சிங்கப்பூர் இலக்கியம்: அறிந்த இடங்களின் அறியாத ரகசியங்கள்

சிங்கப்பூர் மிகச் சிறிய நாடு.  மொத்தமே 720 சதுர கி.மீக்கள் பரப்பளவு கொண்ட தீவு. மூச்சைப் பிடித்து முயன்றால் அரை நாளுக்குள்ளாகவோ முக்கால் நாளுக்குள்ளாகவோ இதன் ஒரு முனையிலிருந்து அடுத்த முனைக்கு நடந்துபோய் விடலாம் என்ற வகையில் அமைந்திருப்பது. முக்கியச் சிங்கப்பூர்த் தீவைச் சுற்றி இந்நாட்டைச் சேர்ந்த சற்றுப் பெரியதும் சிறியதுமான 62 மற்ற தீவுகள் இருக்கின்றன. இவற்றில் செந்தோசா தீவைத் தவிர வெளியிலிருந்து வருபவர்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மிகக் குறைவான நிலப் பரப்பளவு கொண்ட தீவாக இருந்த போதிலும் சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு `வட்டாரமும் நியாயமாகவோ பொதுச் சிந்தனையின் சற்று அதீதமான கற்பனையாலோ சில சிறப்பம்சங்கள் கற்பிக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு, ஹோலண்ட் சாலையில் வசிப்பவர்கள் எல்லோரும் முரட்டுப் பணக்காரர்கள். ரெட்ஹில், தியோங் பாரு வட்டாரத்தில் அதிகமாகச் சீன மொழி பேசப்படும், அந்த வட்டாரத்தில் வசிப்பவர்கள் கொஞ்சம் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழே உள்ளவர்கள் அல்லது முதியவர்கள். யீஷுன் வட்டாரத்தில் அவ்வப்போது பூனைகள் சித்திரவதைச் செய்து கொல்லப்படும். நல்ல உணவு வேண்டும் என்றால் பழைய ஏர்போர்ட் சாலையில் உள்ள உணவுக் கடைகளை நாட வேண்டும். மார்சிலிங்கிலும் செம்பாவாங்கிலும் பல இந்தியர்கள் இன்றும் வாழ்வதற்குக் காரணம் ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் இருந்த பிரிட்டிஷ் கடற்படை தளத்தில் நிறைய இந்தியர்கள் வேலை பார்த்தது. கேலாங் என்பது சிங்கப்ப்பூரின் சிவப்பு விளக்குப் பகுதி – என்று இப்படி. இந்தப் பார்வைகளின் அடிப்படையில் அந்தந்த வட்டாரங்களில் வாழும் மக்கள், அவர்களுடைய அன்றாட வாழ்க்கை, பேச்சு மொழி, வாழ்க்கை மதிப்பீடுகள் என்பவனவற்றைப் பற்றிப் பழைய சிங்கப்பூரர்களிடையே ஒருவகையான எண்ணமும் இருக்கிறது.

புதிதாக இங்கு வந்து இலக்கியம் படைப்பவர்களுக்கு இந்த நுணுக்கமான வேற்றுமைகள் பிடிபடாமல் போவது இயல்பே. இந்த வேற்றுமைகள் பிடிபட காலம் எடுக்கும். மிகுந்த கவனமும், அயராத உழைப்பும் இதற்குத் தேவைப்படும்.

