இந்தோனேசியாவுக்கென்று ஒரு தனிப்பட்ட கதை சொல்லும் பாணி இன்றுவரை இருக்கிறது. கிறிஸ்துக்குப் பிறகான இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஜாவா சுமாத்ரா தீவுகளுக்கு வந்திறங்கிய இந்து வணிகர்களும் புத்தப் பிக்குகளும் வாய் மொழியாக ராமாயண, மகாபாரத, புத்த ஜாதகக் கதைகளை இந்தோனேசியாவிற்குக் கொண்டு வந்தார்கள்.
இந்த மாபெரும் கதைகளின் சாயலில் உருவாகி வளர்ந்த இந்தோனேசியக் கதைகள் மிக விஸ்தாரமாகப் பெருகிப் பலப்பல கிளைக்கதைகளாகப் பிரியும் தன்மை, தாளில் எழுதப்பட்டாலும் வாய்மொழிக் கதைக்கூறலுக்கே உரித்தான சற்றே தளர்ந்த கட்டுமானம், ஒரே நேர்க்கோட்டில் நகராமல் யுகாந்திரக் கணக்குபோல் காலச்சக்கரமாய்ச் சுற்றிச் சுற்றி வரும் கதையமைப்பு மற்றும் மிகப் பிரம்மாண்டமான ஒரு பலத்தையோ பலவீனத்தையோ கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக் காணலாம்.
மேலும் இந்தோனேசியா கேரளாவைப்போல் மாந்திரீகம் செழித்து வளர்ந்த பூமி. இந்தோனேசிய மண்ணில் இந்து மதம், புத்தம், இஸ்லாம் என்ற மாபெரும் ஆன்மிகப் பாதைகள் வேரூன்றிச் செழித்த போதும்கூட கல், மரம், காடு, எரிமலை ஆகியவற்றில் குடிகொண்டிருக்கும் தேவதைகளைப் பற்றிய தொன்மங்கள் இன்றுவரை அங்கு ஆழப் பதிந்திருக்கவே செய்கின்றன. இதன் பாதிப்பினால் இந்தோனேசியாவில் கூறப்படும் கதைகளில் இன்றளவும் இந்தோனேசியக் கதைகளில் ஆழமான நிலம் சார்ந்த மாய யதார்த்தம் கலந்திருப்பதைக் காணலாம்.
அதே சமயம், ராமன், ராவணன், சீதை தொடர்புடைய கதைகளோடு பழைய ஜாவாத் தீவு தெய்வங்களான தென்கடல் தேவதையான நியாய் லோரோ கிடுல், தேவதைகளின் அரசனான கருஞ்சிறுத்தைச் சாயலில் இருக்கும் பாரோங், எதிர்காலத்தில் தோன்றி தீயவர்களை அழித்து நல்லாட்சி தரப்போகும் உலகப் பேரரசனான ரத்து அடீல் ஆகியோரது கதைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
அதே சமயம் இந்தோனேசிய மாந்திரீகத்தில் பத்தீக் துணிகள் மீது வரையப்பட்ட யந்திரங்கள், பாவைகள், மந்திரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டாலும்கூட சரியான ஓசைநயத்தோடு சரியாக உச்சரிக்கப்பட்டு பிரயோகிக்கப்படும் மந்திரச்சொற்களுக்குத்தான் அங்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதன் சாயலாகவே இந்தோனிசியக் கதை கூறலில் இயல்பாகவே வார்த்தைகளின் ஒழுங்குக்கும் அவற்றின் ஓசைநயத்துக்கும் மாந்திரீகத்தில் உள்ளதுபோலவே அதே வகையான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
மேற்சொன்ன இந்தக் கூறுகளை ப்ரமோத்யா ஆனந்தா தோயர், ஏகா குர்நியாவான், போன்ற இந்தோனேசிய நாவலாசிரியர்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய அந்நாட்டின் நவீன நாவல்களில் மிக வெற்றிகரமாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் இந்தோனேசியாவின் ஆரம்பக் கால கதை கூறும் பாணி அந்த மண்ணில் பிறந்த நாவல்களைச் சென்று சேர்வதற்குப் பல சவால்களைத் தாண்டிச் செல்ல வேண்டியதிருந்தது.
