செவ்விலக்கியங்களை – குறிப்பாக செவ்விலக்கியக்கங்களாகக் கருதப்படும் நாவல்களை – வாசிப்பதற்குக் கடுமையான மனப்பயிற்சி அவசியம் என்று நான் எழுதியிருந்ததை அட்சேபித்து நண்பர்கள் சில பேர் எனக்கு எழுதியிருந்தார்கள்.
இது நான் எதிர்ப்பார்த்ததுதான். இலக்கிய வாசகர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் நாவல் வாசிப்பில் எவ்வித முறையான பயிற்சியோ வழிகாட்டுதலோ இல்லாதவர்கள். ஒன்றோ, மூன்றோ, இருபதோ, ஐம்பதோ சிறுகதைகளைப் படித்துவிட்டுத் தீவிர நாவல்களுக்கு வந்தவர்கள். அல்லது, ஒரே முக்கியக் கதையோட்டத்தையும் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்களையும் கொண்ட நாவல்கள் என்று அழைக்கப்படும் நெடுங்கதைகளை வாசித்துவிட்டு தீவிர நாவல் செவ்விலக்கியத்துக்குள் காலடி எடுத்து வைத்தவர்கள்.
இதைக் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் யதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.
சிறுகதைகளையும் நெடுங்கதைகளையும் வாசிப்பதற்கும் சிறந்த செவ்விலக்கியமாகக் கருதப்படும் நாவல்களை வாசிப்பதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. சிறுகதைகளும் நெடுங்கதைகளும் ஒரு கோவிலின் ஏதோ ஒரு சுவற்றில் அமைக்கப்பட்டிருக்கும் சித்திர அல்லது சிற்பத் தொகுப்பைப் போன்றவை. உதாரணத்துக்கு, தாய்லாந்தின் பல புத்த கோயில்களில் ராமாயணக் கதையின் முக்கியக் கூறுகளை – பொன்மான், ஜடாயு, ராம-ராவண யுத்தம் தொடங்கி ராம பட்டாபிஷேகம் முடிய – சித்திரங்களாக வரைந்து வைத்திருப்பார்கள். இத்தகைய சித்திர, சிற்பத் தொகுப்புக்களின் சிறப்பம்சமே இவற்றை ஒரே பார்வையில் நாம் பார்த்து அனுபவித்துவிடலாம் என்பதுதான்.
ஆனால் நாம் செவ்விலக்கியம் என்று கருதும் மிகச் சிறந்த நாவல்கள் ஒற்றைப் பார்வையில் கடந்துவிடக் கூடிய சித்திரத் தொகுப்போ சிற்பத் தொகுப்போ அல்ல. அவை வானளாவிய கோபுரங்கள், விமானங்கள், பல வகையான மண்டபங்கள், சிற்பங்கள் நிறைந்த தூண்கள், சித்திரங்கள் நிறைந்த சுவர்கள் கடைசியில் ஒரு கர்ப்பக்கிருகம் ஆகியவற்றை உடைய ஒரு முழு கோவிலைப் போன்றவை.
சித்திரத் தொகுப்பையோ சிற்பத் தொகுப்பையோ பார்ப்பதைப்போல ஒரு கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு தூணாக ஒவ்வொரு சிற்பமாக ஆராய்ந்து முன்னேறி கருவறைக்கு முன்னேறுவது ஆயாசத்தைத்தான் தரும். ஏதோ ஒரு புள்ளியில் நாம் இந்த முயற்சியைக் கைவிட்டு விட்டுக் கிளம்பிப் போய்விடுவோம்.
வாசிப்பிலும் இதுதான் நடக்கிறது. தீவிர நாவல்களை வாசிக்கப் புகும் பல பேர் பாதியில் அதைக் கைவிட்டு விடுகிறார்கள். கொஞ்சம் தயங்கிய சுபாவமுள்ளவர்கள் அதைப்பற்றி மேலும் பேசாமல் இருக்கிறார்கள். தன் இருப்பை முன்னிறுத்தும் கட்டாயத்தில் உள்ளவர்கள் நாவலைப் பற்றிய அரைகுறை விமர்சனங்களை எடுத்து வைக்கிறார்கள். இந்த அணுகுமுறை வெறும் இலக்கிய கூச்சலாகவே முடிந்து போகிறது.
