எஸ்ரா பவுண்ட்: போலிக் கவிதைகளோடு ஒரு போராட்டம்

மற்ற எல்லா இலக்கிய வடிவங்களையும்விட கவிதைகள் தோற்றுப் போவதற்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. கவிதையை வசீகரமாக்கும் அத்தனைக் கூறுகளுமே எளிதில் அதன் பலவீனங்களாகவும் மாறிவிடுவதுதான் இதற்குக் காரணம்.

பொதுவாக கவிதை மற்ற உரைநடை வடிவங்களைவிட (வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்) நீளத்தில் குறைந்ததாக இருக்கும். கருத்தைக் கவர்வதற்கான உவமை, உருவகம், உயர்வு நவிற்சி போன்ற உத்திகளும் (நவீனக் கவிதை என்றாலும்கூட ஒரு விதத்தில்) இயல்பான ஓசை நயமும் நிரம்பியது. ஓசை நயத்துக்கு இடம் தரமாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்கும் ஒருவன்கூட தான் எழுதும் கவிதையின் வரிகளை எங்கே நிறுத்தி எங்கே அடுத்த வரிக்குப் போவது என்ற இடத்தில் ஏதோ ஓர் ஓசை நயத்துக்கு உட்படுகிறான். இதையெல்லாம்விட முக்கியமாக, பாடல் வடிவம் மனித இனத்தின் உச்ச உணர்ச்சிகளான மகிழ்ச்சி, துயரம், காதல், இழப்பு, காமம், கோபம் ஆகியவற்றைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் சாதனமாக உரைநடையைவிட பலப் பல நூற்றாண்டுகளுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கவிதை என்பது பாடலின் சாயல் கொண்டது என்பதாலும் கவிதை பெரும் வசீகரமுள்ள இலக்கிய வடிவமாக இன்றும் இருந்து வருகிறது.


கவிதையின் (வெளிப்புறப் பார்வைக்கேனும்) எளிதில் பிடிபடக்கூடிய இந்தப் பலங்களே பலரையும் கவிதை எழுதிப் பார்த்துவிடலாம் என்று தூண்டிவிடுகிறது. வருடத்தில் பல எதிர்பாராத இடங்களில், நாம் எதிர்ப்பார்க்கவே முடியாத நபர்களால் கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதே அமைப்பினர் நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்வோரைவிட கவிதைப் போட்டியில் பலர் கலந்து கொள்கின்றனர். அவர்களில் சிலருக்குப் பரிசும் கிடைத்து விடுகிறது. மற்றவர்கள் நானும் கவிதை எழுதிவிட்டேன் என்று இறுமாந்து போகிறார்கள். பாலர் பள்ளிகளில் குழந்தைகள் வரையும் குச்சி மனிதர்களை அப்பா, அம்மா, பாப்பா என்று நாம் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்வது போலவே நாமும் அவர்கள் எழுதியதைக்.கவிதை என்று ஒப்புக் கொள்கிறோம்.

அதையும் தாண்டி ஒரு விதமான ஓசை நயமும் கொஞ்சம் பரிச்சயமான படிமங்களும் சேர்த்து உருவாக்கப்பட்ட சொல் தோரணங்கள் எளிதில் எதிராளியின் மனதைக் கவர்ந்து அசைத்துப் பார்க்கின்றன. அதனால் இளைஞர்கள் காதலிகளுக்கும் காதலியர் இளைஞர்களுக்கும் கவிதைப்போல் உள்ளச் சிறுச் சிறு வரிகளை எழுதி கண்கள் பளபளக்க வாசித்துக் காட்டுகிறார்கள்.

மேற்கூறிய கவிதைகளுக்கெல்லாம் ஒரே ஒரு ஒற்றுமைதான். வடிவம், ஓசை, படிமம், உணர்ச்சி மிகுந்த சொல்லடுக்கு ஆகிய கவிதைக்கூறுகள் இருப்பது போல் இருக்கும் இவை அனைத்தும் போலிக் கவிதைகளே.
ஆனால் ஒரு போலிச் சிறுகதையையோ, போலி நாவலையோ கண்டுபிடிப்பதுபோல் போலிக் கவிதையைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. பல நேரங்களில் அவற்றை எழுதியவர்களையே போலிக் கவிதைகள் உண்மைக் கவிதைகளைப்போல் காட்சி தந்து ஏமாற்றும். சில நேரங்களில் கவிதைப் போட்டி நீதிபதிகளையும்.


