ஜப்பானுக்கும் தண்ணீருக்கும் இடையே ஓர் அலாதியான உறவு உண்டு. ஜப்பான் தீவுகளைச் சுற்றி இருக்கும் கடல் அந்நிய படையெடுப்புகளிலிலிருந்து – குறிப்பாகச் சீனப் படையெடுப்புகளிலிருந்து – ஜப்பானைக் காக்கும் இயற்கை அரணாக அமைந்தது. அதே சமயம் கடலே ஜப்பானையும் ஜப்பானியரையும் உலக வரைப்படத்திலிருக்கும் ஏனைய நாடுகளிலிருந்தும் தனிமைப்படுத்தியது.
1853-இல் அமெரிக்க கடற்படை தளபதி மத்யூ பெர்ரியின் கறுப்புக் கப்பல்கள்” ஜப்பானைச் சென்றடைந்து அதன் கதவுகளை வெளிநாட்டினரின் வருகைக்கும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கும் திறக்கும்வரையில் தோக்குகாவா ஷோகன் பிரபுக்களின் ஆட்சியில் சுமார் 220 ஆண்டுகள் (1639-1853) வெளிநாட்டினருக்கு மூடியே இருந்தது.
அரணாகவும், தனிமைப்படுத்தும் திரையாகவும் அமைந்த தண்ணீர் பேரூழிக் காற்று, சுனாமி, வெள்ளம் என்ற பேரிடர்களின் வழியாக நிலத்தினில் புகுந்து பேரழிவைக் கொடுத்தது. அதே சமயம், ஜப்பானில் ஆடுகளும் மாடுகளும் குறைவே. விலையுயர்ந்த ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிகளைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஏழை எளிய ஜப்பானியர்களுக்கு கடல்களும் ஆறுகளும் தண்ணீரில் வாழும் மீன்கள், கணவாய்கள் என்று பல்வேறு உயிரினங்களின் வழியாக புரோதச் சத்தை அளிக்கும் தாய்களாக இருந்தன. கடல்களில் வளரும் தாவர வகைகளையும் ஜப்பானியர்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். இன்றுவரை ஜப்பானிய உணவு பெரும்பாலும் கடலுணவு வகைகளைச் சார்ந்ததே.
ஜப்பானியருக்குக் கடலோடு இருக்கும் இந்த ஆதித் தொடர்பைக் குறித்துப் பல ஜப்பானிய நாவல்களும் சிறுகதைகளும் பேசியிருக்கின்றன. முகமூடியின் வாக்குமூலம் எழுதிய யுகியோ மிஷிமா முதற்கொண்டு உலகப் புகழ்பெற்ற ‘மௌனம்’ நாவலை எழுதிய ஷுசாக்கு எண்டோ, கெயிதா நாகானோ ஆகியோர் முதற்கொண்டு இந்நாளைய யோகோ தாவாதா வரைக்கும் கடலோரத்திலும் கடலைச் சார்ந்தும் வாழும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தாவாதா ‘தூதவன்’ என்ற தன்னுடைய நாவலில் பெயர் அறியாத சுற்றுச்சூழல் பேரிடரால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எதிர்கால ஜப்பான் எப்படி தன்னை மீண்டும் தோகுகாவா காலக்கட்டத்தைப்போலவே மீண்டும் வெளி உலகத்திலிருந்து துண்டித்துக் கொள்கிறது என்று பேசியிருப்பார்.
யூகோ சூசிமா-வின் “தண்ணீர் ராஜ்ஜியம்’ என்ற கதை மற்ற ஜப்பானிய நாவல்களில் வரும் கடல் மற்றும் தண்ணீர் பற்றிய சித்தரிப்புக்களிலிருந்து மிகவும் மாறுபட்டது. யூகோ சூசிமா என்ற புனைப்பெயரில் எழுதிய சாதோகோ சூசிமா 1947ல் பிறந்து 2016ல் மறைந்தார். 1978ல் தனது நாற்பத்தோராவது வயது தொடங்கிக் கிட்டத்தட்ட 14 நூல்களை வெளியிட்டிருக்கிறார். இவற்றில் நாவல்கள் பெரும்பான்மை. The Shooting Gallery and Other Stories போன்ற சில சிறுகதைத் தொகுப்புகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும்.