வரலாற்று அறிஞரான ரிச்சர்ட் ஸ்மித் ‘ஈ சிங்’ என்ற மூவாயிரம் வருஷத்துச் சீன ஆன்மீகப் புத்தகத்தைப் பற்றி எழுதிய The I Ching – A Biography நூலில் செவ்விலக்கிய நூல்களுக்கு உரிய மூன்று இலக்கணங்களை சொல்கிறார்.
முதலாவதாக, செவ்விலக்கிய படைப்பு மனித சமுதாயம் எதிர்கொள்ளும் ஏதேனும் ஆன்மீக, அரசியல் அல்லது சமூகத் தொடர்புடைய மகத்தான சிக்கலைப் பேசி அந்தச் சிக்கலை எதிர்கொள்ள ஏதேனும் வழிவகையைச் சொல்ல வேண்டும்.
இரண்டாவதாக, மேற்குறிப்பிட்ட சிக்கல்களை ‘அழகான, மனதை ஈர்க்கும், எளிதில் மறக்கமுடியாத’ மொழி பிரயோகத்தைக் கொண்டும், மனதிற்கு எழுச்சியூட்டும், மனதைக் கவரும் படிமங்களோடும் செவ்விலக்கிய படைப்பு பேச வேண்டும்.
மூன்றாவதாக, செவ்விலக்கிய படைப்பு தனக்குள் கொண்டிருக்கும் நுணுக்கமான தகவல் செறிவினாலும், தத்துவ கனத்தாலும், ஆற்றல்மிகுந்த மொழியாழத்தினாலும், ஒரு குறிப்பிட்ட மனித சமுதாயத்தின் சகல கூறுகளையும் பிரதிபலிக்கும் முழுமைத்தன்மையாலும் வாசகனை அதை மீண்டும் மீண்டும் கவனமாகப் படிக்கத் தூண்டும் படைப்பாக இருக்க வேண்டும்.
அதாவது ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு நகரும் சிற்பங்களின் தொகுப்பாகவோ, சித்திரங்களின் தொகுப்பாகவோ இல்லாமல் நாவல் என்பது வாசகனை மறுபடியும் மறுபடியும் தனக்குள் ஈர்க்கும் கோவில் வளாகமாக இருக்கிறது. இத்தகைய படைப்புத்தான் வாசகர்களைத் தேசம், காலம் என்ற வரையறைகளை மீறி காலம், கலாச்சாரம் தாண்டி ஈர்க்கும் தகுதியுடையதாக அமையும் என்பது ஸ்மித்தின் கருத்து.
அப்படியென்றால் சிறுகதைகளும் கவிதைகளும் காலத்தைத் தாண்டி வாழ்கின்றனவே என்ற கேள்வி எழும். உண்மைதான். ஆனால் சிறந்த சிறுகதைகளும் கவிதைகளும் செவ்விலக்கியத்தின் மேற்கூறிய தன்மைகளை உள்ளடக்கி இருக்கும் வரையில்தான் காலத்தைத் தாண்டி வாழும் தன்மையைப் பெறுகின்றன.
ஆனால் இது செவ்விலக்கியம் என்பதற்கான வரையறை மட்டுமே. தலைசிறந்த நாவல்களை எப்படி வாசிப்பது என்பதற்கான திட்டத்தை வெறும் வரையறை மட்டுமே தரமுடியாது. அப்படியென்றால் நல்ல நாவல்களை வாசிக்கும் திறமையான வாசகர்களாக நாம் நம்மையே எப்படி மாற்றிக் கொள்வது?
தலைசிறந்த சிற்பங்கள் உடைய புகழ்ப்பெற்ற கோவிலை நாம் அணுகப் பயன்படுத்தும் அணுகுமுறையைத்தான் நாம் நல்ல நாவலகளை வாசிக்கவும் பயன்படுத்த வேண்டும். மேலே ஸ்மித் சொன்னதில் “மீண்டும் மீண்டும் கவனமான வாசிப்பு’ என்ற சொற்களில்தான் இதற்குரிய ரகசியம் அடங்கி இருக்கிறது.