போலிக் கவிதை தந்திரமுள்ள மிருகம்.


இந்த மிருகத்தை இனம் கண்டு கொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் கவிதையோடு, கவிதை இலக்கியத்தின் வரலாற்றோடு மிகுந்த பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மொழியில் தலைசிறந்தவை என்று கருதப்படும் கவிதைகளை தேடி வாசித்து அவற்றிலெல்லாம் வடிவம், ஓசை, படிமம், சொற்களின் அடுக்கு எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்று ஆராயும்போதுதான் பிறர் எழுதும் போலிக் கவிதையும், அதைவிட முக்கியமாக நாம் எழுதித் தள்ளும் போலிக் கவிதையும் நமக்குச் சுயரூபத்தோடு தெரிய ஆரம்பிக்கும்.

இதில் யாப்பு என்பதோ யாப்பு இல்லாதது என்பதோ முக்கியமே இல்லை. யாப்பு முன்கூறிய கவிதையின் முக்கியக் கூறான ஓசைநயம் தொடர்பான விஷயம். முன்னரே குறிப்பிட்டதுபோல் முரட்டு நவீனக் கவிஞன்கூட ஏதோ ஓர் ஓசை நயத்தில் தனது கவிதையை அமைத்துக் கொண்டே ஆக வேண்டும்.


மனிதப் பேச்சின் மகத்துவமே பேச்சில்தானே அடங்கியிருக்கிறது.


எல்லா மொழிகளிலும் போலிக் கவிதைகளுக்கு எதிராக முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரசியல், சமயம், பொருளாதாரம், ஓவியம் முதலிய கலைகள், இலக்கியம் ஆகியவற்றை ஒரு சிறு கூட்டத்தின் பிடியிலிருந்து பிடுங்கிப் பொதுஜனத்தன்மையானதாக ஆக்கும் நவீனத்துவம் என்றழைக்கப்பட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாகவே மேற்கில் கவிதையைப் பொதுஜனத்தன்மையானதாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.


ஆங்கிலக் கவிதைகளைப் பொறுத்தவரை இதன் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறவர் எஸ்ரா பவுண்ட். 1865ல் அமெரிக்காவின் ஐதஹோ மாநிலத்தில் பிறந்த பவுண்ட் கவிஞனாகும் தீராத ஆசையால் 1902ல் லண்டனுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கு ஒரு செய்தித்தாளில் வேலை பார்த்துக் கொண்டே பவுண்ட் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களோடு சேர்ந்து ஆங்கிலக் கவிதையில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்தக் காலக்கட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பவுண்ட் ‘உலகத்தில் வாழும் வேறு எந்த மனிதனையும்விட’ கவிதைகளைப் பற்றி தான் அறிந்துகொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டதாக தனது சுயசரிதையில் சொல்கிறார். கவிதையின் உண்மையான இயல்புகளை அறிந்து கொள்ளும் ஆவல் அவரை ஆங்கிலக் கவிதையையும் தாண்டிச் சீன, ஜப்பானிய, கிரேக்கக் கவிதைகளுக்கு அழைத்துச் சென்றது. இந்நாடுகளின் பண்டைய கவிதைகளின் சொற்செட்டு, படிமத் துல்லியம், இயல்பான ஓசைநயம் ஆகியவற்றில் மனதைப் பறிகொடுத்த பவுண்ட் அந்நாடுகளில் கவிதை வடிவங்களையும் உத்திகளையும் ஆங்கிலத்துக்குக் கொண்டு வந்தார்.


