காஃப்கா: நாதியற்றவர்களின் கதைகள்

1750 தொடங்கி 1850வரை இங்கிலாந்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்த தொழில்புரட்சி ஐரோப்பியக் கண்டத்தின் பழைய பொருளாதாரக் கட்டமைப்பையும் சமுதாய உறவுகளையும் மீறி ஐரோப்பிய ஆன்மாவிலும் ஆன்மீக வாழ்விலும் அதிர்ச்சியளிக்கக் கூடிய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நூற்றாண்டு காலத்துக்குப் பல அறிவியல் துறைகளில் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாகப் புறப்பட்டு வந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கள் (இன்றுள்ள கணினித் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்களைப் போலவே) துணி நெய்தல், உணவு தயாரிப்பு, தச்சு, தொலைத்தொடர்பு போன்ற அன்றாட தொழில்களின் உள்ளடக்கத்தையும் வழிமுறைகளையும் மிக விரைவாக, மாற்றியமைத்தன

நாளுக்கு நாள் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்த தீவிர தொழில்முறை மாற்றங்களை அலசி ஆராய்ந்து  அவற்றுக்கு ஆதரவானவோ எதிராகவோ ஓரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு இடம் கொடுக்காத வகையில் நடந்தேறிய இந்த மாற்றங்களின் வேகம் அன்றுவரை ஐரோப்பியாவில் நிலவி வந்த அரசியல், பொருளாதாரம், சமூக உறவுகள், அற மதிப்பீடுகள் சார்ந்த அத்தனை முடிவுகளையும் ஒரேயடியாக நசியச் செய்தது.

சராசரி மக்கள் கும்பல் கும்பலாக விவசாயத்தை விட்டு நகரங்களில் வேலை தேடிக் குடிபுகுந்தார்கள். அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த தொழிற்சாலைகள் இவர்களைச் மிகச் சொற்பமான சம்பளத்தைக் கொடுத்து விழுங்கிக் கொண்டன. நகரங்களுக்குப் படையெடுத்த லட்சோப லட்சம் ஏழைகள் வசிக்கப் பறவைக் கூடுகளையொத்த நூற்றுக்கணக்கான வீடுகளை உள்ளடக்கிய உயரமான அடுக்குமாடிக் கட்டடங்கள் நகரங்களில் கட்டப்பட்டன.

அருகருகே இருந்த அடுக்குமாடி வீடுகள் மனிதர்களிடையே முன்னெப்போதும் இல்லாத நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடையேஅறம் மற்றும் குடும்ப உறவுகள் சார்ந்த சவால்களையும் பிறழ்ச்சிகளையும் ஏற்படுத்தின.

மனிதர்கள் எட்டிலிருந்து ஐந்து மணிவரை உழைக்கும் அன்றாட வாழ்க்கை முறைக்கும், கூட்டம் கூட்டமாகத் தொழிற்சாலை உணவுக்கூடங்களிலும் கடைகளிலும் போய் உண்பதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். நகரத்தில் குழுமியிருக்கும் மக்களை வேலை இல்லாத நேரங்களில் மகிழ்விக்க கிளப்புகள், நாடகங்கள், இசைக் கச்சேரிகள், விளையாட்டுக்கள், தொழில்முறை விபச்சாரம் என்ற பல கேளிக்கைகள் செழித்து வளர்ந்தன.

தொழில்புரட்சியால் உண்டான இந்த மாற்றங்களை மார்க்ஸ் ஏங்கில்ஸ் போன்றவர்கள் அரசியல், சமூக தத்துவார்த்தங்களின் அடிப்படையில் விமர்சனம் செய்தார்கள்.

இலக்கியத்தில் சார்லஸ் டிக்கன்ஸ், விக்டர் ஹூகோ, எமில் ஸோலா, மேரி காஸ்கெல் போன்றவர்களின் அவர்களின் நாவல்களின் வழியாக நகர வாழ்க்கையின் கொடூரத்தைப் பேசினார்கள்.