உண்மையில் இந்தோனேசியாவினுடையவை என்று நான் குறிப்பிட்ட இந்தக் கதை உத்திகள் அனைத்தும் மலாயா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் புழக்கத்தில் இருந்தவைதாம். ஆனால் இந்தப் பட்டியலில் உள்ள மற்ற நாடுகளில் காலனிக்கால ஆங்கிலேய, பிரெஞ்சு அரசுகளின் ஆதரவில் நடத்தப்பட்ட மிஷனரி பள்ளிகளின் வழியாக ஐரோப்பிய இலக்கிய பாணிகள் புகுத்தப்பட, இந்தோனேசியாவில் மட்டுமே இந்து-புத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த கதை கூறும் முறை இப்பகுதிகளில் மிஞ்சியுள்ளது.
இதையே வேறு முறையில் சொல்ல வேண்டும் என்றால் இந்தோனேசியாவை 1816லிருந்து 1949வரை ஆண்ட டச்சுக்காரர்களின் இனவெறியும் இந்தோனேசியர்கள்மீது அவர்கள் அவிழ்த்துவிட்ட அடக்குமுறையுமே இந்தோனேசியப் பாரம்பரியக் கதைகூறல் தப்பிப் பிழைத்ததற்குக் காரணமாக இருந்தது எனலாம். டச்சுக்காரர்கள் பிரஞ்சுக்காரர்களைப் போலவோ ஆங்கிலேயர்களைப் போலவோ அவர்கள் நாட்டினால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ளவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதைத் தங்கள் கடமையாகக் கருதவில்லை. பணம் கொழிக்கச் செய்யும் மிளகு, ரப்பர், தேயிலை, காபி மற்றும் இன்னபிற தோட்டங்களில் வேலை செய்ய அதிகம் கேள்விகள் கேட்காத ஆட்கள் வேண்டுமே! இதன் அடிப்படையில் உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த இந்தோனேசியர்களுக்கு மட்டும் டச்சுக் கல்வி வழங்கப்பட்டது.
1930ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 சதவிகிதம் இந்தோனேசியர்கள்தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக கருதப்பட்டார்கள். இந்தக் கணக்கெடுப்பு டச்சு மொழியை எழுதப் படிக்கக் கூடியவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொண்டது. டச்சுக் கல்விக்கு வழியில்லாத இந்தோனேசியர்கள் தங்கள் சொந்த மொழியில் அடிப்படைக் கல்வி கற்றார்கள். மற்ற காலனி நாடுகளில் உருவானதைப்போல் மேற்கத்திய மொழி மோகம் இந்தோனேசியாவில் உருவாகாததற்கு இதுவும் ஒரு காரணம். அதனால் இந்தோனேசிய இலக்கியம் மற்ற எந்த தென்கிழக்காசிய நாட்டு இலக்கியத்தை விடவும் செழித்து வளர்ந்து நிற்கிறது.
ஆனாலும்கூட நவீன வடிவச் சிறுகதைகளும் நாவல்களும் இந்தோனேசிய மொழியில் உண்மையில் எழுதப்பட்டது 1920களில்தான். அப்போது டச்சுப் பள்ளிகளில் படித்து முடித்திருந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த் இந்தோனேசிய இளைஞர்கள் சிலர் டச்சு ஆதிக்கத்தை எதிர்த்தும் இந்தோனேசிய சுதந்திரத்தை ஆதரித்தும் டச்சு மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் எழுத ஆரம்பித்திருந்தார்கள். இதை விரும்பாத காலனிய அரசு இந்தோனேசியாவில் வெளிவரும் எல்லாப் புனைவு புத்தகங்களையும் கண்காணிக்கவும் தணிக்கை செய்யவும் பாலாய் புஸ்தகா என்ற அமைப்பை நிறுவியிருந்தது.
