டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை

இலக்கியத்தின் மாபெரும் பணிகளில் ஒன்று மனித சமுதாயம் மறக்கக் கூடாத துயரச் சம்பவங்களை காலத்துக்கும் மனிதர்களுடைய கூட்டு மனதில் அழியாத நினைவாகத் தேக்கி வைப்பது,இச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவே மிஞ்சி இருப்பவர்கள் ஆற்றும் கடமையாகவும் அஞ்சலியாகவுமே கருதப்படுகிறது.

இந்தப் பார்வையின்படி சாமானிய இலக்கியத்துக்கும் தலைசிறந்த இலக்கியத்துக்கும் உள்ள மிக முக்கியமான வேற்றுமைகளில் இந்த நினைவுகூர்தல் ஒன்றாகிறது,

சாமானியப் படைப்புக்கள் இடங்களைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், குறிப்பிட்ட காலச் சூழ்நிலைகளைப் பற்றியும் எவ்விதமான ஆழமான, துல்லியமான விவரங்களையும் தராமல் பொத்தாம் பொதுவாகச் சம்பவங்களை அள்ளித் தரும் கேளிக்கை இலக்கியமாகவே இருந்து மறைகின்றன. தம்முள் அடங்கியிருக்கும் மனிதர்களின் கதைகளைப் பற்றிய விவரங்களைக் கூட வாசகர் முன் படைக்க இடம்தராத சோம்பலும் அலட்சியமுமே சாமானியப் படைப்புக்களின் தலையாய இலக்கணம் எனலாம்.

தலைசிறந்த படைப்புக்கள் இடங்களையும், மனிதர்களையும், கால விவரணைகளையும் கலைநயத்தோடு தமக்குள் பெயர்த்துக் கொண்டு வருவதில் அக்கறை காட்டுகின்றன. தனது நாவல் கலை என்ற புத்தகத்தில் இயந்திரமயமாதலாலும், உலகமயமாதலாலும் மறக்கப்பட்ட சாதாரண மனிதர்களின் வாழ்க்கைகளை வாசகர்களின் கவனத்துக்கும், நினைவுக்கும் கொண்டு வருவதுமே நாவல்கள் உருவானதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்கிறார்.

இவ்வகையில் ஹிட்லர் 1938லிருந்து – 1945 வரை இடைபட்ட ஏழு ஆண்டுகளில் அறுபது லட்சம் யூத இன மக்களைக் கொன்று குவித்த ஹோலோகோஸ்ட் என்ற சம்பவம் ஐரோப்பிய, இஸ்ரேலிய, அமெரிக்க நாவல்களில் பேசப்படும் பொருளாகவே இன்றுவரை இருந்து வருகின்றன. ஆன் ஃபிராங்கின் டைரி தொடங்கி காயிம் பொத்தோக், ஏமொஸ் ஆஸ், எலி வீசல் ஆகியோரின் நாவல்கள் இவ்வகை இலக்கியத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்கள். அண்மையில் வெளியான அந்தோணியோ இத்தூர்பேயின் தி லைப்ரேரியன் ஆஃப் ஆவிஸ்விட்ஸ் நாவலையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம்.

இந்த வரிசையில் கதையாலும் நாவல் கட்டுமானத்தாலும் மிகச் சிறந்த படைப்பாக நான் கருதுவது W.G Seabaldஇன் The Emigrants என்ற நாவலை. இது ஜெர்மன் மொழியில் 1993ல் வெளிவந்தது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் னைவா, வரலாற்றுப் பதிவா என்று திண்டாட வைக்கும் அளவுக்கு மிகத் துல்லியமான விவரணைகள். நாவலின் கட்டமைப்பும் வடிவமும் இந்த மயக்கத்துக்கு வலு சேர்க்கிறது. ஸீபால்ட் தனது நாவலை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் தனக்கு எப்போதோ பரிச்சயமானவர்களின் கதைகளை (வாழ்க்கைச் சரித்திரத்தை?) எழுதியிருக்கிறார். நாவலின் இடையிடையே நாவலில் காட்டப்படும் கதாபாத்திரங்களின் குடும்பப் புகைப்பட ஆல்பங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை என்று சொல்லப்படும் புகைப்படங்கள் வருகின்றன. ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் அந்தப் பகுதியில் சித்தரிக்கப்படும் மனிதரின் கல்லறை வாசகம்போல் பிறந்த தேதி, இறந்த தேதி, அவரைப் பற்றிய சின்ன வாசகம் ஒன்று, இந்தத் துல்லியமான விவரங்கள் சேர்ந்து புனைவையும் அது காட்டும் இழப்பையும் கனமாக்குகின்றன.

ஹிட்லர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டபோதிலும் லட்சக்கணக்கானோர் செத்துப் போன பிறகு அவர்கள் மட்டும் உயிரோடு இருப்பதை அர்த்தம் செய்து கொள்ள முடியாமல் தோல்வியுறும் யூதர்கள்தான் தி எமிகிரண்ட்ஸ் நாவலின் கதாநாயகர்கள். வன்முறையிலிருந்து தப்பிப் பிழைப்பதே குறிக்கோள் என்று நம்மில் பலர் எண்ணி இருப்போம். செத்தவர்களுக்கு ஒரு முறைதான் சாவு. தப்பிப் பிழைப்பவர்கள் தப்பிப் பிழைத்தோமே என்ற குற்ற உணர்ச்சியால் வாழ்க்கை முழுவதும் மறுபடி மறுபடி சாகிறார்கள்.

