என்னதான் எழுதிக் கொண்டு இருந்தாலும் எனக்குத் தத்துவப் பாடத்தின்மீது தீராத மயக்கம் உண்டு. நான்காண்டுகள் உடல், பொருள், ஆவி எல்லாம் அர்ப்பணித்து அரசியலோடு தத்துவத்தையும் பல்கலைக்கழகத்தில் படித்து ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாம் எழுதிச் சமர்ப்பித்தேன் என்பதற்காக அல்ல (தத்துவ வகுப்பில் பெண்கள் என்ன காரணத்தினாலோ அதிகம்). அடிப்படையில் எனக்குக் கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளேட்டோவின் தத்துவ விசாரணைகளின்மீதும் முடிவுகளின்மீதும் நல்ல ஈர்ப்பு உண்டு.
பிளேட்டோ கருத்துப்படி உண்மை, நன்மை, அழகு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று முழு மாற்றாக இருக்கக் கூடிய சமாச்சாரங்கள். உண்மை என்பது இயல்பாகவே அழகாகவும் நன்மையுள்ளதாகவும் இருக்கும். நன்மை தருவது இயற்கையிலேயே அழகானதாகவும் உண்மையானதாகவும் இருக்கும். அழகானது இயல்பில் நன்மை தருவதாகவும், உண்மையுள்ளதாகவும் இருக்கும் என்பது பிளேட்டோவின் வாதம். அழகானவர்கள் பொய் சொல்ல மாட்டார்களா, கெடுதல் செய்ய மாட்டார்களா என்று கேட்டுவிடக் கூடாது. எப்போது தோற்றத்தில் அழகானவர் நன்மை செய்யாமல் தீமை செய்கிறாரோ அல்லது பொய் சொல்கிறாரோ உடனே அவர் நம் கணிப்பின்படி வெறுக்கத் தக்கவராகி விடுகிறார்ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் கிரேக்க ஜாடிக்கு எழுதிய கவிதையில் “அழகுதான் உண்மை, உண்மைதான் அழகு” என்று பிளேட்டோவின் தத்துவக் கோட்பாட்டைப் பின்பற்றிச் சொல்லியிருக்கிறான்.
அழகு என்றால் என்ன என்ற கேள்வி பண்டைய கிரேக்கர்களின் காலம் முதற்கொண்டு மேற்கத்தியத் தத்துவ விசாரணைகளின் முக்கியக் கருப்பொருள்களின் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. இத்தாலிய எழுத்தாளரும் தத்துவ அறிஞருமான உம்பர்ட்டோ எஃகோ 2004ல் அழகைப் பற்றியும், 2007ல் அசிங்கத்தைப் பற்றியும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகங்களில் எதையெல்லாம் அழகு என்று ஐரோப்பியர்கள் கருதினார்கள் என்ற நீண்ட விசாரணை உள்ளது.
ஐரோப்பிய கலாச்சாரம் அழகு என்பதை “சரியான விகிதம்”, “ஒளிமிகுந்து பளபளக்கும் தன்மை” மற்றும் “முழுமை” என்ற மூன்று கூறுகளின் கூட்டு வடிவமாக கருதி வந்திருக்கிறது.
சரியான விகிதம் என்றால் ஓவ்வொரு உடல் உறுப்பு மற்ற உடல் உறுப்புகளோடு ஒப்பிடுகையில் பெருத்தோ சிறுத்தோ இல்லாமல் ஒரு குறிப்பிட்ட அளவில் இருப்பது. இந்த விகிதக் கணக்கு கிரேக்கர்களின் காலத்திலிருந்து மேற்கத்திய ஓவியம், சிற்பம், கட்டடக்கலை ஆகிய அனைத்துக்கும் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. அழகு என்பது உண்மையும் நன்மையும் என்ற வகையில் அவரவர் உடல் தோற்றத்தின் அடிப்படையில் ஐரோப்பிய மன்னர்களின் குணாதிசயங்கள் அக்கால வரலாற்று நூல்களில் அலசப்பட்டிருக்கின்றன. இந்திய மரபிலும் இந்த விகிதாச்சார கோட்பாடு ‘சாமுத்திரிகா லட்சணம்’ என்ற பெயரில் தொடர்ந்து வருகிறது.
