சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் “சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள்” என்ற பெயரில் புத்தகங்கள் தொகுப்புக்களாகக் கறுப்பு நிற அட்டைகளோடு வெளிவந்தன. ‘சிங்கப்பூர் பேய்க் கதைகள் 1’ என்று தொடங்கிக் கிட்டத்தட்ட இருபதுக்கும் அதிகமான பல தொகுப்புக்கள். அவற்றை ‘ரஸ்ஸல் லீ’ என்ற பெயரில் ஒருவர் எழுதியிருந்தார்.

எட்கர் ஆலன் போ,ஹெச். பி. லவ்கிராஃப்ட், ஸ்டீபன் கிங் போன்ற புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களின் பேய்க்கதைகளோடு ஒப்பிடுகையில் எந்தவிதமான இலக்கியத் தரமும் இல்லாத கதைகளாக இவை இருந்தன.

ஒவ்வொரு தொகுப்பிலும் சுமார் நாற்பதிலிருந்து அறுபது கதைகள். ஓரிரு பக்கங்கள் நீளமுடையவை. விற்பனை பிய்த்துக் கொண்டு போனது. எளிமையான ஆங்கிலத்தில் கதைகள் எழுதப்பட்டிருந்ததால் பதின்ம வயதினரும் வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே இருந்த இளம் வயதினரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒவ்வொரு தொகுப்பையும் வாங்கினார்கள். புத்தக விழாக்களில் ‘ரஸ்ஸல் லீ’ என்ற நபர் கறுப்புத் தொப்பி, முகமூடி, கறுப்பு ஆடைகள் அணிந்து வாசகர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளெல்லாம்கூட நடந்தேறின.

சிங்கப்பூர் இலக்கிய உலகின் நினைவுக்கூரத்தக்கச சர்ச்சைகளில் ஒன்றாக இந்தத் தொடர் வெளிவரத் தொடங்கிய சிறிது காலத்தில் வேறொரு பதிப்பகத்தார் அதே பெயரில் அதே ரஸ்ஸல் லீ எழுதியதாகச் சொல்லி வேறோரு அட்டைப்பட வடிவமைப்போடு சிங்கப்பூர்ப் பேய்க் கதைகளின் தொகுப்புக்களை வெளியிட்டார்கள். இரண்டு பதிப்பகத்தாருக்கும் இடையே எது ‘ஒரிஜினல்’ சிங்கப்பூர்ப் பேய்க் கதை என்ற சர்ச்சை ஏற்பட்டது. இரு வேறு முகமூடிகளில் இரண்டு ரஸ்ஸல் லீக்கள் தோன்றி வாசகர்களைச் சந்தித்ததார்கள். ஆனால் இரு சாராரும் ரஸ்ஸல் லீ யார் என்று சொல்ல விரும்பாததால்/முடியாததால் வாசகர்களுக்கு யார் உண்மையான ரஸ்ஸல் லீ என்று தெரியாமலேயே இருந்தது.

பிறகு ஒரு பதிப்பகத்தார் குழப்பத்தைத் தீர்க்கும் விதமாக அவர்கள் வெளியிடும் புத்தகங்களை “உண்மையான” சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள் என்ற அடைமொழியோடு  புத்தகங்களை வெளியிட்டார்கள். அதற்குள் வாசகர்களுக்குப் பேய்க் கதைகள் மீதிருந்த சுவாரஸ்யம் நீர்த்துப் போயிருந்தது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தத் தொகுப்புக்களில் சொல்லப்பட்ட கதைகள் யாவுமே சிங்கப்பூர்ச் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் தங்களுக்குள் பல்லாண்டுகளாக வாய்மொழியாகச் சொல்லிக் கொள்ளும் பேய்க்கதைகளே.