பாலாய் புஸ்தகா தானே புத்தகங்களை வெளியிட்டது. சர்ச்சைக்குரிய, காலனிய சமூகத்தின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய அரசியல் கருத்துக்களை உடைய எல்லாப் புத்தகங்களையும் தடை செய்தது. அதேபோல் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடிய புத்தகங்களும், ஆபாசக் கருத்துகளை உடையவையாகக் கருதப்பட்ட புத்தகங்களும் கேள்வியே இல்லாமல் தடைசெய்யப்பட்டன. ஆபாசத்துக்கு எதிரான அதன் கடுமையான போக்கு எந்த அளவுக்கு இருந்தது என்றால் விவாகரத்தைப் பற்றி விவரித்த ஒரே காரணத்துக்காக ஓர் ஆரம்பகால இந்தோனேசிய நாவல் (தடைசெய்யப்படா விட்டாலும்) பாலாய் புஸ்தகா அச்சகத்தில் வெளியடப்படாமல் தடுக்கப்படும் அளவுக்கு.
1920ல் வெளியான மெராரி சிரேகாரின் ‘அஸாப் தான் செங்சாரா’தான் இந்தோனேசியாவில் வெளியான முதல் நவீன இந்தோனேசிய மொழி நாவலாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னால் வெளியான இந்தோனேசிய நூல்கள் மலாய் மொழியில் எழுதப்பட்டு வரலாற்றுக் கதைப்பாடல்கள் பாணியில் இருந்தன. இது தவிர்த்து இந்தோனேசிய மொழியில் வெளிவந்தவை யாவும் டச்சு முதலான மேற்கத்திய மொழிகளிலிருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட நாவல்கள்.
சிரேகாரின் நாவல் கட்டாயக் கல்யாணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. டிக்கன்ஸ், ஹூகோ போன்ற எழுத்தாளர்களின் யதார்த்த நடப்பியல் பாணியில்தான் சிரேகார் இந்த நாவலை எழுதியிருக்கிறார். மிகுந்த நாடகத்தன்மையுள்ள உரையாடல்கள், அடிக்கடி கதையோட்டத்துக்குள் மூக்கை நுழைக்கும் கதாசிரியரின் குறுக்கீடுகள், போதனைகள், சிறு பிரச்சாரங்கள், தட்டையான கதாபாத்திரங்கள் என்று இந்த நாவல்களின் கலைக்கூறுகளில் பல குறைகள் நமக்கு இன்று தென்பட்டாலும் சிரேகாரின் அஸாப் தான் செங்சாரா நாவல் இந்தோனேசிய இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்.
ஒரு வகையில் பாலாய் புஸ்தகா காலத்தில் வெளிவந்த அத்தனை நூல்களும் அவற்றை எழுதிய சிராகார் போன்ற எழுத்தாளர்களின் உயர்குடி அந்தஸ்தையும் டச்சுப் படிப்பையுமே பிரதிபலித்தன. டச்சுக் கல்விமுறையால் உருவாக்கப்பட்ட இவர்கள் மேற்கத்தியப் பாணியிலேயே கதைகளைச் சொல்லக் கற்றுக் கொண்டார்கள்.
இந்த நிலை மாறி நவீன இந்தோனேசிய நாவல்களிலும் சிறுகதைகளிலும் நான் முன் சொன்ன அந்த மண்ணுக்கே உரிய கதை சொல்லும் பாணி உருவாக இந்தோனேசியா தனக்குச் சுதந்திரம் கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டியதிருந்தது.
(தொடரும்)
நன்றி. மேலும் செம்மைப்படுத்த நிச்சயம் முயல்கிறேன். 🙂
LikeLike