ஹூகோவின் லே மிஸராப்ல் என்ற நாவல் தமிழில் ‘ஏழை படும் பாடு’ என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இவர்களின் நாவல்கள் தொழில்புரட்சி ஏற்படுத்தித் தந்த லாப வெறியால் மனிதர்கள் வெறும் இலக்கங்களாக்கப்படுவதைச் சுட்டிக்காட்டின.  மாபெரும் தொழிற்சாலைகளைச் சுற்றி வளர்ந்திருந்த சமூக கட்டமைப்புக்களாலும் வழக்கங்களாலும் மனிதர்களிடமிருந்து மனிதத் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக உறியப்பட்டு அவர்கள் பெயருக்கு மட்டுமே மனிதர்களாக – உண்மையில் ஒருவகை காகித மனிதர்களாக, நிழல் மனிதர்களாக வாழ்வதை இப்படைப்புக்கள் காட்டின.

19ம் நூற்றாண்டு நாவல்கள் தொழில் புரட்சியின் சமூகத் தாக்கங்களை எடுத்துச் சொன்ன போதும் அவை அரசியல் அமைப்பை அவ்வளவாக விமர்சிக்கவில்லை. இதற்குக் காரணங்கள் இரண்டு.

முதலாவதாக இந்நாவல்கள் உருவான சூழலில் செயல்பட்ட ஜனநாயக அரசாங்க அமைப்புக்கும் பெரும்பணக்காரர்களால் நிறுவப்பட்ட தொழிற்சாலைகளுக்கும் இடையே இன்று crony capitalism என்று அழைக்கப்படும் பரஸ்பர லாபம் தரும் ஏற்பாடு ஏதும் செயல்பட்டதாகச் சந்தேகப்படுவதற்கு இந்த எழுத்தாளர்களுக்கு எந்த முகாந்திரமும் இருந்திருக்கவில்லை.

இரண்டாவதாக, அவர்கள் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புக்களைப் பற்றி நேர்மறையான எண்ணமே மக்களிடையே இருந்தது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஆக மொத்தம் மனித இனத்துக்கு நன்மைகளைத்தான் செய்யும் என்ற நம்பிக்கை அப்போது ஆழமாக வேரூன்றி இருந்தது. ஜூல்ஸ் வெர்ன் போன்றோரின் நாவல்கள் இந்த எதிர்ப்பார்ப்பைக் கோடிட்டுக் காட்டின.

ஆனால் ஃபிரான்ஸ் காப்ஃகா தனது புகழ்ப்பெற்ற படைப்புக்களான ‘உருமாற்றம்’ (1915), ‘விசாரணை (1925), ‘அரண்மாளிகை’ (தி காஸ்டல், 1926) ஆகியவற்றை எழுதிய காலக்கட்டத்தில் இந்த மதிப்பீடுகள் முற்றிலுமாக மாறியிருந்தன. ஐரோப்பாவில் – குறிப்பாக மத்திய ஐரோப்பாவில் – அப்போது எழத தொடங்கியிருந்த சர்வாதிகாரச் சக்திகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் கருவியாக தொழில் வளர்ச்சியை நாட ஆரம்பித்திருந்தன.

1914ல் வெடித்த முதல் உலகப் போர் சில மணி நேரங்களில் ஆயிரமாயிரம் மனிதர்களைக் கொன்று குவிக்க எப்படியெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் உதவக் கூடும் என்பதற்கு நேரடி விளக்கங்களை ஐரோப்பியர்களுக்குத் தந்து கொண்டிருந்தன.

இந்தப் பின்புலத்தில் எழுதப்பட்ட காஃப்காவின் படைப்புக்கள் பொருளாதாரச் சக்திகளாலும் அவற்றோடு உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு வளர்ந்து வரும் பலமான சர்வாதிகார அரசியல்-பொருளாதார-அறிவியல் கட்டமைப்பினாலும் மனிதத்தன்மை உறிஞ்சப்பட்டு வெறும் இலக்கமாக்கப்பட்ட மனிதர்களின் அவலத்தைக் காட்டுகின்றன.

1915ல் எழுதப்பட்ட ‘உருமாற்றம்’ உளவியல் நாவலாகச் சிலரால் பேசப்பட்டாலும் அடிப்படையில் மனிதர்களை நசுக்கும் இந்தப் புதிய அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனமாகவே இருக்கிறது.  