2015ல் வெரெனா தே என்பவரால் தொகுக்கப்பட்டு ‘பாலிக் கம்போங்’ என்ற பெயரில் வெளிவந்த ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு இந்தக் குறையைப் புனைவின் மூலம் தீர்க்க முற்படுகிறது. சிங்கப்பூரின் பல்வேறு வட்டாரங்களிடையே உள்ள இந்த நுணுக்கமான வேறுபாடுகளையும் ஒவ்வொன்றுக்கும் உள்ள சிறப்பம்சங்களையும் எடுத்துக்காட்டும் எட்டுக் கதைகள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதைகளை அந்தந்த வட்டாரங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்துக்கு வாழ்ந்த சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு கதையின் முடிவிலும் எழுத்தாளருக்கும் அவர்கள் கதையில் குறிப்பிடும் வட்டாரத்துக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் வகையில் ஒரு சிறு குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

யூ மெய் பாலசிங்கம்-ச்சௌவின் முதல் கதையான ‘கலங்கரை விளக்கம்’ கதை மெரின் பேரேட் வட்டாரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்துக்கு மேலே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு கலங்கரை விளக்கத்தைச் சுற்றி எழுதப்பட்டிருக்கிறது. கதையின் முக்கிய பாத்திரமான சிறுமி தான் படித்த ஆங்கில, அமெரிக்கக் கதை புத்தகங்களில் வரும் அழகான வெள்ளை நிறக் கோபுரம் போன்ற கலங்கரை விளக்கங்களைப்போல் சிங்கப்பூரில் இருக்கும் இந்த கலங்கரை விளக்கம் இல்லையே என்று குழம்புகிறாள். நிலப் பற்றாக்குறையுள்ள சிங்கப்பூரில் உள்ள் பல விஷயங்களைப் போலவே தேவைக்கேற்ப அழகியல் கூறுகளைத் தாரை வார்த்து எது வேலை செய்கிறதோ அதை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு இதை ஓர் எடுத்துக்காட்டாக எழுத்தாளர் பயன்படுத்துகிறார்.

நடைமுறைச் சாத்தியங்களை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளும் சிங்கப்பூரின் இந்த அணுகுமுறைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் கதையில் மேலும் பல விவரங்கள். சிறுமி கண்ட கலங்கரை விளக்கம் அவள் அத்தை வாழும் கட்டடத்தின் உச்சியில் இருக்கிறது. அத்தையைப் பார்க்க பெற்றோரோடு போகும் அவள் கட்டடத்தின் உச்சிக்குப் போய்க் கலங்கரை விளக்கத்தைப் பார்க்கலாமா என்று தனது தந்தையிடம் கேட்கிறாள். அதற்கு அவள் தந்தை “முடியாது. சாத்தியிருப்பார்கள். அது சும்மா ஒரு மெஷின்தான். ராத்திரி எரியவிட்டு காலையில் அணைத்துவிடுவார்கள்” என்கிறார்.

