பெண்ணிய நாவல் என்ற ஒன்று உருவாவதற்கு மிகப் பெரும் தடையாக இன்றுவரை இருந்து வருவது அப்படிப்பட்ட நாவல்களில் சேர்க்கப்படும் ஆண் கதாபாத்திரங்கள்தான் என்பது என் கருத்து. ”பெண்ணிய ஆதிக்கிழவி’ என்று அழைக்கப்படக் கூடிய கேர்ட்ரூட் ஸ்டைன் தொடங்கி சீமோன் பூவார் வழியாக வந்துள்ள பெரும்பாலான பெண்ணிய இலக்கியங்கள் என்பவை ஆண்கள் தம்மை நிலை நிறுத்தக் கட்டமைத்திருக்கும் அதிகார மையங்களுக்கு மாற்றாக பெண்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் அல்லது செய்யக் கூடும் என்ற மாய வலையில் சிக்கித் திணறியுள்ளன. அல்லி ராஜ்ஜியம் என்பது கூட உதட்டுச் சாயமும் நீளமான பாவாடைகளும் அணிந்து கொண்டிருக்கும் ஆண்களின் ராஜ்ஜியத்தின் சாயல்தான் என்று கொலொம்பிய எழுத்தாளர் ஹோசே வர்காஸ் சொல்வது உண்மையாக இருக்கக் கூடும்.
ஒரு வேளை பின்பாலின உயிரிகள் என்றழைக்கப்படுவோர்தான் உண்மையில் பாலின அரசியலைப் பற்றி சிறப்பாகச் சிந்திக்கக் கூடியவர்களோ என்னவோ.
டோரிஸ் லெஸ்ஸிங்-இன் ’தி கோல்டன் நோட்புக்’ என்ற நாவல் 2005ல் டைம் சஞ்சிகையால் 1923ம் ஆண்டிலிருந்து வெளிவந்திருக்கும் நாவல்களில் மிகச் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்த தீவிர வாசிப்பு உள்ளவர்களிடையேகூட சொற்பமான பேர்களே அன்று ரோடிசியா என்றும் இன்று ஸிம்பாபுவே என்றும் அழைக்கப்படும் டோரிஸ் லெஸ்ஸிங்-இன் எழுத்துக்களை அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் ’தி கோல்டன் நோட்புக்’ ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிட்டச் சமுதாயச் சூழலில் முன்னெடுக்கப்பட்ட பெண்ணியம் சார்ந்த விவாதங்களையும் சமுதாய மதிப்பீடுகளின் நகர்வுகளையும் டால்ஸ்டாய், தஸ்தவியஸ்கி நாவல்களின் தத்துவச் செறிவோடும் பெரும் ஆன்மீகத் தரிசனத்தோடும் பேசுகிறது.
கதையின் கதாநாயகியான நாவல் எழுத்தாளர் ஒற்றை ஆளாக தனது மகளை வளர்க்கிறாள். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறாள். நாவல் தொடங்கும் கட்டத்தில் அவளால் எழுத முடியாதபடிக்கு அவளுக்கு மனச்சிக்கல் (ஆங்கிலத்தில் ‘ரைட்டர்ஸ் ப்ளாக்’ என்று அழைக்கப்படுவது). முழுமையாய் நாவல் எழுத முடியாததால் தனது வாழ்க்கை அனுபவங்களை நான்கு வெவ்வேறு வண்ண அட்டைகளுடைய நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைக்க முடிவு செய்கிறாள்.
கறுப்பு நோட்டுப் புத்தகத்தில் ஒரு எழுத்தாளராகத் தனது வாழ்க்கையின் அனுபவங்களைக் குறித்து வைக்கிறாள்.. 1960களில் தென் ரோடிஸியாவை உலுக்கிய இரண்டாம் உலகப் போர்க்காலத்தின் துயரங்கள் அதற்குப் பிறகு ஆங்கிலேய காலனித்துவ அரசுக்கு எதிராக எழுந்த சுதந்திரப் போராட்டம், வெள்ளையர்களுக்கும் கறுப்பினத்தவர்க்கும் இடையே இருந்த நுட்பமான நிற அரசியல் ஆகியவை குறித்த மிக துல்லியமானச் சம்பவங்களின் தொகுப்பாக இந்தக் கறுப்பு நோட்டுப் புத்தகம் இருக்கிறது. அடுத்ததாக, சிவப்பு நோட்டுப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தனது செயல்பாடுகளையும், கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீதும் அதன் செயல்களின் மீதும் அவளுடைய விமர்சங்களும் பேசப்படுகின்றன. மஞ்சள் நோட்டில் அவள் தனது தோற்றுப் போன காதலைப் பற்றியும் தனது முன்னாள் கணவனைப் பற்றியும் எழுதுகிறாள். நீல நிற நோட்டுப் புத்தகத்தில் அவளுடைய நினைவுகள், கனவுகள், உணர்ச்சிகளைப் பட்டியலிடுகிறாள். இந்த நான்கு நோட்டுப் புத்தகங்களின் உள்ளடக்கம் ஒவ்வொன்றும் நாவலின் போக்கில் ஒவ்வொன்றும் நான்கு முறைகள் பேசப்படுகின்றன.
இந்த நோட்டுப் புத்தகங்களின் விவரிப்புகளுக்கு இடையே அவள் தனது வாழ்க்கை குறித்தும், தனது தோழியின் வாழ்க்கை குறித்தும், அவர்களுடைய மாஜி கணவர்கள், குழந்தைகள், காதல்கள் குறித்தும் பேசும் ஒரு குறுநாவலின் பகுதிகள் வந்து வந்து போகின்றன. அந்தக் குறுநாவலின் தலைப்பு “ஃப்ரீ விமென்” அல்லது “சுதந்திரமான பெண்கள்”.