ஊர் ஊராகச் சென்று துணிகளை விற்கும் விற்பனையாளனாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிரிகோர் சாம்சா காலை படுக்கையைவிட்டு எழும்போது தான் ஒருவகையான அருவருக்கத்தக்கப் பூச்சியாக மாறியிருப்பதை உணர்கிறான். அவனால் வழக்கம்போல் வேலைக்குப் போக முடியவில்லை  அவன் வேலைக்கு வராததால் கோபமடையும் அவனுடைய மேலதிகாரி சாம்சாவைத் தேடி வீட்டிற்கு வருகிறார். தனது படுக்கையறையில் இருக்கும் சாம்சாவால் முதலில் அவருக்கு எந்தப் பதிலையும் தர முடியவில்லை மெல்ல தரையில் தவழ்ந்துபோய் கதவைத் திறக்கிறான். அவனுடைய பயங்கரமானத் தோற்றத்தைக் காணும் மேலதிகாரி பயத்தில் வீட்டை விட்டே ஓடிவிடுகிறார். சாம்சாவின் சம்பாத்தியத்தில் அதுவரைக்கும் தனது பழைய கடன்களை அடைத்து வந்த அவனுடைய தந்தை இப்போது சாம்சாவை அறைக்குள்ளே இருக்க வேண்டும் என்று சொல்கிறார். தவறினால் அவனைத் தாக்கவும் தயங்கப் போவதில்லை என்கிறார்.

படுக்கையறையிலேயே அடைபட்டிருக்கும் சாம்சா தரையிலும் சுவர்களிலும் நாள் முழுக்க ஊர்கிறான். அவனால் இனிமேல் எந்தப் பொருளாதார லாபமும் இல்லை என்று உணரும் அவன் குடும்பத்தார் சாம்சா குடும்பத்தின் சமூகக் கௌரவத்தைக் குறைப்பதாக எண்ணி அவனை மேலும் மேலும் வெறுக்கிறார்கள்.   சாம்சாவின் தந்தை கோபத்தில் அவன் மீது ஆப்பிள்களை வீசுகிறார்.  ஆப்பிள்களில் ஒன்று அவன் முதுகைத் தாக்கி அவனுக்குப் பலமான காயம் ஏற்படுகிறது.காயத்தால் அவதியுறும் சாம்சா படிப்படியாக உட்கொள்ளும் உணவைக் குறைத்துக் கொள்கிறான்.

அவன்மீது பரிவு கொள்ளும் வேலைக்காரி மாலை நேரங்களில் அவன் கொஞ்சம் வெளியே உலவி வருவதற்காக படுக்கையறையின் கதவைத் திறந்து வைக்கிறாள். ஒரு நாள் கதவு திறந்திருக்கும் வேளையில் தனது தங்கை கிரேத்தா வயலின் வாசிப்பதைக் கேட்டு சாம்சா வரவேற்பறைக்கு ஊர்ந்து போகிறான். வீட்டில் வாடகைக்கு இருப்பவர்கள் அவனைப் பார்த்ததும் இத்தனை அசுத்தமான வீட்டில் குடியிருக்க முடியாது என்று சொல்லி வீட்டைக் காலி செய்கிறார்கள்.

குடும்பத்தின் கடைசி வருமானமும் கலைந்து போனதைக் கண்டு குடும்பத்தில் அவன் மீது கொஞ்சம் பரிதாபப்படக் கூடிய ஒரே ஆளான அவனுடைய தங்கையும் ‘பூச்சியை’ கொல்ல வேண்டும் என்று சொல்கிறாள். இதைக் கேட்ட சாம்சா பட்டினி கிடந்து உயிரை விடுகிறான். அவன் குடும்பத்தார் அவன் சாவுக்குப் பிறகு உல்லாசப் பயணம் போகிறார்கள். அவன் தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கலாமா என்று யோசிக்கிறார்கள்.

காஃப்காவின் கதையில் பூச்சி என்பது நகரத்தின் தொழில் சூழ்நிலையில் வாழும் மனிதனுக்குக் குறியீடாக அமைகிறது. மனிதர்களை இலக்கங்களாகக் கருதும் அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பில் சாம்சாவைப்போல் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் அருவருக்கத்தக்கப் பூச்சிகளே.அதாவது, நசுக்கப்படும் தகுதியுடையவர்கள். அதே போல் உருமாற்றத்தின் தொடக்கத்தில் பூச்சியாக மாறிய சாம்சா தனது வேலையை அர்த்தமில்லாத அலைச்சலாகவே எண்ணுகிறான். தன் மேலதிகாரியைத் தன் உழைப்பை உறிஞ்சி தன்னை நசுக்கும் சர்வாதிகாரியாகக் கற்பனை செய்கிறான். குடும்பச் செலவுகள் இல்லா விட்டால் சாம்சா தனது வேலையை விட்டிருப்பான் என்பது அவனது சிந்தனைகளிலிருந்து வாசகனுக்குத் தெளிவாகிறது.