இதன் அடிப்படையில் பவுண்ட் 1912ல் மற்ற சில எழுத்தாளர்களோடு சேர்ந்து ஆங்கிலக் கவிதையில் ‘இமெஜிஸ்ட்’ இயக்கம் ஒன்றை முன்னெடுத்தார். ஆங்கிலத்தில் இமெஜ் என்ற சொல் ஒரு சித்திரத்தையோ படிமத்தையோ குறிக்கிறது. பவுண்டின் கூற்றுப்படி ஒரு கவிதை என்பது புத்தி, உணர்ச்சி ஆகியவற்றின் கணநேரக் கூட்டால் பிறந்த படிமமாக இருக்க வேண்டும். ஒரு கவிதையில் இருக்க வேண்டிய புத்திப்பூர்வமான கருத்து, உணர்ச்சி வேகம் அல்லது கண நேரத்தில் வெளிப்படும் தன்மை ஆகிய மூன்றில் ஒன்று கூடினாலோ குறைந்தாலோ அது கவிதையைப் போலியானதாக ஆக்கிவிடும் என்பது பவுண்ட்-டின் கருத்து.


இப்படிக் கவிதை போலியாகாமல் இருக்கக் கவிதை கீழ்வரும் மூன்று விஷயங்களைக் கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பது பவுண்ட்டின் கறாரான வாதம்:

  1. பொதுவான, துல்லியமற்ற வருணனைகளைத் தவிர்த்து புலன்களாலோ மனதாலோ அனுபவிக்கும் பொருட்களையோ உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ துல்லியமாகக் கவனித்து விவரிக்க வேண்டும்.
  2. அலங்காரமான கவிதை மொழியைத் தவிர்த்து அன்றாட பேச்சு வழக்கில் கவிதையை எழுத வேண்டும். அநாவசியமான, அதிகப்படியான சொற்களை நீக்கி ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தெரிவிக்க எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான சொற்கள் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு குறைவான சொற்கள் பயன்படுத்த வேண்டும்.
  3. யாப்பு வடிவங்களைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி எந்த ஓசைநயத்தில் வெளிப்படுகிறதோ அதே ஓசைநயத்தைக் கவிதையிலும் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் வாசகர்களால் எஸ்ரா பவுண்ட் பரவலாக அறியப்படாமல் போனாலும்கூட எஸ்ரா பவுண்ட் ஆங்கிலக் கவிதை உலகில் நவீன ஆங்கிலக் கவிதைகளின் தந்தை என்று டி.எஸ். எலியட், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், எஃப். எஸ். ஃபிளிண்ட் போன்ற மாபெரும் கவிஞர்களால் கொண்டாடப்பட்டவர்.

இன்றும் அவருடைய தாக்கம் ஆங்கிலக் கவிதை உலகில் சாமானியமானதல்ல. டி. எஸ். எலியட் போன்ற பல கவிஞர்களை உருவாக்கினார்.


பவுண்ட்டின் எழுத்து ‘விதிகள்’ ஆங்கிலக் கவிதை உலகையும் தாண்டி ஆங்கில உரைநடை உலகிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றன.

கேர்ட்ரூட் ஸ்டைன், ஹெமிங்வே ஆகியோருடைய கதைகளையும் இவர்களுக்குப் பின் தோன்றிய பல அமெரிக்க உரைநடை எழுத்தாளர்களின் படைப்புக்களையும் ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மையை நன்கு உணர்வார்கள்.

கடைசியாக இதோ பவுண்ட்-டின் புகழ்பெற்ற கவிதைகளில் ஒன்று:

“காரணம்”

இந்த வார்த்தைகளை நான்கு பேருக்காகக் கோக்கிறேன்

இதை மற்றவர்கள் கேட்டு விடலாம்

உலகமே உனக்காகப் பரிதாபப்படுகிறேன்

அந்த நால்வரை நீ அறிய மாட்டாய்.

7 thoughts on “எஸ்ரா பவுண்ட்: போலிக் கவிதைகளோடு ஒரு போராட்டம்

  1. நிறைய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்.. சிறப்பு.

    இப்போதெல்லாம், இந்த மனுசன் எதை எழுதிருக்கான்னு தேடி வந்து பாக்கறதா இருக்கு…. 😉

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s