டோரிஸ் லெஸ்ஸிங்-இன் இந்த நாவல் முழுவதும் தோற்றுப்போன திருமணங்கள், கள்ளத் தொடர்புகள், காதல்கள், வெள்ளையர்கள் கறுப்பர்களுக்குச் செய்யும் கொடுமைகள், கறுப்பர்கள் வெள்ளையர்களுக்குச் செய்யும் துரோகங்கள் ஆகியவை மிகவும் விரிவாகப் பேசப்படுகின்றன. கம்பூனிஸ்டு சித்தாங்களில் ஊறித் திளைத்த புரட்சிகரமான பெண்கள் ஆணதிக்கத் திமிர் கொண்ட ஆண்களோடு நீண்ட விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் பத்தொன்பது கதைகளுக்கான குறிப்புக்கள் நாவலுக்குள்ளே தரப்படுகின்றன.
மற்ற பெண்ணிய நாவல்களை ஒப்பு நோக்க லெஸ்ஸிங்-இன் இந்த நாவலின் சிறப்பம்சமே பெண்ணியம் என்பதை வெறும் ஆண்-பெண் விவாதமாகவோ சண்டையாகவோ ‘தட்டையாக’ விவரிக்காமல். பெண்ணியத்தை 1960களில் எழுந்த காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம், வெள்ளையர்-கறுப்பர் இன அரசியல், கம்யூனிசம் போன்ற மிகவும் சிக்கலான பேசு பொருள்களோடு தைரியமாகத் தொடர்புபடுத்தி எழுதியிருப்பதே. லெஸ்ஸிங்-இன் நோட்டுப் புத்தகங்கள் காட்டுவதைப் போல ஆண்-பெண் அரசியல் என்பதுகூட மிக நுட்பமான அரசியல், சமூக, கால, கலாச்சார நகர்வுகளின் ஒரு பிரதிபலிப்பே.
இந்த ஆண்-பெண் சிக்கலை கதைகள் எழுதுவதாலோ, கவிதைகளைக் கம்பீரமாகப் பாடுவதாலோ மட்டும் எளிதில் தீர்த்துவிட முடியாது.
\லெஸ்ஸிங்-இன் நாவலில் துணுக்குத் துணுக்காய்ப் பிளவுபட்டுக் கிடக்கும் கதைகள் (அந்தப் பத்தொன்பது கதைக் குறிப்புக்கள் உட்பட) எளிதில் அர்த்தம் செய்து கொள்ள முடியாத இந்தச் சிக்கலையே முன்னெடுத்து வைக்கின்றன. அந்தச் சிக்கலுக்கு முடிவு இல்லாத, ஒன்றுக்கொன்று தொடர்பிருந்தாலும் எளிதில் பொருள் செய்து கொள்ள முடியாத நோட்டுப் புத்தகக் கதைகளும் குறியீடுகளாக அமைகின்றன. இந்தக் கதைகளை ஒருமித்த வடிவமுள்ள நாவலாக எழுத முடியாத கதாநாயகியின் தவிப்பு அந்தக் குறிப்பிட்டக் காலக்கட்டத்தில் தங்கள் அடிமை நிலையைப் புரிந்து கொண்ட பெண்களின் தவிப்புக்கு உவமையாகிறது.
பெண்கள் சொந்தமாகக் கதை எழுதுவது அன்றும் இன்றும் சிரம மான காரியம்தான்
மாபெரும் கம்யூனீச சித்தாந்தம்கூட லெஸ்ஸிங்-இன் அனுமானத்தில் இந்தச் சிக்கலுக்கு மேம்போக்கான சித்தாந்த வாதத் தீர்வைத் தந்ததே தவிர பெண்களின் அகவாழ்க்கையை அவர்கள் உள்ளுணர்வுகளை அதனால் கொஞ்சம்கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்று இந்த நாவலின் வழியாக லெஸ்ஸிங்-இன் குற்றச்சாட்டு.
உண்மையில் லெஸ்ஸிங்-இன் நாவல் பிரச்சனை அதுதான். அன்புக்கும் பரஸ்பர மரியாதைக்கும் தவிக்கும் மனித இனத்துக்கு 1960களின் அரசியல், பொருளாதார அமைப்புக்களும், அதிகார கேந்திரங்களும் தரும் பதில்கள் மேம்போக்கானவை, லாயக்கில்லாதவை என்பதே லெஸ்ஸிங்-இன் ‘தி கோல்டன் நோட் புக்’கின் அடிப்படை கருத்து.
ஒரு வேளை ஒவ்வொரு பெண்ணுக்கும், ஏன் ஒவ்வொரு ஆணுக்கும் உள்ளே பல வண்ண நோட்டுப் புத்தகளாகத் தேங்கிக் கிடக்கும் கனவுகளையும், வலிகளையும் அறிந்து கொள்ளும் திராணி நமக்கு வந்தால் வெறும் ஆண்-பெண் விவாதக் கூச்சலை விட்டொழித்து மனிதர்கள் ஏதேனும் சமநிலைக் காணக் கூடும்.
லெஸ்ஸிங்-இன் கதாநாயகி நம்புவதுபோல் அந்த நிலை புனைவு இலக்கியம் அனுமதிக்கும் அலசலால் சாத்தியமாகலாம்.