’உருமாற்றத்தை’த் தொடர்ந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ‘விசாரணையும்’ ‘அரண்மாளிகையும்’ அதற்குள் ஐரோப்பாவில் பலப்பட்டிருந்த சர்வாதிகார அரசியல்-பொருளாதாரக் கட்டமைப்பை இன்னும் நுணுக்கமாக விமர்சிக்கின்றன. இந்த நாவல்கள் வெளிவந்த நேரத்தில் ரஷ்யாவில் போல்ஷேவிக் புரட்சி வெற்றிப் பெற்று அங்கு கம்யூனிஸ அரசாங்கம் நிறுவப்பட்டிருந்தது. சர்வ வல்லமை பொருந்திய அந்த அரசாங்கம் தொழிலாளர் வர்க்கத்தின் பெயரால் பொதுமக்களின்மீது எல்லையில்லா அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது.

இந்த புதிய அரசாங்கம் தனது ஆட்சியைப் பலப்படுத்திக் கொள்ள இரண்டு விஷயங்களைச் செய்தது. முதலில், தொழிற் துறைவளர்ச்சியைப் பலப்படுத்தியது. ரஷ்யா முழுவதும் முளைத்த புதிய தொழிற்சாலைகளில் உழைப்பது பெரும்பாலான ரஷ்ய மக்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டது. அரசியல் எதிரிகளும் அறிவுஜீவிகளும் குலாக்குகள் என்னும் தொழில் முகாம்களுக்கு நெடுங்கால தண்டனைக் கைதிகளாக அனுப்பப்பட்டார்கள்.  

இரண்டாவதாக, ரஷ்யாவின் ஆட்சியைப் பிடித்திருந்த சோவியத் அரசாங்கம் தனக்கு எதிராக எந்தக் கருத்தும் புறப்பட்டு விடக்கூடாது என்ற அக்கறையில் கடுமையான தணிக்கை முறையை அறிமுகப்படுத்தியது. அரசுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடிய தரவுகளும் தகவல்களும் இருட்டடிக்கப்பட்டன அல்லது அரசுக்குத் தோதாக மாற்றியமைக்கப்பட்டன.

செய்தித்தாள்களிலிருந்து அரசியல் எதிரிகளின் பெயர்களும் புகைப்படங்களும் நீக்கப்பட்டு அப்படி ஒருத்தர் இல்லாத மாதிரியே காண்பிக்கப்பட்டது (மிலான் குண்டேரா இப்படி ஒரு விஷயத்தை தனது நாவல் ஒன்றில் சம்பவமாக்கியுள்ளார்). அரசின் கொள்கைகளை ஆதரிக்கும் போலித் தரவுகள் உருவாக்கப்பட்டுச் செய்தி ஊடகங்களிலும் வரலாற்றுப் புத்தகங்களிலும் சேர்க்கப்பட்டன. ரஷ்யர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படும் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் காட்டிக் கொடுக்கும்படி ஊக்கப்படுத்தப்பட்டார்கள். அரசியல் நீதிமன்றங்களின் அனைத்து நிலைகளிலும் பழி தீர்க்கும் நோக்கத்தோடு சமர்ப்பிக்கப்பட்ட பொய்ச்சாட்சியங்கள் கோலோச்சின.