ஆனால் இந்தக் கதை கலங்கரை விளக்கத்தைப் பற்றியது மட்டுமல்ல. வாரம் தோறும் வேலைக்குப் போவதால் அந்தச் சிறுமியின் பெற்றோர் அவளை அந்த அத்தையிடம் வாரம் முழுவதும் விட்டு விட்டுப் போகிறார்கள். நடைமுறைச் சாத்தியம் கருதி. பரப்பான வாழ்க்கைச் சூழலில் பல சிங்கப்பூர் சிறுவர்களும் சிறுமிகளும் எதிர்நோக்கும் சவால்தான் இது. ஒரு தலைமுறைச் சிங்கப்பூர் சிறுவர்களின் மனநிலையில் இந்த வழக்கம் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று இந்தக் கதை அற்புதமாகப் பேசுகிறது. அந்நிய வீட்டில் இருக்கும் சிறுமிக்குப் புதிய இடம் பழக நேரம் எடுக்கிறது. இதற்குள் மலேசியாவில் வியாபாரம் செய்யும் கணவர் வீடு திரும்புகிறார். கடன்காரர்களால் தேடப்படும் போது வேற்றாள் – அது சிறுமி என்றாலும் – தனது வீட்டில் இருப்பது கூடாது என்று சொல்கிறாள். சிறுமியை வீட்டிற்கு அழைத்துப் போக வரும் பெற்றோர்கள் அவளை வேறொரு ‘அத்தையிடம்’ அனுப்புவதைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இப்படியே தொகுப்பில் உள்ள மற்ற கதைகள் சிங்கப்பூர் பல்வேறு வட்டாரங்களுடன் தொடர்புடைய விநோதங்களைப் பேசுகின்றன. யௌவ் காய் சாய்-இன் ‘தாஹார்’ என்ற கதையில் ஓய்வு பெறப் போகும் பொருட்காட்சியகப் பொறுப்பாளர் ஒருவர் வருகையாளர்களின் பார்வைக்காக அவர் உருவாக்கியிருக்கும் பழையக் காலச் சாங்கிப் பகுதியின் மாடல் தான் ஓய்வு பெற்ற பிறகு என்னாகும் என்று யோசிக்கிறார். இப்போது அதி நவீன விமான நிலையமும், அழகான நவீன வீடுகளும் ஷாப்பிங் மால்களும் நிறைந்திருக்கும் சாங்கிப் பகுதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பெரிய காலனிய காலப் பாணி பங்களாக்களும், தென்னை மரங்களும், காற்பந்து திடல்களும் நிறைந்த வட்டாரமாக இருந்தது. வளர்ச்சியின் பெயரால் அந்த இடமே மாறிப் போனது போலவே பொருட்காட்சியகத்தை அவருக்குப் பின்னர் நிர்வகிக்கப் போகும் புதிய அதிகாரியும் எல்லாவற்றையும் அடியோடு மாற்ற வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். இந்தச் சமயத்தில் பொருட்காட்சியகத்திற்குள் மர்மமான உருவம் ஒன்று பிரவேசித்திருப்பதாகவும் அது சிறுச் சிறு திருட்டுகளைச் செய்துவிட்டு ஓடிவிடுவதாகவும் புகார்கள் வருகின்றன. உருவத்தைக் கண்ணால் பார்த்த சிலர் அதைக் குரங்கு என்கிறார்கள். சிலர் அதை சிறுவன் என்கிறார்கள். மர்ம உருவத்தைத் தேடிப் போகும் அதிகாரி கடைசியில் சிறு வயதில் தான் செய்த தவறால் சாங்கியில் அப்போது இருந்த பெரிய சாக்கடைகளில் ஒன்றில் மாட்டிச் செத்துப் போன தாஹார் என்ற சிறுவனின் உருவம்தான் அது என்று கண்டுபிடிக்கிறார்.

வளர்ச்சி என்ற பெயரில்அதி விரைவில் மாறி வரும் சிங்கப்பூருக்கும், வளர்ச்சியின் பெயரால் சிங்கப்பூரர்கள் இழந்ததற்கும் நினைவுச் சின்னங்களாக இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் இருக்கின்றன. மற்றொரு கதையில் பழைய ஹோலண்ட் சாலையில் வேறொரு பெண் கற்பழிக்கப்பட்டுச் செத்துப் போன அதே அமைதியான இடத்தில் கதையில் வரும் பணக்காரப் பெண்ணும் மெதுவோட்டம் பயிலச் சென்ற போது மர்மமான வகையில் செத்துப் போகிறாள். செத்த பிறகு தனது குடும்பத்தார் தனக்கு நடத்தும் ஈமக் காரியங்களைப் பார்க்கிறாள். தனது பாய்பிரண்டோடு கண்மூடி தனக்குத்தானே மொழிபெயர்க்கப்பட்ட சமஸ்கிருதக் கவிதை ஒன்றை ஒப்பித்தபடியே (ஹோலண்ட் சாலை பணக்காரப் பெண் அல்லவா!) கொண்ட முதலும் (கடைசியுமான) உடல் உறவை நினைவுக்குக் கொண்டு வருகிறாள். பேயாய் மாறிய பின்னர் அவள் வீட்டுக்கருகில் மலேசியாவுக்குப் போகும் பழைய ரயில் பாதை அவள் நினைவுக்கு வருகிறது.