“ஒளிமிகுந்து பளபளக்கும் தன்மை” என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. ஒளி என்பது அனைத்தையும் தெளிவாகக் காட்டக் கூடியது. பிளேட்டோ அழகையும், நன்மையையும், உண்மையையும் பற்றி விளக்கிச் சொல்லும்போது சூரியனை உதாரணமாகக் காட்டுகிறார். எல்லா உயிரினங்களும் சூரியனை விரும்புகின்றன. சூரியன் அழகானதாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் சூரியன் உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தைத் தருகிறது. தாவரங்களை வளரச் செய்கிறது. அதே சமயம் வெளிச்சத்தைத் தந்து சுற்றியிருக்கும் எல்லாப் பொருள்களையும் தெளிவாக்கி உயிர்களை ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் காக்கிறது.
அழகான கண்கள் அவ்வளவு வசீகரமுள்ளவையாக இருப்பதற்கு அவற்றின் ஒளிமிகுந்த தன்மையே காரணம்.
முழுமை என்ற தன்மை இல்லாதது அழகுடையதாகாது. கத்தோலிக்க தத்துவ அறிஞர் தாமஸ் அக்வைனாஸ் ஒரு விரலை இழந்த கையை இதர்உ உதாரணமாக் காட்டுகிறார். கை சரியான அளவில் இருந்து பளபளக்கும் தோலுடன் இருந்தாலும் அதில் ஒரு விரலைக் காணவில்லை என்றால் அதை அழகானது என்று சொல்ல மனிதர்கள் தயங்குவார்கள் என்பது அவருடைய வாதம்.
சரியான விகிதம், பிரகாசம், முழுமை என்ற மூன்று கூறுகளையும் ஒருங்கிணைத்த உருவங்களே ஐரோப்பியர்களின் கருத்துப்படி அழகுள்ளவைகளாகக் கருதப்பட்டன. இந்த அளவுகோல் கண்ணுக்குத் தெரியும் உருவங்களுக்கு மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத இசை, இலக்கியம், நாடகம், நாட்டியம் ஆகிய துறைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோம் என்றால் அது அழகான வாக்கியமா இல்லையா என்று எப்படி அறிந்து கொள்வது? முதலில் அதில் உள்ள வார்த்தைகள் அளவாக இருக்க வேண்டும், மிகுந்த ஒளிபொருந்தியதாக இருக்க வேண்டும். அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து முழுமையானதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வரையறைகள் இதன் அடிப்படையில் தோன்றின. உபரித் தகவலாக: வால்மீகி ராமாயணத்தில் ராமன் அனுமனை முதன்முதலில் சந்திக்கும் இடத்தில் ராமன் அனுமனைப் பற்றி லட்சிமணனிடம் புகழும் பகுதியைப் படித்துப் பாருங்கள். ராமன் அனுமனின் பேச்சைப் புகழும் இடத்தில் விகிதம், ஒளி பொருந்திய தன்மை, முழுமை ஆகிய இந்த மூன்று கூறுகளையே எடுத்துக் காட்டுகிறான்.
இந்த மூன்று கூறுகள்தான் அழகை நிர்ணயம் செய்கின்றன என்றால் ஏன் ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு விதமான உருவங்கள் அழகுள்ளவையாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன என்ற கேள்வி எழலாம். உதாரணத்துக்கு 17ம் 18ம் நூற்றாண்டு மேற்கத்திய ஓவியங்களைப் பார்த்தோம் என்றால் நல்ல சதைப்பற்றுள்ள குண்டான ஆண்களும் பெண்களுமே அழகுள்ளவர்களாகக் கருதப்பட்டு வந்திருப்பதைக் கவனிக்கலாம். ஆனால் இந்த நூற்றாண்டில் நிலைமை ஓரளவுக்குத் தலைக்கீழாய் இருக்கிறது. இதற்குப் பதில்: வரையறை தவறு அல்ல. எல்லாக் காலத்திலும் மக்கள் சரியான விகிதம் பளபளப்பு, முழுமை ஆகிய மூன்றின் கூட்டையே அழகு என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அழகின் விகிதம் தலைமுறைக்குத் தலைமுறை மாறுபடலாம்.
அழகின் அடிப்படைகளான இந்த மூன்று கூறுகளுடன் அசைவு என்ற நான்காவது கூறையும் சேர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. செம்மையான கலை வடிவங்கள் என்று கருதப்படும் பல ஓவியங்கள் அசையாத உருவங்களையே காட்டுகின்றன (உதாரணம்: மோனா லிஸா). அசையும் உருவங்கள் அழகுள்ளவையாகக் கருதப்படுவதில்லை என்ற கருத்தும் உள்ளது. உதாரணத்துக்கு, நம்மை ஈர்ப்பவர்களின் வீடியோ படங்களைவிட புகைப்படங்களையே அதிகமாகப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக நடிகையரின் உண்மையான அழகைக் காட்ட வேண்டும் என்றால் க்ளோஸ்-அப் ஷாட் வைத்து ஆக வேண்டும்.