ஸீபால்ட்டின் நாவல் ஹோலோகாஸ்ட் நாவல்தான். ஆனால் மற்ற ஹோலோகாஸ்ட் நாவல்களைப் போல் இதில் வரும் வார்த்தைகளும், புகைப்படங்களும், நினைவுக் குறிப்புக்களும் நாஜிக்களின் மரண முகாம்களைப் பற்றியவை அல்ல, அவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மரண முகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களைப் பற்றியவை.

இங்கிலாந்தில் வாடகைக்கு வீடு பார்க்கப் போகும் போது ஸீபால்ட் சந்திக்கும் கிழவன் ஒருவன் நாஜிக்களின் காலத்தில் லித்துவேனியாவில் ஏழையாக இருந்தவன். இங்கிலாந்திற்கு வந்து தன் யூதப் பெயரை ஆங்கிலப்படுத்தி பெரும் செல்வந்தனாகிறான். கடைசியில் வாழப் பிடிக்காமல் வேட்டைத் துப்பாக்கியால் தன் தலையில் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான்.

ஜெர்மனியில் ஸீபால்ட்டுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் போரில் ஏற்பட்ட அனுபவங்களால் அடைசலான இடங்களில் இருக்க அச்சப்படுகிறார். இது அவர் வாழ்க்கையை முற்றாக முடக்கிப் போடுகிறது. கடைசியில் இந்த மன உளைச்சல் தாங்க முடியாதவராக அந்த ஆசிரியர் விரைந்து வரும் ரயிலின் முன்னால் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்.

ஸீபால்ட்டின் பெரியப்பாக்களின் ஒருவர் போருக்குப் பின் அமெரிக்காவில் பெரும் பணக்காரர்களிடம் பட்லராக இருந்துவிட்டுக் கடைசியில் தானே பைத்தியக்கார மருத்துவமனையில் போய் சேர்ந்து கொள்கிறார்.

தன் பெற்றோரைப் பற்றி என்றுமே பேசாத ஜெர்மானிய ஓவியன் சாகும் முன்னால் ஹிட்லரின் மரண முகாமுக்குப் போகும் முன்னால் போர்க்காலம் முழுவதும் அவன் தாய் எழுதியிருந்த டைரிகளை ஸீபால்ட்டிடம் ஒப்படைக்கிறான்.

மிகக் கொடுமையான, வன்முறை மிகுந்த சம்பவங்களைப் பற்றிச் சொல்கிறோமே என்ற ஸீபால்ட் அலட்டிக் கொள்ளவில்லை. மிகத் துல்லியமான உரைநடையிலேயே தனது நாவலை எழுதியிருக்கிறார். நாடகத்தனமான சம்பவத் திருப்பங்கள் இல்லாமல் சின்னச் சின்ன விவரங்களால் அவர் காட்டும் மனிதர்களின் இழப்பைச் சொல்லி அவர்களின் வாழ்க்கையைச் சூழ்ந்திருக்கும் பெரும் அவலத்தைத் தெளிவாகக் காட்டுகிறார்.

இதெற்கெல்லாம் மேலாக, இந்த நாவலில் ஹோலோகாஸ்ட் என்ற சம்பவம் நேரடியாகக் குறிப்பிடப்படாது  மனிதர்களின் மறதிக்குக் குறியீடாய்  அமைகிறது. ஸீபால்ட் ஒவ்வொரு பக்கத்திலும் ஹிட்லர், ஜோலோகாஸ்ட் என்று (மற்ற நாவல்களில் உள்ளதைப்போல்) மீண்டும் மீண்டும் கோடிட்டுக் காட்டுவதை விடவும் ஹோலோகாஸ்ட்டின் பெயரைக் கூட இந்த நாவலில் பக்கங்களில் குறிப்பிடாத அவருடைய மௌனம் வாசகனை அசைத்துப் பார்க்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் செய்யும் கொடுமைகளை மறக்கலாகாது என்று இந்தப் பதிவைத் தொடங்கியிருந்தேன். அதுதான் உண்மையும்கூட.

இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களுகோ பிரச்சனை வேறு, அவர்கள் பிரச்சனை மறதி அல்ல.  ஓயாத நினைவு, முடிவே இல்லாத நினைவுபடுத்தல். இந்த நினைவுகளை அர்த்தப்படுத்த முடியாமல் இந்த நாவலின் கதாபாத்திரங்கள் மாய்ந்து போகிறார்கள்.

வயதாக ஆக முதியவர்களுக்கு மறதி பெரும் தண்டனை என்பார்கள். ஸீபால்ட்டின் தி எமிகிரண்ட்ஸ் நாவலில் வரும் மனிதர்களுக்கு அவர்கள் மனதிற்குள் தேக்கி வைத்திருக்கும் நினைவுகளே பெரும் தண்டனை.

3 thoughts on “டபிள்யூ. ஜி. ஸீபால்ட் – நினைத்தல் என்னும் பெரும் தண்டனை

 1. நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். முக்கிய இலக்கிய விஷயங்களை நீட்டி முழக்காமல் அளவாக எழுதி வருகிறீர்கள்.வாசகரை உள்ளிழுக்கும் உத்தி இதுவெனக் கொள்கிறேன்.மகிழ்ச்சி

  Like

 2. //மனதுக்குள் தேக்கி வைத்திருக்கும் நினைவுகளே பெரிய தண்டனை// தொடர்ச்சியாக நல்ல நல்ல படைப்புகளை அறிமுகம் செய்கிறீர்கள் தோழர். இந்த நாவல் தமிழில் வந்திருக்கிறதா?

  Like

  1. இல்லை தோழர். இது வரவில்லை என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பிழையாகக் கூட இருக்கலாம்…

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s