மொழிநடையாலும் பேசும் பொருளாலும் இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று குவி லீ சுயீயின் ‘தாத்தாவின் மீன் தொட்டி’. கைத்தொலைப்பேசிகள் புழக்கத்துக்கு வராத காலத்தில் கதையின் முக்கியக் கதாபாத்திரமான சிறுவனின் பாட்டி செத்துப் போகிறார். பழைய சாம்பல் நிற சிங்கப்பூர் தொலைப்பேசி நிறுவனத் தொலைபேசியின் அருகே இருக்கும் சின்ன நோட்டுப் புத்தகத்தைப் பார்த்துப் பார்த்துச் சிறுவனின் அம்மா தீவு முழுவதும் பரவிக் கிடக்கும் சொந்தக்காரர்களுக்குத் தகவல் சொல்கிறார். அதே சமயம் வளர்ச்சியின் முன்னால் நீ சூனில் இருந்த கம்பத்தில் அந்தச் சீனக் குடும்பம் வாழ்ந்த கூட்டு வாழ்க்கையும், கம்பம் அழிக்கப்பட்டு சிங்கப்பூர் எங்கும் அடுக்குமாடிக் கட்ட டங்கள் உருவாக அந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை பறிபோனதையும், கம்பத்து வீட்டு வாசல்களில் அரட்டையடித்த குடும்பப் பெண்களுக்கு அரசாங்கம் வழங்கிய தொலைப்பேசியே தொடர்புச் சாதனம் ஆனதையும் குவியின் கதை மிகச் சிறப்பாகச் சித்தரித்துக் காட்டுகிறது.

இத்தொகுப்பில் மற்றொரு சிறந்த கதை ரெட் ஹில் வட்டாரத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்ததென்றும் ஒரு சிறுவனின் ரத்தத்தால் (இளவரசியின் ரத்தம் என்று சொல்வோரும் உண்டு) அந்தப் பகுதியின் மண் எப்படி சிவப்பானதென்றும் சொல்லித் தொடங்கும் டோரா டான்-இன் கதை. அதில் வரும் கிழவி ரெட்ஹில் வட்டாரத்தைப் பற்றி இனிய நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கிறாள். ஆனால் அவள் குழந்தைகளுக்கு அது வறுமையும் குடும்பச் சச்சரவுகளும் குடிகாரத் தந்தையின் அர்த்தமில்லாத வன்முறைகளும் நிறைந்த வட்டாரமாகவே தெரிகிறது.

சிங்கப்பூரில் வறுமை இல்லை என்று யார் சொன்னார்கள்?

இப்படி இடமாற்றத்தாலும் வளர்ச்சியினாலும் சிங்கப்பூரர்கள் வாழ்க்கையிலே ஏற்பட்ட சின்னச் சின்ன இழப்புக்கள், சின்னச் சின்னக் கவலைகள்.

ஆங்கிலச் சிறுகதை இலக்கியத்தின் உச்சம் என்று இந்தத் தொகுப்பைச் சொல்ல மாட்டேன். அளவுக்கு அதிகமாகவே வளர்ச்சியை விமர்சித்தலும், பழைய நாட்களைச் சிலாகித்தலும் இந்தத் தொகுப்பின் குறைகள்.

ஆனால், மறைந்து போனதை நினைவில் வைத்திருக்க உதவுவது இலக்கியத்தின் ஒரு பணி என்றால், ‘பாலிக் கம்போங்’ என்பதும் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் தரமான சிங்கப்பூர்ச் சிறுகதைத் தொகுப்பே.

[பாலிக் கம்போங் என்ற மலாய் வார்த்தைகளுக்கு வீட்டுக்குத் திரும்புதல் என்று பொருள். பேச்சு வழக்கில் விடுமறைகளின்போது ஊருக்கு/குடும்பத்துக்குத் திரும்புவதைக் குறிக்கும் சொற்றொடராகவும் பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s