எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று கனலி குழுவினோரோடு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பல வாத்தியங்களின் இசையை ஒரே இசையாய் ஒருங்கிணைக்கும் ஐரோப்பிய சிம்பொனி இசைபோல் பல கதாபாத்திரங்களின் கதைகளை ஒருங்கிணைக்கும் பன்முகத் தன்மை கொண்ட ஐரோப்பிய நாவல் வடிவத்தோடு டால்ஸ்டாய் தஸ்தவியஸ்கி ஆகியோரது நாவல்கள் மனித எதிர்நோக்கும் பெரும் பிரச்சனை குறித்த உரையாடல்களையும் சேர்த்துக் கொடுத்ததாகச் சொன்னார். அந்த நூற்றாண்டின் ரஷ்ய நாவல்களின் மிகப் பெரிய இலக்கிய வெற்றிக்கு இத்தகைய ஆன்மிக அலசல்கள் முக்கியமான காரணம்.
டால்ஸ்டாய், தஸ்தவியஸ்கி ஆகியோரின் நாவல்கள் முன்னெடுக்கும் கடவுள் சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த, மனிதனுக்குள் நிகழும் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர் சார்ந்த, மீட்பு சார்ந்த உரையாடல்களைப் போலவே சோம்பல் என்பதும் அலசி ஆராயப்பட வேண்டிய ஆன்மீகப் பிரச்சனைதான் என்கிறது ஈவான் கோன்சாரோவ்-இன் “ஓப்லமோவ்” நாவல்.
1859ல் வெளிவந்த இந்த நாவல் “ஓப்லமோவிஸம்” என்ற புதிய வார்த்தையை ரஷ்ய மொழிக்கு வழங்கியது. இந்த நாவலின் கதாநாயகனான ஓப்லமோவ் என்ற சிறு நிலச்சுவாந்தார் மிகுந்த சோம்பல் உள்ளவனாக இருக்கிறான். ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அவன் படுக்கையிலேயே கழிக்கிறான். படுக்கையிலிருந்தபடியே தனது அன்றாட வேலைகளைச் செய்து முடிக்கிறான். நாவலின் தொடக்கத்தில் அவனுடைய பண்ணையில் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக அவனுக்குக் கடிதம் வருகிறது. ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பல் எப்படிப்பட்டது என்றால் தனது பண்ணையில் உள்ள பிர்ச்சனைகளைத் தீர்ப்பதற்காக முயற்சியெடுக்கும் ஓபலமோவ் தனது படுக்கையிலிருந்து அதே அறையிலுள்ள நாற்காலிக்கு நகரவே நாவலின் முதல் அத்தியாயத்தின் பெரும் பகுதி தேவைப்படுகிறது.
ஓப்லமோவ் தனது சோம்பலால் சந்தித்த இழப்புக்கைன் பட்டியலாகவே நாவல் தொடர்கிறது. எதிலும் அக்கறையில்லாத ஓப்லமோவை அவனுடைய நண்பர்கள் ஏமாற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஓபலமோவ்-இன் பண்ணையிலிருந்து வரும் முழு வருமானத்தையும் அவர்களே கைப்பற்றியும் கொள்கிறார்கள். நண்பர்களின் சூழ்ச்சியாலும், சோம்பலால் தனது பண்ணையைச் சரிவர பராமரிக்காததாலும் பல முறை நொடித்துப் போகும் ஓப்லமோவ்-வை ரஷ்ய தந்தைக்கும் ஜெர்மன் அன்னைக்கும் பிறந்தவனான மிகுந்த உழைப்பாளியான அவனுடைய நண்பன் ஒருவன் மறுபடியும் மறுபடியும் காப்பாற்றி விடுகிறான். ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பல் அவனுடைய நண்பனின் அத்தனை முயற்சிகளையும் பயனற்றதாக்கி விடுகிறது. ஓப்லமோவ்-வை இந்த அசுரச் சோம்பலில் இருந்து எப்படியேனும் உலுக்கி எழும்பச் செய்ய நண்பன் அவனுக்கு ஓல்கா என்ற பெண்ணை அறிமுகப்படுத்துகிறான். ஓல்காவும் ஓப்லமோவ்-வும் காதலிக்கிறார்கள். நிச்சயதார்த்தம் செய்து கொள்ளும் அளவுக்கு இந்தக் காதல் முன்னேறுகிறது. ஆனால் ஓப்லமோவ்-இன் சோம்பலையும் செயலாற்ற முடியாமல் அவனைத் தடுத்தபடியே இருக்கும் ஒரு வகையான அச்சத்தையும் கண்டு ஓல்கா கடைசி நிமிடத்தில் நிச்சயத்தை ரத்து செய்கிறாள். பின்பு ஓல்காவுக்கும் ஓப்லமோவ்-இன் நண்பனுக்குமே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
நாவலின் இறுதி கட்டத்தில் எப்படியேனும் ஒப்லமோவ்-ஐ அவனுடைய சோம்பலில் இருந்து எழுப்பிவிடுவது என்று ஓல்கா தனது கணவனுடன் அவன் வீட்டிற்குப் போகிறாள். பழைய பண்ணையை இழந்து கொஞ்சம் சிறிய பண்ணையில் வாழும் ஓப்லமோவ் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அவர்களுக்கு பிறந்த மகனுக்கு நண்பனின் பெயரை வைத்திருக்கிறான்.