முதலில் தலைசிறந்த நாவலை முன்முடிவுகளின்றி அணுக வேண்டும். திருவரங்கக் கோவிலை ‘இது பெருமாள் கோயில்தானே. நம்ம ஊர் பெருமாள் கோவில் மாதிரிதான் இதுவும்’ என்று அணுகுபவன் மிகப் பெரிய இழப்புக்குத் தயாராகிறான்.
அடுத்தது, உண்மையில் சிறந்த ஒரு நாவலைப் (வெறும் பொழுதுபோக்குக்காக அன்றி, அதன் உண்மையான பயனை அறிந்து கொள்ள) படிக்க விரும்புபவர்கள் அதை இரண்டிலிருந்து நான்கு முறையாவது படிக்க நேரத்தை ஒதுக்க வேண்டும். நபோகோவ் சொல்வது போல ஒரு நாவலை முதல் முறை படிக்கும்போது நம் கண்கள் வரி வரியாய் நகர்வதிலேயே நாம் சோர்வடைந்து விடுகிறோம். இந்த முதல் வாசிப்பில் நம்மால் செய்ய முடிவதெல்லாம் முதன்முறையாக ஒரு கோவிலுக்குப் போகும்போது எப்படி கருவறையைத் தேடிப் போய் சுவாமியை மட்டும் பார்ப்பதைக் குறிக்கோளாய் வைத்திருப்போமோ அது போலவே முதல் வாசிப்பில் கதையின் மைய ஓட்டத்தைக் கண்டு கொள்வதுதான்.
அடுத்த வாசிப்பில், கோவிலின் விமானங்கள், பிரதான மண்டபங்கள், முக்கியத் தூண்களைக் கண்டு கொள்வதுபோல் கதையின் முக்கிய சம்பவ திருப்புமுனைகளையும், தத்துவச் சிக்கல்களையும் அவற்றை முன்னெடுத்துச் செல்லும் உரையாடல்களையும் கண்டு கொள்ள வேண்டும்.
மூன்றாவது நான்காவது வாசிப்பில் நாம் கண்டு கொண்ட முக்கிய தூண்களில், மண்டபங்களில், கோபுரங்களில் உள்ள முக்கியமான விவரங்களை – அதாவது வருணனைகளை, கதாபாத்திர வார்ப்புகளைக் கண்டு கொள்வது அவசியம். அவை எப்படிக் கதையின் மைய ஓட்டத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன என்றும், எப்படி முக்கியச் சம்பவ சிக்கல்களையும் தத்துவ விசாரணைகளையும் முன்னெடுத்துச் செல்ல உறுதுணையாக இருக்கின்றன என்று ஆராய்வது வாசிப்பின் நாவல் வாசிப்பின் மிக முக்கிய அம்சமாக அமைகிறது.
இந்த வாசிப்புப் படிகளையெல்லாம் ஒவ்வொன்றாகத்தான் கடக்க வேண்டுமா என்றால், இல்லைதான். ஒரு முறை வாசிக்கும் போதே இந்த நான்கு அவதானிப்புக்களையும் எந்த வாசகன் வேண்டுமென்றாலும் ஒரே நேரத்தில் செய்யலாம். ஆனால் நாவல் வாசிப்பைப் பயிற்சியாய் மேற்கொள்ள விரும்பும் என்னைப் போன்றவர்கள் ஏதேனும் சில நல்ல நாவல்களை இப்படி பல முறை வாசித்துப் பழகிக் கொள்வது உதவியாய் இருக்கலாம். பின்னாளில் நாவல்களை வாசிப்பதில் தேர்ச்சியடைய இது உதவும்.
கடைசியாக ஒரு விஷயமும் பாக்கி இருக்கிறது. நல்ல நாவல்களைப் படிக்க முனைபவர்கள் நிச்சயம் அவற்றைப் படித்த பிறகு மேற்குறிப்பிட்ட கூறுகளைப் பற்றிய ஒரு முழு உரையாடலை அந்த நூலைப் படித்த மற்ற வாசகர்களோடு முன்னெடுப்பதும் அவசியம். ஒரு நாவலைக் குறித்த நல்ல உரையாடல்தான் செவ்விலக்கிய நாவல் வாசிப்பு அனுபவத்தை முழுமையாக்கும்.
