ஃபிலிப் ரோத் – சொர்க்கத்தின் கறுப்புப் பகுதிகள்

எல்லாச் செல்வச் செழிப்புக்களும் உடைய ஒரு நாட்டில் அமர்ந்து கொண்டு தீவிர இலக்கியம் படைக்க முடியுமா என்ற உரையாடல் அண்மையில் எழுவதுபோல் எழுந்து அடங்கிப் போனது. ஃபிலிப் ரோத் என்ற அமெரிக்க எழுத்தாளரின் 1997ல் வெளிவந்த An American Pastoral என்ற நாவல் இந்த உரையாடலுக்குப் பயனுள்ளதாக அமையும்.

அமெரிக்காவில் 1940களின் இறுதியில் கல்லூரி மாணவனான யூத இளையன் ஒருவனைப் பற்றியக் கதை. பொதுவாகவே யூதர்களுக்கென்று குறிப்பிட்ட அங்க லட்சணங்கள் உண்டு.  வளைந்த பெரிய மூக்கு, கறுப்பான சுருட்டைத் தலைமயிர், குள்ளமான உருவம் என்று பல நூற்றாண்டுகளாகவே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் யூதர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் ‘வெனிஸ் வணிகன்’ என்ற நாடகம் 1900களின் மத்திய பகுதிவரை மேடையேற்றப்பட்ட போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்தோம் என்றால் அதில் பணவெறி பிடித்த யூத வணிகனாக வரும் ஷைலாக்காக நடிக்கும் நடிகர் இத்தகை முக லட்சணங்களைக் கொண்டவராகவே இருப்பதைக் காணலாம்.

யூதர்களின் இதே அங்க லட்சணங்கள் ஹிட்லரின் நாஜி ஆட்சியின் போது செய்தித்தாள்களிலும், அரசுச் சுவரொட்டிகளிலும் கேலிச்சித்திரங்களாக தனித்து எடுத்துக் காட்டப்பட்டன. பொன்னிறமான தலைமயிரும் நீல நிறக் கண்களும் கொண்ட டியூடோன் இனத்தைச் சேர்ந்த் ‘ஆரிய’ ஜெர்மானியர்களுக்கு யூதர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றும், உழைப்பையே மூலதனமாகக் கொண்டு வாழும் ஜெர்மானியர்கள் பணவெறியும் காம வெறியும் அதிகமுள்ள யூதர்கள் காலங் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்றும் நாஜி பிரச்சாரத்துக்கு இத்தகையச் சித்தரிப்பு உதவியது.

ஒரு நாட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, மக்கள் கூட்டத்தையோ அப்புறப்படுத்த சர்வாதிகாரிகள் கையிலெடுக்கும் முதல் ஆயுதம் அந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் உள்ளவர்கள் அத்தனைப் பேரையும் அந்நியர்களாக வர்ணிப்பதும், அதே சமுதாயத்தில் வாழும் மற்றவர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டும் விஷயங்களைக் கோடிட்டுக் காட்டி அவற்றை ஊதிப் பெரிதாக்குவதும், அவர்கள் சமூகத்துக்குச் செய்த துரோகங்களைத் துல்லியமாகப் பட்டியலிடுவதும்தான் என்று சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் ஃபிலிப் ரோத்தின் நாவலின் கதாநாயகனாக வரும் யூத இளைஞனின் தோற்றம் மற்ற யூதர்களைப்போல் இல்லை. அவன் நல்ல உயரமாக, நல்ல துல்லியமான முக வெட்டோடு, பொன்னிறமான தலைமயிரோடு இருக்கிறான். அவன் அழகைக் கண்டு சொக்கும் மற்ற யூதர்கள் அவனுடைய தோற்றப் பொலிவு காரணமாக அவனை ‘ஸ்வீடன்காரன்’ என்று புனைப்பெயர் இட்டு அழைக்கிறார்கள்.

அமெரிக்காவில் வெற்றியடைந்த வாழ்வு எதையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதைக் குறிக்க ‘அமெரிக்கக் கனவு’ என்ற சொற்றொடர் உண்டு. தலைசிறந்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு, நிறைய லாபம் தரும் சொந்தத் தொழில், பிறர் பார்த்து ஆச்சரியப்படும்படி அழகான மனைவி, சமூகத்தில் நல்ல அந்தஸ்து, முக்கியமானவர்களோடு நெருங்கிய தொடர்பு என்று அந்தப் பட்டியல் நீளும்.

ஆனால் நாவல் தொடங்கும் 1940களிலும் 1950களிலும் அமெரிக்கக் கனவு என்பது WASP என்றழைக்கப்பட்ட வெள்ளை நிற ஆங்கில பிராடஸ்டண்டு வம்சாவளி அமெரிக்கர்களுக்கு மட்டும் உரியதாகக் கருதப்பட்டது.