’தண்ணீர் ராஜ்ஜியம்’ அன்னையும் மகளுமான இரண்டு பெண்களின் கதை. இருவரின் கதைகளும் கதை நெடுக தன்னிலையில் மாறி மாறிச் சொல்லப்படுவதாகத் தண்ணீர் ராஜ்ஜியக் கதை போகிறது.
கதையின் தொடக்கத்தில் மகள் தனது ஐந்து வயது மகனுக்கு மீன் தொட்டியில் வைப்பதற்காக மேற்கத்திய பாணி அரண்மனையைப் போல இருக்கும் அலங்காரப் பொருளை வாங்கித் தருகிறாள். இவள் கல்யாணமாகாமல் தாயானவள். அவள் குழந்தையின் தந்தை வேறொரு பெண்ணுக்குக் கணவன். அவனுக்கு வேறு குடும்பம் உள்ளது. குழந்தைகள் உள்ளார்கள். இதையெல்லாம் தெரிந்தும்கூட அவனோடு உறவு வைத்திருக்கிறாள். அவன் தனக்கு எப்போதுமே ஆதரவாகவே இருக்க மாட்டான் என்று தெரிந்தும் பிடிவாதத்தோடு தன் மகனைப் பெற்றுக் கொண்டாள். அவனைத் தனியொருத்தியாக வளர்க்கிறாள்.
அரண்மனை வடிவத்திலிருக்கும் அலங்காரப் பொருளை மீன் தொட்டியில் வைக்க அது தொட்டியின் அடிப்பாகத்தில் செல்கிறது. மீன் தொட்டிக்குள் காற்றை அனுப்பும் மோட்டாரை இயக்கிவிட அதன்வழியாக காற்று தண்ணீருக்குள் புகுந்து பிளாஸ்டிக் அரண்மனையின் கதவு திறக்கிறது. கதவின் வழியாக நீர்க்குமிழ்கள் வெளியேறி மீன் தொட்டித் தண்ணீரின் மேல்மட்டத்துக்குச் சென்று கலைகின்றன. இந்தக் காட்சியைப் பார்க்கும்போது மகளுக்குத் தண்ணீரில் மூழ்கி இறந்துபோன தனது தந்தையைப் பற்றி அவள் நினைத்துக் கொள்கிறாள். அவன் நீரில் மூழ்கித் தற்கொலை செய்து கொண்டான் என்ற வதந்தி உலவிய போதும்கூட தனது தந்தை மீன் தொட்டியில் இருப்பது போலவே குளிர்ந்திருக்கும் தண்ணீருக்குள் நிம்மதியாய்த் தூங்குவதாக அவள் கற்பனை செய்கிறாள். அப்பனின் கல்லறை அவள் சின்ன வயதில் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் இருந்தது. கல்லறைத் தோட்டத்தின் மண் தனது வீட்டுத் தோட்டத்தின் மண்ணைவிட ஈரமாக இருப்பதைக் கண்டு தான் நின்று கொண்டிருக்கும் தரைக்கு அடியில் தண்ணீரே பரவி நிற்பதாகவும், தரையைக் கொஞ்சம் தோண்டினாலே அடியில் இருக்கும் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பி அவளையும் அனைத்தையும் மூழ்கடித்துவிடும் என்று அவள் நம்புகிறாள். மழைக்குப் பின் சாலைகளில் தேங்கியிருக்கும் குட்டைகளிலும் மற்ற சிறுமிகள் குதித்து விளையாடும் போது அவள் குதிக்க அஞ்சுகிறாள். குட்டைகளின் வழியாகத் தரையின் அடியில் எங்கும் வியாபித்திருக்கும் தண்ணீரில் விழுந்து கரைந்து போனால் என்ன செய்வது? அவள் அப்பாவும் அப்படித்தான் கரைந்து போனார்.
