மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது மிக நெடுங்காலமாய் இலக்கியப் புனைவுகளின் விசாரணையாக இருந்து வந்திருக்கிறது. கிறிஸ்துவ இறையியல்படி மனிதர்கள் பிறவியிலேயே பாவத்தில் பிறந்திருப்பதாகவும், இந்த ஆதிபாவமானது அவர்களைத் தீமைச் செய்யத் தூண்டுவதாகவும் கருதப்படுகிறது லத்தீன் கிறிஸ்துவத்தில் இந்த ஆதி பாவம் சட்ட நியதிகளின்படி ஆராயப்பட்டு மனிதன் இறைவனின் இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாதவரை நரக வேதனைகளுக்கு உரிய குற்றவாளியாகக் கருதப்படுகிறான். ரஷ்யா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் உள்ள கிழக்கத்திய கிறிஸ்துவமோ இந்த ஆதி பாவத்தைப் பிறவியிலேயே மனிதனின் ஆன்மாவில் பட்ட காயமாகக் கருதுகிறது. கிழக்கத்திய கிறிஸ்துவத்தின் பார்வையில் இறைவனின் இரட்சிப்புத் தண்டனை தரும் நீதி பரிபாலனமாக அல்லாமல் மனிதனைப் பலவீனனாக ஆக்கும் காயத்துக்கு மருந்தாகவே கருதப்படுகிறது.
மனிதன் இயற்கையிலேயே நல்லவனாகப் பிறந்து சந்தர்ப்பச் சூழ்நிலையால் பாவியாகிறானா, அல்லது மனிதன் நாகரிகப் பயிற்சியுள்ள ஒரு மிருகம் மட்டுமா என்று ஆராயும் முக்கியமான மேற்கத்திய நாவல்களில் தலைசிறந்த படைப்பு வில்லியம் கோல்டிங்-இன் 1954 நாவலான “தி லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ்’. இந்த நாவல் இன்னும் அதிகமாக நம்மிடையே பேசப்படாது துரதிர்ஷ்டமே. கோல்டிங் மனித இயற்கையை ஆராயப் இரண்டாம் உலகப் போர் நேரத்தில் விமான விபத்தில் சிக்கி ஆளில்லாத மிக அழகிய தீவொன்றில் மாட்டிக்கொள்ளும் பதின்ம வயது பிரிட்டிஷ் மாணவர்களைப் பயன்படுத்துகிறார். நாவலில் வரும் மாணவர்கள் மிக உயர்ந்த பிரிட்டிஷ் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள். சொர்க்கம் போன்ற தீவில் மாட்டிக் கொண்ட இவர்கள் வெளியுலகத் தாக்கங்கள் இன்றியே எப்படி மிக குறைந்த நாட்களில் கொடூரம் நிறைந்தவர்களாகவும் மிருகங்களாகவும் மாறுகிறார்கள் என்பதே “தி லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ்’ நாவலின் அடிப்படைக் கதை.
பெரியவர்கள் யாருமின்றித் தீவில் மாட்டிக் கொள்ளும் மாணவர்கள் முதலில் தங்களிடையே மிக உயர்ந்த ஜனநாயக முறைகளை நிறுவுகிறார்கள். அந்தக் குழுவுக்குத் தலைவன்போல இருக்கும் மாணவன் தீவின் கடற்கரையில் கண்டெடுத்த சங்கை மாணவர்கள் நடத்தும் கூட்டங்களின்போது அந்தச் சங்கை யார் பிடித்திருக்கிறாரோ அந்த மாணவன் தனது கருத்தைச் சொல்லி முடிக்கும்வரை மற்றவர்கள் பொறுமையோடு கேட்க வேண்டும் என்கிறான். குழுவிலிருக்கும் ஒரு தடிப்பையன் ஒருவனின் மூக்குக் கண்ணாடியைப் பயன்படுத்தி அவர்கள் தீ மூட்டுகிறார்கள். தீவைக் கடந்துபோகும் கவனத்தை ஈர்க்க கடற்கரையில் தீயை நிரந்தரமாய் எரியச் செய்யச் சில மாணவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். நுண்ணிய கலையார்வமும் உயர்ந்த பண்புகளும் உடையவர்கள் என்று கருதப்படும் பாடக்குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கு காட்டில் சென்று உணவுக்காகப் பன்றிகளை வேட்டையாடும் பொறுப்பும், பழங்களைச் சேகரித்து வரும் பொறுப்பும் தரப்படுகிறது.