இப்போதிருக்கும் பல இலக்கிய வட்டங்கள் நாவல் குறித்த இத்தகைய உரையாடல்களுக்குத் தயாராய் இல்லை. நேர வசதி, வரும் (சொற்ப) வாசகர்களைத் திருப்தி படுத்துவது என்ற கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இலக்கிய வட்டங்கள் பெரும்பாலும் சிறுகதைகளையும் கவிதைகளையும் விவாதத்திற்குத் தேர்ந்தெடுக்கின்றன. அப்படி விவாதத்துக்கு வரும் பல பேரும் பரிந்துரை செய்யப்படும் சிறுகதைகளையே வாசிக்காமல் வருவதால் பல நேரங்களில் பேசப் பணிக்கப்பட்டவர்களின் வாய்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்.
இத்தகைய அக்கறையின்மை எந்த மொழியிலுள்ள இலக்கியச் சூழலையும் வீரியமிழக்கச் செய்துவிடும்.
நல்ல நாவல்களை முழுமையாக வாசிக்காத வரையில் வாசகர்கள் முழுமையான தீவிர இலக்கிய வாசிப்புக்கு லாயக்கில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
வேறொரு எதிர்வினையும் உண்டு. ஒரு நாளில் கிடைக்கும் சொற்பமான ஓய்வு நேரத்தில் குட்டிக் கதைகளையே எனக்கு வாசிக்க நேரமில்லை. இதில் நாவல்களுக்கு மூன்று நான்கு வாசிப்பதெல்லாம் தேவைதானா அல்லது சாத்தியம்தானா என்று. உண்மையில், இது அவரவர் வசதியைப் பொறுத்தது. தீவிர இலக்கியம் படைக்கப்படும்வரை அதை அணுக சில மனப்பயிற்சிகளும் நேரத்தை ஒதுக்குவதும் தேவைப்படத்தான் செய்யும். அதற்குத் தயாராக இல்லாதவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அப்படித் தீவிர வாசகனாய்த்தான் வாழ்ந்து சாக வேண்டும் என்பது யாருக்கும் கட்டாயமில்லைதான்.
அல்லது அவர்கள் மனதுக்கும் புத்திக்கும் நோவு கொடுக்காத ஜனரஞ்சகமான படைப்புகளோடு நின்று கொள்ளலாம்.
ஆனால் தீவிர வாசிப்பை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் வாசகர்களுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் குஸ்தாவ் பிளாபெர்ட் சொன்னது லட்சிய வாசகமாக அமையக் கூடும் “comme l’on serait savant si l’on connaissait bien seulement cinq ou six livres”
ஒரு அரை டஜன் நூல்களை மிக ஆழமாக ஊன்றி வாசித்தாலே ஒருத்தன் எவ்வளவு பெரிய அறிஞனாகி விடுவான்.
இதை வாசகர்களும் இலக்கிய வட்டங்களும் உணரும்வரை எந்தப் பேச்சும் வெறும் அரட்டையாகத்தான் இருக்கும்.
தொடக்கமே அடீடகாசமாக இருக்கிறது.வளர்க.
LikeLike
மிக்க நன்றி. உங்கள் ஆலோசனைதான் இந்த வலைப்பக்கம் உருவாகக் காரணம்!
LikeLike
சிறப்பான துவக்கம். சில தெளிவுகளை எனக்கு தந்துள்ளது இந்தப் பதிவு. வாழ்த்துக்கள்…
LikeLike
கோவில்
முழுதும் கண்டேன்
சுற்றித் தேரேடும் வீதி கண்டேன்
தேவாதி தேவனையும் கண்டேன்
LikeLike
வலைப்பக்கம் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
LikeLiked by 1 person
நன்றி சார்!
LikeLike
சிறப்பு சார்…
ஆர்வத்தை அதிகரிக்க வைக்கிறீர்கள்..
LikeLike