இந்த இடத்தில் கதை அம்மாவின் கதையாக மாறுகிறது. தாய் தனது கதையைச் சொல்லும்போது தனது கணவன் (முதலில் கதை சொன்ன மகளின் அப்பா) தனக்குச் செய்த துரோகங்களைச் சொல்கிறாள். தண்ணீரால் அவளுக்கு வாழ்க்கை நெடுக மாறி மாறி காரணமே இல்லாமல் துன்பங்கள் ஏற்படுகின்றன. கிராமியச் சூழ்நிலையைவிட்டு ஜப்பானின் தலைநகரமான தோக்கியோவுக்குத் தனது கணவனுடன் குடிபெயர்ந்த போதும் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கே வீட்டிலேயே குழாய்த் தண்ணீர் கிடைக்க அவளுக்கு மட்டும் தலைநகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் அண்டை வீட்டுக்காரர்களுடன் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. அவளை அநாதையாய் விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் போய்விடும் கணவன் ஒரு நாள் வீட்டினருகிலிருக்கும் சிறு நதியில் வெள்ளம் பெருகியோட அந்தத் தண்ணீரில் தான் ஓடிப்போன பெண்ணோடு சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறான். அவர்கள் சடலத்தைக் கண்டு தாய் கோபத்திலும் ஆற்றாமையிலும் பெருங்குரலெடுத்து அழுகிறாள். கணவன் செத்த பிறகு ஏற்பட்ட வறுமையால் அவள் கடைசியில் தனது மூன்று குழந்தைகளோடு (மூன்று குழந்தைகள் – மூத்தவளும் இளையவள் பெண்கள், நடுவில் மகன்) ஒரு பழைய வீட்டில் குடியேறுகிறாள். மழை பெய்யும் இரவுகளில் தண்ணீர் வீட்டுக்குள் ஒழுகுகிறது. அந்தத் தண்ணீர்
தண்ணீர் என்பது காலம் காலமாக ஜப்பானியர்களைத் தனிமைப்படுத்தும் திரையாகவும், பாதுகாக்கும் அரணாகவும், உணவளிக்கும் தாயாகவும், அழிக்கும் பெருங்கோபமுடைய தேவதையாகவும் இருந்து வந்திருப்பதை சூசிமா மிகத் திறமையாக இந்தக் கதையில் வரும் பெண்களின் வழியாகக் காட்டுகிறார். மகள், தாய் இருவரும் தண்ணீரைப் பற்றிக் கொண்டிருக்கும் வெவ்வேறு பார்வைகளைக் காட்ட ஜப்பானிய தொன்மக் கதைகளை சூசிமா இந்தக் கதையில் பயன்படுத்தி இருக்கும் வகை பாராட்டுக்குரியது, ஜப்பானிய மரபில் கடலின் அடியில் இருக்கும் ஒரு ராஜ்ஜியத்தைப் பற்றிய கதை உண்டு. ஒரு நாள் கடலுக்குள் மூழ்கும் ஒரு மீனவன் அந்த ராஜ்ஜியத்தில் நுழைந்து மிக அமைதியான சூழ்நிலையில் பலவிதமான கேளிக்கைகளின் நடுவில் நூறு நாட்களைக் கழிக்கிறான். அவன் மறுபடியும் தரைக்கு வரும்போது நூறு ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அவனை அறிந்தவர்கள் எல்லோரும் செத்துப் போயிருக்கிறார்கள். அவனும்கூட கடலில் மூழ்கிச் செத்துப் போனவனாக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறான். மகள் தனது மகனுக்காக வாங்கித் தந்த பொம்மை அரண்மனையைப் பார்க்கும்போது தற்கொலை செய்து கொண்ட தனது அப்பாவும் அந்த மீனவனைப்போல் கடலுக்கடியில் உள்ள ராஜ்ஜியத்தின் அரண்மனையில் துயில்வதாகக் கற்பனை செய்கிறாள். தரையில் இருக்கும் அனைத்தையும்விட கடலும், அதன் எல்லையில்லா ஆழமும் தனிமையும் அமைதியுமே அவளுக்கு நிரந்தரமாகப் படுகின்றன. மகளுக்கு இந்த அநாதித் தனிமையும் மௌனமும்தான் தனது கால்களுக்குக் கீழிருக்கும் தரையைவிட நம்பத்தகுந்ததாய்த் தோன்றுகிறது. ஆனால் தண்ணீர் எந்தவிதமான நிரந்தரமான அர்த்தமில்லாதது. நொடியில் வடிவம் மாறக் கூடியது. மனித வாழ்க்கையைப் போலவே.