அமெரிக்கக் கனவின் முழு வரையறைப்படியே நாவலில் வரும் இந்த வெள்ளை பிராடஸ்டண்டு கலாச்சாரத்து அந்நியனான யூத இளைஞன் கல்லூரியின் மிகச் சிறந்த விளையாட்டு வீரனாக விளங்குகிறான். சாதாரணமாக யூத இளைஞர்களைத் திரும்பிப் பார்க்கத் தயங்கும் அமெரிக்க வெள்ளை இன கிறிஸ்துவப் பெண்கள் அவன் மீது மோகம் கொள்கிறார்கள். அது மட்டுமில்லாமல் அவன் இரண்டு வருடங்கள் அமெரிக்க இராணுவத்திலும் சேர்ந்து பணியாற்றி எல்லோரும் பாராட்டும் வீரனாகத் திகழ்கிறான். கிறிஸ்துவப் பெண்ணான மாகாண அழகிப் பட்டம் பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு தனது தந்தையின் வெற்றிகரமான கையுறைகள் தயாரிக்கும் தொழிலைக் கவனித்துக் கொண்டு நகரத்தின் மிக அழகிய பகுதியில் மிக அழகான வீட்டில் வசிக்கிறான். தொழில் வளர அவனும் பெரும் செல்வந்தனாகிறான். அவனுக்கு ஒரு மகள் பிறக்கிறாள்.

தோற்றப் பொலிவிலிருந்து, பணம், அழகான மனைவி, சமூக அந்தஸ்து, பிரம்மாண்டமான வீடு எல்லாம் இந்த யூத இளைஞனுக்குக் காட்டுவதன் வழியாக இரண்டு விஷயங்களை வாசகர்களின் முன்னால் வைக்கிறார்.

ஒன்று, எல்லோரும் சமமானவர்களே என்று உரக்கச் சொன்னாலும் அமெரிக்கச் சமுதாயத்தில் நிலவும் இன, நிறவாரியான ஏற்றத் தாழ்வுகள். இதில் தம்மிடையில் பொன்னிறமான தலைமயிரும் நீலக் கண்களும் உள்ளவனை பொதுவான இனத் தோற்ற இயல்புகளையும் மீறிக் கொண்டாடும் நடுத்தர வகுப்பு யூதர்களின் அறியாமை அல்லது கள்ளத்தனம்.

இரண்டு, அமெரிக்கர்களின் நம்பிக்கைப்படி ‘நிறைவானது’ அல்லது ‘எதுவுமே குறைவில்லாதது’ என்று கருதப்படும் அமெரிக்கக் கனவு வரையறைப்படி அமைக்கப்பட்ட வாழ்வு எல்லோரும் சொல்வதைப்போல் உண்மையில் நிறைவானதுதானா என்ற கேள்வி.

ஏனென்றால் கல்லூரியில், சமூகத்தில், குடும்ப வாழ்க்கையில், தொழிலில் உச்சத்தை அடையும் சீமூர் என்ற அந்த யூத இளைஞனின் வாழ்க்கையும் வசதியும் அவன் ஒரு தவறும் செய்யாமலேயே அவனையும் மீறிய சம்பவங்களால் நிலைகுலைந்து சின்னாபின்னமாவதாக ஃபிலிப் ரோத்தின் நாவல் காட்டுகிறது. சீமூர் தனது வெற்றியின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் வெடிக்கும் வியட்நாம் போரும் அதில் அமெரிக்காவின் தலையீடும் அவன் உலகத்தைப் புரட்டிப் போடுகின்றன. அமெரிக்கத் தெருக்களில் போருக்கு எதிராக ஹிப்பி இளைஞர்கள் போராடுகிறார்கள். நாடு முழுவதும் கட்டுப்பாடுகளற்ற காமமும், எல்லாவற்றையும் மாற்றிப் போடக்கூடிய தேவையான ஒரு உலகம் தழுவிய புரட்சியைப் பற்றிய பேச்சும், ராக் அண்ட் ரோல் பாடல்களும், போதைப் பொருள்களும் பரவுகின்றன.

சீமூரின் மகள் வியட்நாம் போருக்கெதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு ஒரு தபால் நிலையத்தில் குண்டு வைக்கிறாள். குண்டு வெடிப்பில் தெருவோரமாகப் போய்க் கொண்டிருந்த ஒருவர் இறக்கவே அவள் தலைமறைவாகிறாள். அதன் பிறகு அவள் மேலும் பல குண்டுகள் வைத்திருக்கிறாள் என்பதும் அதனால் பலர் மாண்டிருக்கிறார்கள் என்பதும் அவள் வழியாகவே சீமூருக்குத் தெரிய வருகிறது.

அதே சமயம் சீமூரின் மனைவி வெள்ளை அமெரிக்கப் பணக்காரன் ஒருவனோடு கள்ளத் தொடர்பு வைத்திருப்பதும் அவனுக்காக அவள் முகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அழகு படுத்தியிருப்பதும் சீமூருக்குத் தெரிய வருகிறது. ஆனால் அவனேகூட தனது மகளின் பேச்சுப் பயிற்றுவிப்பாளரான ஒரு யூதப் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தபடியால் அவளிடம் எதுவும் கேட்காமல் இருந்து விடுகிறான்.  அவன் உறவு வைத்துக் கொண்டிருந்த பெண்ணும் அவள் கணவரும்தான் அவன் மகள் தலைமறைவான போது அடைக்கலம் கொடுத்து உதவியவர்கள் என்று சீமூருக்குப் பின்பு தெரிய வருகிறது.