அந்த வகையில் வாய்மொழிக் கதைகளுக்கே உள்ள சில குறிப்பிட்ட இலக்கணங்களையே சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள் கொண்டிருக்கின்றன –

(அ) தட்டையான கதாபாத்திரங்கள்

(அழகான பெண், வகுப்பில் யாருடனும் அதிகாமாகப் பேசாத மாணவன், மர்மக் கிழவி, விடுமுறை நாட்களிலும் பள்ளியை விட்டுப் பிரிய மனமில்லாமல் கடமையே கண்ணாக ஆசிரியர் அறையில் பாடப் புத்தகங்களைச் செத்துப் போன பின்னாலும் திருத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்);

(ஆ) கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தாலோ (அகால மரணம், தற்கொலை) அல்லது அவர்கள் செய்யும் ஏதோ ஒரு பிழையாலோ (மயானத்தில் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது, முச்சந்திகளில் பேய்களுக்குப் படைக்கப்பட்ட உணவுப் பொருள்களையே, பணத்தையோ எடுத்துக் கொள்வது/மிதிப்பது) ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் அவர்கள் தாக்கப்படுவது;

(இ) அமானுஷ்யச் சக்தியை மதப் பிரதிநிதியின் உதவியாலோ அல்லது மந்திரவாதியின் உதவியாலோ ஒருவாறு (அந்த நேரத்துக்கு மட்டுமாவது) கதாபாத்திரம் வெல்வது;

(ஈ) அல்லது, கதாபாத்திரம் அமானுஷ்யச் சக்தியை வெல்ல முடியாமல் செத்துப் போவது. மற்றவர்களுக்கு இந்தச் சம்பவமே பாடமாக அமைவது.

வாய்மொழிப் பேய்க்கதைகளைக் கூர்ந்து கவனித்தால் அவற்றுக்குச் பெரும்பாலும் சரியான முடிவு இல்லாமல் இருப்பது தெரியும். மற்ற சிங்கப்பூர் எழுத்தாளர்கள் – ஆங்கிலத்தில் கோ சின் டப், கேத்தரீன் லிம் போன்றோர் – எழுதிய பேய்க்கதைப் புனைவிலக்கியத்துக்கும் நான் குறிப்பிடும் சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள் புத்தகங்களுக்கும் இடையே சரியான முடிவுரை இல்லாதது மிகப் பெரிய வித்தியாசமாக இருந்து வருவதைக் காணலாம்.

இலக்கியம் தரம் வாய்ந்த அல்லது இலக்கியத் தரத்துக்கு முயலும் எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் பேய்க்கதைகளில் ஏதேனும் முடிவைச் சொல்வார்கள். கடைசியில் பேய்தான் ஜெயித்தது என்றாலும்கூட கதையின்படி அந்த முடிவில் ஏதேனும் திடமான தர்க்க நியாயம் இருக்கும். ஆனால் வாய்மொழிப் பேய்க்கதைகளின் நிலைமை வேறு. அவை அந்தி சாயும் வேளைகளிலும் இரவில் தூங்கப் போவதற்கு முன்னாலும், பதின்ம வயதினர் பள்ளிக்கூட விடுமுறை முகாம்களுக்குப் போகும் போதும் இருட்டில் அமர்ந்து ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்பவை. இத்தகைய வாய்மொழிக் கதைகளின் நோக்கம் கதை கேட்பவர்களின் உள்ளங்களில் பேய்களைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தி அதை நிரந்தரமாக்குவது. இந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் கதைகளில் தீர்க்கமான முடிவுகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்காது என்பது மட்டுமல்ல, கதையில் குறிப்பிடப்படும் பேய்கள் இன்னமும் சிங்கப்பூரில் உலாத்திக் கொண்டிருக்கின்றன, ஜாக்கிரதை என்று சொல்லிப் பீதியைக் கிளப்பும் சாத்தியமும் அடிப்பட்டுப் போகும்.

அதே காரணத்தால்தான் எட்கர் ஆலன் போ போன்றவர்களின் பேய்க்கதைப் புனைவுகளில் இடங்களின் விவரங்களில் துல்லியமாக தரப்பட்டிருக்கும் வேளையில், வாய்மொழிப் பேய்க்கதைகளில் அத்தகைய துல்லியம் இல்லாமல் இருக்கிறது.