அவர்கள் மூவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் இந்த நாவலின் மிக அற்புதமான பகுதிகளில் ஒன்று. ஓப்லமோவ் தன்னை உணர்ந்தவனாக தனது சோம்பலுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கிறான். தனது நிலைக்குக் காரணம் ‘ஓப்லமோவிடிஸ்’ என்ற வியாதி என்கிறான். அது கூட பிறந்தது. வெறும் மனித முயற்சிகளால் மாற்ற முடியாதது. ஓப்லமோவ் என்றுமே மாறமாட்டான் என்று ஓல்காவும் அவள் கணவனும் அறிந்து கொள்கிறார்கள். பிறகு ஓப்லமோவ் தூக்கத்தில் செத்துப் போகிறான்.
சோம்பலை மனிதனுக்குள் இருக்கும் ஒரு குறையாகக் கருதுவது நமது மரபு. சோம்பித் திரியேல் என்று அதற்கு நம்மிடையே செய்யுள்களாகவும், பாடல்களாகவும், வாய்மொழியாகவும் பல போதனைகள் உண்டு. ஆனால் ’ஓப்லமோவ்’ நாவலில் சோம்பல் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்யச் சூழலில் பணக்கார வர்க்கத்தினரிடையே நிலவிய பெரும் சோர்வின் வெளிப்பாடாகவே காட்டப்படுகிறது. பண்ணையில் பொருளாதார நெருக்கடி என்று கடித்தத்தால் அறிந்து கொள்ளும் ஓப்லமோவ் படுக்கையிலிருந்து எழ முடியாமல் பலவகையான சிந்தனைகளாலும், பகற்கனவுகளாலும், தனக்குள் நடக்கும் உரையாடல்களாலும் தனக்குள் மூழ்கிக் கிடப்பதாக கோன்சாரோவ் காட்டுகிறார். அதன் பிறகு அவன் மீண்டும் தூங்குகிறான். அப்போது வரும் கனவில் அவன் பெற்றோர் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தார்கள் என்று அவனுக்குக் காட்டப்படுகிறது. பெரும் பணக்காரர்களான அவர்கள் ஓப்லமோவ்-ஐ எந்த வேலையையும் செய்ய விட்டதில்லை. உல்லாசப் பயணம் போகவும், வேறு அர்த்தமில்லாத காரணங்களுக்காகவும் ஓப்லமோவ்-ஐ அதிக்கடி பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனாலும்கூட ஓப்லமோவ்-வின் சோம்பலை அவனுடைய பெற்றோர்களின் வளர்ப்பில் உள்ள குறை என்று மேம்போக்காக மட்டும் கோன்சாரோவ் சொல்லவில்லை. அந்தக் காலத்தில் பணக்காரர்கள் வீட்டு வேலைகள் செய்து தங்கள் கைகளை அசுத்தப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது முதற்கொண்டு மீறமுடியாத சின்னச் சின்ன விதிகள் இருந்தன. அவை எழுதப்படாதவை என்றாலும் அவற்றை மீற ஐரோப்பிய பிரபுக்கள் தயங்கினார்கள். ஏனெனில் சமுதாயத்தில் பிரபுக்களின் வேலை கட்டளையிடுவது, ஏழைகளுக்குத் தந்தையாக இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, தேவையென்றால் தண்டிப்பது. வேலைக்காரர்களின் வேலை சேவகம் செய்வது. கடவுளால் அமைக்கப்பட்ட இந்த முறைமையை மீறினால் இயற்கை தனது சமானத்தை இழந்து உலகம் தலைக்கீழாகிவிடும் என்று நம்பப்பட்டது.
கண்ணுக்குத் தெரியாத, அசைக்கவே முடியாத இந்த விதிகளுக்கு உட்பட்டு ஓப்லமோவ் எதையும் சொந்தமாகச் செய்யும் ஆற்றல் இல்லாதவனாகவே மாறிவிடுகிறான். ரஷ்ய, கிரேக்க மொழிகளில் ‘பாவம்’ என்ற விஷயத்தைக் குறிக்கும் வார்த்தைகள் ‘அத்துமீறுதல்’ என்று அர்த்தம் தருவதில்லை. மாறாக ‘காயப்படுதல்’, ‘குறியைத் தவறவிடுதல்’ என்ற அர்த்த்ததையே தருகின்றன.
அவனைச் சோம்பேறியாக்கிய அவனுடைய சமூகச் சூழலால் காயப்பட்டவனாகவே கோன்சாரோவ் இந்த நாவலில் ஓப்லமோவ்-ஐச் சித்தரிக்கிறார். அவனுடைய சோம்பல் எவ்வளவுதான் வெறுக்கத் தகுந்தது என்றாலும் கடைசிவரை ஓப்லமோவ்-விடம் ஒருவகையான அப்பாவித்தனம் – தஸ்தவியஸ்கி நாவல்களில் சொல்லப்படுவது போன்ற அசட்டுத்தனம் – ஒட்டி இருக்கிறது. அவன் ஓல்காவிடம் பேசும் காதல் பேச்சுக்கள் தந்திரமற்றவையாகவே இருக்கின்றன.
சமுதாயச் சூழல்களும் விதிகளும் அவன்மீது சுமத்திய கனத்தைத் தாங்க முடியாதவனாகவே ஓப்லமோவ் காண்பிக்கப்படுகிறான். கடைசியில் வாழ்க்கை முழுவதும் அவன் விரும்பிய தூக்கத்தின் போதே அவன் நிரந்தரமாகத் தூங்கப் போகிறான்.
சமுதாயம் ஒருவர்மீது விதிக்கும் அசைக்க முடியாத விதிகளால் நாம் எப்போதேனும் திகைத்து நின்றிருக்கிறோம் எனில் நாம் எல்லோரும் ஓப்லமோவ்களே.
கோன்சாரோவ்-இன் ‘ஓப்லமோவ்’ நிறைய பேரால் அறியப்படாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய மிகச் சிறப்பான ரஷ்ய நாவல்.