ஆங்கிலத்தில் ‘பாஸ்டோரல்’ என்ற வார்த்தைக்கு மிக அமைதியான, உன்னதமான வாழ்க்கைச் சித்திரம் என்ற பொருள் உண்டு.

ஜான் மில்டனின் நீண்ட கவிதையான ‘இழந்த சொர்க்கம்’ போலவே மிக உன்னதமான சொர்க்க நிலையிலிருந்து அதல பாதாளத்துக்கு விழும் ஒருவனின் கதையை ஃபிலிப் ரோத்தின் இந்த நாவல் மையமாகக் கொண்டிருக்கிறது. மில்டனின் கவிதையை நினைவுறுத்தும் வகையிலேயே தனது நாவலை ‘சொர்க்கம் நினைவுபடுத்தப்படுதல்’, ‘வீழ்ச்சி’, ‘இழந்த சொர்க்கம்’ என்று மூன்று பகுதிகளாக ரோத் பிரித்துள்ளார்.

மில்டனின் கவிதையில் மனிதர் சொர்க்க நிலையிலிருந்து விழுந்து பின் மீண்டும் சொர்க்கத்தில் சேர்க்கப்படுகிறான். ஆனால் ரோத்தின் நாவலில் மீட்சி என்பது இல்லை. மீட்சியே இல்லாத சீமூரின் இந்த வீழ்ச்சி வாசகர்களைக் கலங்க வைப்பதாக இருக்கிறது.

வாழ்க்கையின் எல்லா வகையான வளங்களையும் பெற்றுள்ள ஒருவன் தன் தலையீடில்லாமல் தன்னைச் சுற்றி நடக்கும் சரித்திர, அரசியல், சமூக நகர்வுகளால் சீரழிந்து போவது எதனால் என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது.

பண்டைய கிரேக்கர்கள் தங்கள் தகுதியை மீறி சொந்த அழகிலோ, அறிவிலோ, செல்வத்திலோ கர்வப்படும் மனிதர்களைத் தெய்வங்கள் கடுமையாகத் தண்டித்து அவர்கள் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கும் என்று நம்பினார்கள்.  பைபிளின் பழைய ஏற்பாட்டு வருணனைகள் சிலவற்றிலும் இந்த நம்பிக்கையின் சாயலைக் காணலாம். ஒரு வகையில் பார்க்கப் போனால் யூதனான சீமூர் தன் தகுதியையும் மீறி அதுவரை வெள்ளை கிறிஸ்துவ அமெரிக்கர்களுக்கே வழிவிட்ட அமெரிக்கக் கனவைத் தனது ‘தகுதியை’யும் மீறி அனுபவிக்கிறான். தெய்வங்களில் செயல்போல் தர்க்கத்துக்குள் அடங்காத நிகழ்வுகளால் அவன் வாழ்க்கை அழிந்து போகிறது. வெள்ளை அமெரிக்கன் ஒருவனோடு அவன் மனைவி கொண்டிருக்கும் கள்ளத் தொடர்பு உட்பட சீமூரின் யூத அடையாளம் கறுப்பு நிழலாய் அவனைத் தொடரவே செய்கிறது,

ரோத் இந்நாவலின் கதை சீமுரின் அழிவுக்குக் காரணங்களைத் தேடிப் போகும் வேறொரு யூதனின் பார்வையில் சொல்லப்படுவதுபோல எழுதியிருக்கிறார். சீமூரின் கதையை மட்டும் சொல்லாமல் நாவல் சித்தரிக்கும் ஒவ்வொரு காலக் கட்டத்தின் யதார்த்த்தை நாவலுக்குள் கொண்டு வரும் வகையில் கையுறைத் தொழிலின் நுட்பங்கள், அந்தந்தக் காலத்தில் ஆட்சி செய்த அமெரிக்க அதிபர்களின் குணாதிசயங்கள், நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கை விவரங்கள், வியட்நாம் போர் எதிர்ப்புக் கூட்டங்களில் பேசப்பட்ட முக்கியப் பேச்சுக்கள் என்று அனைத்தையும் நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். இதனால் இந்த நாவல் உயிர் பெற்று மிளிர்கிறது.

நாவல் என்பது வெறும் சம்பவங்களை அடுக்கி வைத்துப் புனையப்பட்ட நீண்ட நெடிய கதை அல்ல. அது, முழுமையான ஒரு வாழ்க்கைச் சூழலைச் சகல விவரங்களோடும் அழகியல் உணர்ச்சியோடு வாசகனின் கண்களுக்கு முன்னால் கொண்டு வருவது.

அந்த வகையில், ஃபிலிப் ரோத்தின் An American Pastoral மிகச் சிறந்த நாவல்.

[அமெரிக்கன் பாஸ்டொரல் 2016ல் திரைப்படமாக வந்தது.]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s