வாய்மொழியாகச் சொல்லப்படும் பேய்க்கதைகளில் மிகப் பொதுவான இட விவரங்களே அளிக்கப்பட்டிருக்கும். இத்தகைய கதைகளில் தீவின் வடக்குப் பகுதியில் இருக்கும் இராணுவ முகாம் ஒன்றில் அம்மா பேயும் குழந்தைப் பேயும் இரவில் உலவுகின்றன என்று பெரும்பாலும் இருக்குமே தவிர இன்னின்ன முகாமில்தான் அந்தப் பேய்கள் இருக்கின்றன என்ற விவரம் இருக்காது. காரணம், இந்த முகாமில்தான் அந்தப் பேய் இருக்கிறதென்றால் மற்ற முகாம்களில் உள்ளவர்கள் அந்தப் பேய்களுக்குப் பயப்படமாட்டார்கள். அதனால் பேய்க்கதையை மெனக்கெட்டுச் சொன்னதற்கான காரணமே அடிபட்டுப் போகும்.

ஆனால் பேய்க்கதைகளில் விவரங்களில் இல்லாமல் இருந்தால் அதுவும் வாசகரை ஈர்க்காது என்ற காரணத்தால், இப்படி வாய்மொழியாக வரும் கதைகளைச் சொல்பவர்கள் துல்லியமான விவரம் தருவதுபோல் பாவனைக் காட்டி உண்மையில் எந்த விவரத்தையும் ஒழுங்காகத் தராமல் மழுப்பி விடுவார்கள். இந்தக் கதையை இன்னின்னாரிடம் கேட்டேன் என்பார்கள். இப்படிக் கதை சொன்னவர்கள் ஆசிரியராகவோ, குடும்பத்தில் மூத்தவர்களாகவோ, மதப் பிரதிநிதியாகவோதான் பெரும்பாலும் இருப்பார்கள். இது கதையின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட ஒரு தந்திரம். அல்லது இந்தப் பகுதி மக்கள் அனைவருமே இதை நம்புகிறார்கள் என்று சொல்வார்கள். இடங்களைக் குறிப்பிடும்போது இந்த வீடு, இந்தத் தெரு என்று குறிப்பிடப்படாமல் ஒரு வட்டாரம் குறிப்பிடப்படும்.

சிங்கப்பூர்ப் பேய்க் கதைகளில் சமய இன நம்பிக்கைகளோடு தொடர்புடைய பேய்களே அதிகம். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் ஒருவரோடு ஒருவர் தோள் உரசும்படி வாழும் ஒரு சிறிய தீவில் பேய்களைப் பற்றிய ஒரு இனத்தாருடைய நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு பெரு வியப்பாகவும் புதிராகவும் இருப்பது இயற்கைதான். உதாரணத்துக்கு, வெள்ளிக்கிழமை தொழுகை நாளுக்கு முன்னால் வரும் வியாழக்கிழமை இரவுகளில் மலாய்/முஸ்லிம் பேய்கள் தீவைச் சுற்றி வரும். அன்று இரவு இன்னமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதை அறியாமல் இராணுவ முகாமுக்குள் வியாழக்கிழமை இரவு பன்றி மாமிசம் கலந்த உணவைக் கொண்டு வரும் இளம் தேசிய சேவையாளன் ஒருவன் பேயால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான்.