அழகுக்கு இவ்வளவு விரிவான இலக்கணம் இருக்கும்போது அசிங்கம் என்பதை சரியான விகிதம், பளபளப்பு, முழுமை என்ற மூன்றும் இல்லாத தன்மையாகவே – எதிர்மறை அளவுகோலின் அடிப்படையில் – ஐரோப்பிய நாகரிகம் கருதி வந்திருப்பதாக எஃகோ சொல்கிறார். ஆனால் அவர் அடுத்துச் சொல்வதுதான் விவாதத்துக்குரியது. எஃகோவின் கருத்துப்படி அழகைவிட அசிங்கம்தான் மனிதர்களை ஈர்க்கிறது என்று அவர் சொல்கிறார். இதற்கு உதாரணம் காட்டும் எஃகோ ஐரோப்பிய மொழிகளில் அழகை வர்ணிக்க உள்ள வார்த்தைகளைவிட அசிங்கத்தை வர்ணிப்பதற்காக உள்ள வார்த்தகளே உணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ளன என்கிறார். ஒரு விஷயம் அழகாக இருக்கிறது என்பதை மிக மேம்போக்காகக் கூடச் சொல்லிவிட்டுப் போய்விடலாம், ஆனால் வெறுப்பைத் தெரிவிக்க உணர்ச்சியோடு பேசித்தான் ஆக வேண்டும்.
இதனால்தானோ என்னவோ அழகானவைகளைத் தாண்டியும் அசிங்கமானவைகளால் மனிதர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று எஃகோ சொல்கிறார். சிறார்களுக்காகக் காட்டப்படும் கேலிச் சித்திரங்களின் வரும் வருவங்கள் பெரும்பாலும் சரியான விகிதம், முழுமை என்பவை இல்லாத அசிங்கமான உருவங்களாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பிப் பார்க்கிறார்கள். அத்தகைய உருவங்கள் இருக்கும் ஆடைகளும், அத்தகைய உருவங்களைக் காட்டும் விளையாட்டுப் பொம்மைகளும் நன்றாக விற்பனையாகின்றன. இலக்கியத்தைப் பொறுத்தவரை கிரேக்கர்கள், ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்து மகிழ்ச்சியாக முடியும் படைப்புக்களைவிட வன்முறை, துயரம், அச்சம் ஆகியவற்றைப் பேசும் படைப்புக்களே அதிகமாக வெளிவந்துள்லன, அவையே மனிதர்களை அதிகமாக ஈர்க்கவும் செய்கின்றன. சாலையில் விபத்து நடந்திருந்தால் அந்த இடத்தைக் கடந்துபோகும் வாகனத்தில் உள்ளவர்கள் ஒரு கணம் நின்று நிதானித்துவிட்டு அந்தக் கோரக் காட்சியைப் பார்த்துவிட்டுத்தான் நகர்கிறார்கள். அசிங்கம் என்று யாரும் அந்த இடத்தை விட்டுச் சீக்கிரமாகப் போக வேண்டும் என்று நினைப்பதில்லை. இறுதியாக, வன்முறை சினிமாக்களும், பேய்ப்படங்களும், உண்மையை விகாரமாக்கிக் காட்டும் காமெடிப் படங்களுக்கும் இன்றும் பல லட்சம் பேர்களை ஈர்க்கத்தான் செய்கின்றன.
இந்த இயல்பை விசாரிக்கும் எஃகோ அழகின் வரையறைகள் ஒரு புறம் இருக்க, சற்று விகாரத்தோடு அல்லது சின்ன அசிங்கத்தோடு கூடிய உருவங்களும் படைப்புகளுமே மனிதர்களிடம் வெற்றிப் பெறுகின்றன என்று சொல்கிறார்.
அழகின் இலக்கணப்படி உடல் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறைகள் இருந்தாலும்கூட கொஞ்சம் பெரிதாக இருக்கும் மூக்கும், சரியான இடத்தில் இருக்கும் மச்சமும், சற்றே செழுமையான இடுப்பு மடிப்பும் புகழ்பெறுவது இதனால்தான் என்பது எஃகோவின் வாதம்.