அக்காலத்தில் உலகின் பல பகுதிகளைக் கட்டியாண்டு ‘நாடாளுமன்றங்களின் தாய்’ என்று கருதப்பட்ட பிரிட்டனின் அத்தனை ஜனநாயகக் கோட்பாடுகளையும் மாணவர்கள் தீவில் நிலைநாட்டுகிறார்கள். ஆனால் மிக விரைவில் அவர்கள் தங்களுக்குத் தாங்களே அமைத்துக் கொண்ட விதிகளை மாணவர்கள் மீறுகிறார்கள். முதல் தலைவனை எதிர்த்துப் பாடற்குழுவின் தலைவன் செயல்பட ஆரம்பிக்கிறான். வேட்டைக்குழுவாகச் செயல்பட்ட பாடற்குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாய்க் காட்டுமிராண்டிகளாக மாற ஆரம்பிக்கிறார்கள். முதல் தலைவனுக்கு எதிராக மாணவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொள்ள பாடற்குழுத் தலைவன் தனது குழுவினர் வேட்டையாடிக் கொண்டு வரும் பன்றி இறைச்சியைப் பயன்படுத்தி ஆசைகாட்டுகிறான். அவனுடன் சேர்ந்த பையன்கள் காட்டிற்குள் கம்பினில் மாட்டப்பட்டுத் தீயில் வாட்டப்படும் பன்றியின் உடலைச் சுற்றி நின்று பழங்குடி மக்களுக்கு உரியவை போல் தோற்றமளிக்கும் சடங்குகளின் ஈடுபடுகிறார்கள். முகத்தில் பல்வேறு வகை சாயங்களைப் பூசிக் கொள்கிறார்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு போர் விமானியின் பிணம் ஒரு நாள் தீவில் உள்ள மரத்தின் கிளையொன்றில் சிக்கித் தொங்குகிறது. தன் தலைமையை வலுப்படுத்த நினைக்கும் பாடற்குழுத் தலைவன் காற்றில் அசையும் விமானியின் சடலத்தைப் பூதம் என்று சொல்கிறான். தன் கூட்டத்தில் சேர்ந்தால் பூதத்திடமிருந்து காப்பாற்றுவதாகச் சொல்லி மற்ற பையன்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான்.
முதல் தலைவனோடு இருக்கும் மாணவர்களின் சிலர் பாடற்குழுவினரோடு சேர்ந்து ரத்தவெறியர்களாகிவிட்ட பையன்களால் கொல்லப்படுகிறார்கள். சிறுபையன்கள் சித்திரவரை செய்யப்பட்டுப் பாடற்குழுவினரோடு சேர வற்புறுத்தப்படுகிறார்கள். ஜனநாயகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட சங்கு அவர்களால் உடைக்கப்பட்டுச் சுக்குநூறாகிறது. கடைசியில் தலைமறைவாகியிருக்கும் முதல் தலைவனைக் கண்டுபிடிக்கப் பாடற்குழுவைச் சேர்ந்தவர்கள் காட்டைக் கொளுத்துகிறார்கள். அவர்களிடம் தப்பியோடும் மாணவன் கடற்கரையில் வந்து தடுக்கி விழுகிறான். அவனுக்கு முன்னால் ஒரு பிரிட்டிஷ் கடற்படை அதிகாரி நின்று கொண்டிருக்கிறார். காடு எரிவதைப் பார்த்து அவர் தீவில் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் முதல் மாணவர் தலைவன் இழந்த தன் நண்பர்களையும் தனது அறியாப் பருவத்தையும் எண்ணி விம்மி விம்மி அழுகிறான். அவனுக்குப் பின்னால் அவனைத் தேடிக் கொண்டு ஓடிவரும் பாடற்குழுவினரும் அதிகாரியைப் பார்த்ததும் தேம்பித் தேம்பிப் பிள்ளைகள் போல அழுகிறார்கள். உயர்ந்த நாகரிகத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் பள்ளிப் பிள்ளைகள் இப்படிக் காட்டுமிராண்டிகளாகி விட்டதைப் பார்த்து கடற்படை அதிகாரி வியக்கிறார்.
“தி லார்ட் ஆஃப் தி ப்ளைஸ்” என்பதற்கு அர்த்தம் ‘ஈக்களின் தலைவன்’ என்பதாகும். சாத்தானைக் குறிக்கப் பைபிளில் இந்தப் பெயர் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. பூதத்தைத் திருப்திபடுத்த காட்டிற்குள் வெறியாட்டம் ஆடும் பையன்கள் ஒரு குச்சியில் தாங்கள் பிடித்த ஒரு பன்றியின் தலையை நட்டு வைத்ததின் தொடர்பில் இந்த நாவலுக்கு இந்தப் பெயர். அவர்கள் நட்டுவைத்த பன்றியின் தலையைச் சுற்றி கறுப்பு மேகமாக ஈக்கள் சூழ்ந்திருக்கின்றன.
என்னதான் வெளியுலகத் தொடர்பேதும் இன்றி சொர்க்கம் போன்ற தீவில் வைத்தாலும் மனிதர்கள் நாகரிகக் கட்டுப்பாடுகள் இல்லா விட்டால் மிருகங்களாகி விடுவார்கள் என்று கோல்டிங்-இன் நாவல் சொல்கிறது. உலகத்திலேயே மிக உன்னதமான நாகரிகம் தங்களுடையது என்று கருதிக்கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் கர்வத்தை நாவல் கடுமையாக விமர்சனம் செய்கிறது. இந்த விமர்சனத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் தீவுக்கு வெகு தூரத்தில் நடக்கும் இரண்டாம் உலகப்போர் பின்னணியாகப் பயன்படுகிறது.
வில்லியம் கோல்டிங்-இன் எளிமையும் துல்லியமும் வாய்ந்த எழுத்து நடையையும், கதையின் மையச் செய்திக்கு வலு சேர்க்கும்படி சின்னச் சின்ன விவரங்களைக் கதையில் சேர்க்கும் நுணுக்கமும், மிகப் பெரிய கொடூரங்களை அலட்சியமாகச் சொல்லிக் கொண்டு போவதாலேயே அவற்றின் ஆழமான வன்முறையை நிலைநிறுத்தும் ஆற்றலும் வாசகர்களால் கவனிக்கத்தக்கவை.
இந்த நாவல் 1963லும் 1990லும் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.