சீனச் சந்திரமுறை ஆண்டின் ஏழாம் மாதத்தில் (ஆகஸ்டு-செப்டெம்பர் மாதம் வருவது) நரகத்தின் கதவுகள் ஒரு மாதத்துக்குத் திறந்துவிடப்பட்டு பேய்கள் பூமியில் உலவ அனுமதிக்கப்படும். பசியோடும் தாகத்தோடும் அலையும் பேய்களுக்காக இன்றும் சீனர்கள் சிங்கப்பூர் சாலைகளில் அந்த மாதம் முழுவதும் உணவு வகைகளைப் படைக்கிறார்கள். குறிப்பிட்ட நாள்களில் பேய்கள் மீண்டும் நரகத்துக்குப் போகும் சமயத்தில் நரகத்தில் செலவு செய்ய காகிதத்தால் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளையும் வெள்ளிக் கட்டிகளையும், ‘நரக கரன்சி’ என்று அச்சடிக்கப்பட்டுள்ள காகிதத் தாள்களையும் சாலைகளில்  எரிக்கிறார்கள். முன்னாளில் பணம் மட்டுமின்றி நரகத்தில் பேய்கள் அனுபவிப்பதற்காகக் காகிதத்தால் செய்யப்பட்ட பங்களா வீடுகளையும், காகிதக் கார்களையும், காகிதப் பணிப்பெண்களையும் எரிக்கும் வழக்கமும் இருந்தது. இப்போது அருகி வந்திருக்கிறது. பூமியில் உலவும் பேய்களைக் கண்காணிக்க நரக போலீஸார் இருவர் இருவராக பூமிக்கு அனுப்பப்படுவார்கள். பழைய சீனாவின் மிங் பேரரசு காலத்திய படைவீரர்களின் சீருடையில் இருக்கும் இந்த நரக போலீஸாரை அடையாளம் கண்டு கொள்வது எளிது அவர்களில் ஒருவர் கறுப்பாக இருப்பார். இன்னொருத்தர் வெள்ளை வெளேர் என்று இருப்பார். இருவருக்கும் முழங்கால்களை மடிக்க முடியாததால் அவர்கள் கைகளை நீட்டியபடித் தாவித் தாவிப் போவார்கள். அவர்கள் தாவிப் போகும் சத்தத்தைப் பலர் சிங்கப்பூரின் உஷ்ணம் மிகுந்த இரவுகளின் நிசப்தத்தில் கேட்டிருக்கிறார்கள்.  இந்த எழாம் மாதத்தில் பேய்கள் நடமாடுவதால் சீனர்கள் திருமணங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

தரையில் பேய்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் படையல்களை மிதிக்காமலும் வேறு எந்த வகையிலும் அவமதிக்காமலும் இருக்க பெருமுயற்சி எடுத்துக் கொள்வார்கள்.  குடியும், இசையும், குதூகலமும் நிறைந்திருக்கும் இடங்களைத் தேடிப் பேய்கள் வரும். அதனால் ஏழாம் மாதத்தில் அதிகப்படியான கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது அவசியம்.

பேய் குடியிருக்கும் மரத்தில் மூத்திரம் போகக் கூடாது. அப்படி போக நேர்ந்தால் நல்ல உரத்த குரலில் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். இல்லையென்றால் பேயடிக்கும். கர்ப்பத்தில் செத்துப்போன பெண்கள் பொந்தியானாக்  பேய்களாக மாறி பேரழகு வாய்ந்த பெண்களின் தோற்றத்தில் அலைந்து ஆண்களைக் கொல்வார்கள். அதனால் இரவில் தனியாக வாகனம் ஓட்டிக் கொண்டு போகும் போது அழகான பெண்ணொருத்தி யாரும் இல்லாத இடத்தில் உன் வாகனத்தைக் கைக்காட்டி நிறுத்தினால் நிறுத்தாதே. பிணத்தைப் பூனை தாண்டினால் பிணம் எழுந்து உட்காரும். பிணங்களுக்கு அருகே பூனையை விடாதே. அமாவாசை இரவில் மயானத்துக்குப் போய் கறுப்புக் கோழியைப் பலிகொடுத்தால் ஒரு குட்டிப்பிசாசு தோன்றி லாட்டரியில் ஜெயிக்கும் எண்களை உனக்குக் கொடுக்கும். ஆனால் அதற்குப் பதிலாக நீ கடுமையான சில வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தோயோல் என்ற குறளிப் பேய்களை வசப்படுத்தினால் அவை நாம் சொல்லும் வேலைகளைச் செய்யும். ஆனால் அவற்றுக்குத் தினமும் கால் பெருவிரலை ஊசியால் குத்தி ரத்தத்தை உறிஞ்ச விடவேண்டும். அப்படி தோயோல் வளர்ப்பவர்கள் இறுதியில் ரத்தம் வற்றிச் செத்துப் போவார்கள்.

