜப்பானிய, மற்றும் ஆங்கில எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தேடிப் படிக்கும் நாம் எல்லோரும் அஹமெத் சதாவி போன்றவர்களின் எழுத்துக்களையும் வாசிக்கலாம். ஏனெனில் பலவிதமான வன்முறைகளுக்கு ஆட்பட்டுச் சிதைந்து போய் நீதியை நாடி அலையும் உருவம் ச்தாவியின் நாவலில் வரும் பெயரில்லாத உருவம் மட்டுமல்ல.
நாமும்தான்.