ஜப்பான் தீவுகளைப்போலவே மனிதர்களின் வாழ்க்கையையும் சூழ்ந்திருக்கும் நிறமற்ற நொடியில் வடிவம் மாறக் கூடிய தண்ணீரை எதிர்த்து என்ன செய்ய முடியும்? அது ஒரு நாள் தரையில் இருந்து புறப்பட்டு வந்து உங்களையும் என்னையும் கரைத்துவிடும் என்பதைத் தவிர?
ஆனால் மகளிக்கு தண்ணீர் தரைக்கு அடியில் பரவியிருக்கும் வெறுமை என்றால், தாய்க்கு அது சுயீஜின் என்ற தண்ணீர்த் தேவதை. பெருங்குரோதம் உள்ளவள். தாய் கிணற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டு வர, சுயீஜின் வாளியைக் கீழே இழுத்து அதைக் கனக்கச் செய்கிறாள். இவளைத் துன்புறுத்துவதற்காகவே அவள் கணவனைத் தனக்குள் இழுத்துச் சாகடிக்கிறாள். வீட்டின் இடுக்குகளின்வழி மழையாகப் புகுந்து உன் குழந்தைகளைக் கொல்வேன் என்று சவால் விடுகிறாள்.
ஜப்பானில் நிலவிவரும் கடுமையான தலைமுறை இடைவெளி, ஒற்றைப் பெற்றோராய்க் குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் அவலங்கள் ஆகியவற்றைத் தண்ணீர் என்ற குறியீட்டின் வழி பேசும் அற்புதமான படைப்பு யூகோ சூசிமாவின் ’தண்ணீர் ராஜ்ஜியம்’. கதையில் வரும் பெண்கள் தாயும் மகளும்தான். ஆனால் அவர்கள் ஒருவரை மற்றி மற்றொருவர் கூறும் கதைகளில் அத்தனை முரண்கள் இருக்கின்றன. தாய் தனது மூன்று குழந்தைகள் தன்னை மிக மிக நேசித்ததாகச் சொல்கிறாள். குறிப்பாக தனது மகன் அவள்மீது அதிகப் பிரியம் கொண்டிருந்ததாக அவள் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. ஆனால் கதைப்போக்கில் மகளின் வாய்வழியாக தாய் கொடுமைக்காரி என்றும், குழந்தைத்தனங்கள் நிரம்பிய பிள்ளை என்று தாயால் சுட்டிக் காட்டப்படும் மகன் மூளை வளர்ச்சியற்றவன் என்றும் தெரிய வருகிறது.
கடுமையான தலைமுறை இடைவெளியும் போலியான சமூக உறவுகளும் அவர்களுக்கு இடையே உண்மைகள் புக முடியாமல் செய்துவிடுகின்றன. அவள் கொடுமைக்காரிதான் என்று மகள் ஒரு நாள் சொல்ல தாய் விழிக்கிறாள். மகளும் பின்னர் தாய் முதுமையினால் ஏற்பட்ட மறதியினால் தான் செய்த கொடுமைகளை மறந்திருப்பாளோ என்று எண்ணிக் குழம்புகிறாள்.
இதில் யார் உண்மையானவள்? தாயா, மகளா? இந்தக் கதை கடைசிவரை எதையும் உறுதியாகத் தெளிவுபடுத்தாமலே இருந்து விடுகிறது.
நிறமற்றதும், அடிக்கடி வடிவம் மாறக் கூடியதுமான தண்ணீரைப்போல.
சிறப்பு தோழர். வாழ்த்துக்கள். புதிய வாசிப்புக்கு என்னை அழைத்துச் செல்லும் தங்களின் எழுத்துக்கு என்றும் நன்றிகள்.
LikeLiked by 1 person
தொடர்ந்து எழுதுங்கள்
அயலசனக இலக்கிம் சார்ந்த விடயங்கள் அதிகம் கிடைப்பதில்லை.
LikeLike
நன்றி சார். நிச்சயம் முடிந்ததைச் செய்கிறேன்.
LikeLike