இதைப் போன்ற நூற்றுக்கணக்கான கதைகள் சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள் என்ற தொகுப்புகளில் இருக்கின்றன.

ஆனால் சிங்கப்பூர்ப் பேய்க் கதைகளின் சிறப்பம்சம் இப்படிப்பட்ட கதைகள் இங்குச் பேசப்படுகின்றன என்பதல்ல. மாறாகப் பல இன, மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ”பேய்க்கதைக் கூறுகளை” தமக்குள் வாங்கிக் கொண்டு சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள் எப்படி இந்த நிலத்தின் கதைகளை மலரச் செய்துள்ளன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். சிங்கப்பூரர்களை மொத்தமாகப் பாதித்த பல மிகப் பெரிய வரலாற்று, சமுதாய நிகழ்வுகளை இந்தக் கதைகள் பிரதிபலிக்கின்றன. பல நாட்டாரின், இனத்தாரின், மதத்தினரின் நம்பிக்கைகளை பிரதிபலிக்கும் இந்தப் பேய் உருவங்கள் சிங்கப்பூரின் இந்த வரலாற்று, சமுதாய மாற்றங்கள் சார்ந்த கதைகளில் வந்து போகின்றன.  

உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போர்க்காலம் 1942க்கும் 1945க்கும் இடையில் சிங்கப்பூரர்கள் முன்னெப்போதும் கண்டிராத வன்முறையை இந்நிலத்தில் நடத்திக் காட்டியது. பல சிங்கப்பூரர்கள் கொத்துக் கொத்தாக ஜப்பானியப் படைகளால் கொல்லப்பட்டார்கள். தாயார்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்ட கைக்குழந்தைகளைக் காற்றில் வீசி எறிந்து அவை காற்றில் இருக்கும்போதே இரண்டு துண்டாக ஜப்பானியப் படை அதிகாரிகள் தங்கள் வாள்களால் வெட்டினார்கள். இச்சம்பவங்களை நினைவுபடுத்தும் பேய்க்கதைகள் இந்த தொகுப்புக்களில் நிறைந்திருக்கின்றன. மேலும் 1967ல் கட்டாயத் தேசிய சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது எல்லா இனத்தையும் சேர்ந்த சிங்கப்பூர் இளைஞர்கள் பழைய பிரிட்டிஷ் கால இராணுவ முகாம்களில் இரண்டரை ஆண்டுகள் தங்கி காட்டுப் பகுதிகளில் இராணுவப் பயிற்சி மேற்கொண்டார்கள். அவர்களில் பலர் பல்வேறு விபத்துக்களால் இறந்தார்கள். அப்படி மாண்டு போனவர்களின் கதைகளும் சிங்கப்பூர்ப் பேய்க்கதைகளில் இடம் பிடித்துக் கொண்டன.

மக்கள் தொகை வேகமாக வளர்ந்துவரும் நாட்டில் மயான பூமிகளிலுல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டுப் பழைய மயானங்களின் மீது அடுக்குமாடிக் கட்டடங்களும் அவற்றினூடே சுரங்க ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டன. பழைய பேய்கள் இங்கும் குடிபுகுந்து கதைகளாகின.

ஒரு நகரம் வேகமாக வளரும்போது பழைய நம்பிக்கைகளும் தொழில்நுட்ப மாற்றங்களும் மோதிக் கொள்ளும் தருணங்களை சிங்கப்பூர்ப் பேய்க் கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலக்கியத் தரம் குறைவாக இருந்தாலும் சிங்கப்பூரில் ஏற்பட்ட வரலாற்று மற்றும் சமூகத் தாக்கங்களுக்கு இவை மௌன சாட்சிகளாக இருக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s