விசாரணை நாவலின் கதாநாயகனான ஜோசப் கே என்ற கடைநிலை வங்கி ஊழியன் ஒரு நாள் காலை எந்தக் காரணமும் தரப்படாமல் கைது செய்யப்படுகிறான். ‘யாரோ ஜோசப் கே.யைப் பற்றிப் பொய் சொல்லியிருக்க வேண்டும். எந்தத் தவறையும் செய்யாமல் அவன் ஒரு நாள் காலை கைது செய்யப்பட்டான்’ என்று விசாரணை நாவல் தொடங்குகிறது. நாவல் முழுவதும் ஜோசப் என்னதான் செய்தான் என்று விளக்கப்படாமலேயே இருக்கிறது. கைது செய்யப்படும் ஜோசப் வரிசையாகப் பல விசாரணைகளுக்கும் உரையாடல்களுக்கும் ஆட்படுகிறான். அவன் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் காட்ட எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் மீதுள்ள குற்றச்சாட்டு மேலும் பலப்படும்போல் தோன்றுகிறது. கடைசியில் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் அவன் முடிவு வருகிறது. சாகும்போது கூட ஜோசப் தான் என்ன தப்பு செய்தான் எதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டான் என்று அறியாமலேயே சாகிறான்.

‘அரண்மாளிகை’ நாவலை முழுதாக முடிக்காமலேயே காஃப்கா இறந்தார். ஆனால் அதன் கதை சுவாரஸ்யமானது. ஒரு கிராமத்திற்கு நில அதிகாரியாக வரும் கே. அந்தக் கிராமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மர்மமான அரண்மாளிகையிலிருந்து அந்தக் கிராமத்தை ஆட்சி செய்யும் அதிகாரிகளைச் சந்திக்க முயல்கிறார். ஆனால் அவரால் அவர்களை அணுகவே முடியாமல் போகிறது. கிராமத்திலிருப்பவர்கள் அதிகாரிகளைப் பார்த்திராவிட்டாலும் அவர்கள்மீது அபாரமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அரண் மாளிகையிலுள்ள அதிகாரிகள் எதைச் செய்தாலும் அர்த்தமிருக்கும் என்கிறார்கள். அவர்கள் தயாரிக்கும் ஆவணங்கள் சற்றும் பிழையில்லாதவை என்று அடித்துச் சொல்கிறார்கள். கிராமத்துக்கு நில அதிகாரிகள் யாரும் தேவையில்லை என்றும் கே. தவறாகப் புரிந்து கொண்டு கிராமத்துக்கு வந்துவிட்டதாகவும் கிராமத்தின் மேயர் சொல்கிறார். அரண்மாளிகையில் உள்ள அதிகாரிகளோடு தொடர்பு கொள்ள கே. முன்னெடுக்கும் முயற்சிகளைக் கிராமத்தார் வன்மையாக எதிர்க்கிறார்கள். மேயர் பள்ளிக்கூடத்தில் துப்புரவாளர் வேலையைக் கே.க்குக் கொடுப்பதாகச் சொல்கிறார். கடைசியில் எந்த முடிவும் தெரியாமலேயே கே. அந்த கிராமத்தில் செத்துவிடப் போவதாகக் காஃப்கா கதையின் போக்கில் சுட்டிக் காட்டுகிறார்.

ஜனநாயக கோட்பாடுகளுக்கு உட்படாத ஒன்றிணைக்கப்பட்ட மாபெரும் சர்வாதிகார அரசியல்-பொருளாதார-அறிவியல் இயந்திரம் மிக ‘ஒழுங்கான’ விதிகளின்படி நடப்பதன் மூலம் என்ன வகையிலெல்லாம் சாமானிய மனிதர்களை நசுக்கும் என்று பேசுபவை காஃப்காவின் படைப்புக்கள்.

டிக்கன்ஸ் போலவோ, ஹூகோ போலவோ ஒரு வர்க்கத்தாரின் துயரங்களைச் சித்தரித்துக் காட்டாமல், காஃப்கா ஒரு குறிப்பிட்ட மனிதனின் வழியாக ஒரு சமுதாயத்தின் அவலத்தைத் தன் படைப்புகளில் சொல்கிறார். மாபெரும் அரசியல்-பொருளாதார இயந்திரத்தால் நசுக்கப்பட்டு ஒருவரிடமிருந்து ஒருவர் தனிமைப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் நவீன மனிதனின் தனிமையைக் காட்ட அதுதான் சரியான உத்தி.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் பல செயல்பாடுகளையும் அவருடைய நாவல்கள் மிகத் துல்லியமாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாகவே சொல்லி இருக்கின்றன.

அந்த வகையில், காஃப்கா இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களில் மிக முக்கியமான தீர்க்கதரிசி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s