நல்ல வாசிப்பு என்பது என்ன? – விளாடிமிர் நபோகோவ்

இலக்கியத்தைப் பற்றிய தனது விரிவுரைகளின் தொகுப்பொன்றில் விளாடிமிர் நபோகோவ் செவ்விலக்கியங்களின் தரமான வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார்.

செவ்விலக்கியங்களை வாசிக்கத் தொடங்குபவர்கள் செய்ய வேண்டிய தலையாயக் காரியம்: அந்தந்த நாவலுக்குள் எழுத்தாளன் கவனமாய் அமைத்திருக்கும் மிக நுணுக்கமான விவரங்களை மிகக் கவனமாகப் படித்து அவற்றை ஆராய்வதுதான். ஒரு செவ்விலக்கிய நாவலில் உள்ள விவரங்களின் வாசிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால் காதலன் தன் காதலியின் உடலையோ, காதலி தன் காதலனின் உடலையோ வருடிக் கொடுத்துச் சுகிப்பதுபோல் இருக்க வேண்டும் என்பது நபோகோவ்வின் கூற்று.

அதாவது வாசிப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றால் நல்ல நூல்களை நாம் எந்த விதமான முன்முடிவுகளும் இன்றி வாசிக்க வேண்டும். ஏனென்றால் டால்ஸ்டாய், டஸ்டவ்யஸ்கி, ஜாய்ஸ், மான் போன்ற மிகச் சிறந்த நாவலாசிரியர்கள் நம்மெல்லோருக்கும் தெரிந்த ’சாதாரணமான’ வரலாற்று, கால, சமூக் கூறுகளைக் கொண்டே முற்றிலும் புதிய உலகங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அடிப்படையில் எல்லா தலைசிறந்த நாவலும் மாயாஜாலத்தில் உருவான ஒரு தேவதைக் கதைதான் என்பது நபோகோவ்வின் கருத்து. புனைவின் சாத்தியமே இல்லாத யதார்த்த உலகத்தில் எழுதுவதே வீண் வேலை.

இவர்கள் படைத்துக் காட்டும் புதிய உலகம் நாம் அறிந்த வேறெந்த உலகத்தோடும் தொடர்புடையது இல்லாமல் இருக்கிறது. நாம் படிக்கும் ஒரு செவ்விலக்கியத்தை மற்ற செவ்விலக்கியத்தை மற்ற இலக்கியக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது பின்னால் வரலாம். ஆனால் நேர்மையான திறமையான வாசகன் ஒரு நூலை அணுகும்போது வேறெந்த எதிர்ப்பார்ப்புக்களும் இல்லாமல்தான் அணுகுவான். அந்த நாவல் கொண்டு தரும் விஷயங்களை அந்த நாவல் அமைத்துத் தரும் தளத்தில் நின்றே ஆராய்வான். அப்போதுதான் அந்த நாவல் அவனுக்கு முழுவதுமாய்ப் புரியும். ஒரு நல்ல நாவலையோ செவ்விலக்கியத்தையோ முன்முடிவுகளோடு, ‘இது இன்ன மாதிரி கதை, இதைதான் சொல்ல வருகிறது’ என்ற பார்வையோடு அணுகுவது வாசிக்க ஆரம்பிக்கும் முன்னாலேயே வாசகனை அந்த நாவலிலிருந்து வெகு தூரத்துக்குக் கொண்டு போய் விட்டுவிடும் என்று நபோகோவ் சொல்கிறார்.

உண்மையில் விவரங்களை அனுபவித்து வாசிப்பதும் முன்முடிவுகளின்றி வாசிப்பதும் கடுமையான மனப்பயிற்சிதான். பல நல்லெண்ணம் கொண்ட ‘தீவிர’ வாசகர்கள் இந்த மனப்பயிற்சி இல்லாதவர்கள். அவர்கள் டால்ஸ்டாயின் போரும் அமைதியையோ, தஸ்தவியஸ்கியின் கரமசோவ் சகோதரர்களையோ, தாமஸ் மானின் மேஜிக் மவுண்டனையோ, ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தையோ ‘இன்னின்ன வகையான கதை’ என்ற முன்முடிவோடு அணுகுகிறார்கள். பிறகு ஒரு குறிப்பிட்ட பக்கங்களைப் படித்த பிறகு மூச்சுத் திணறி விழி பிதுங்கி மூடி வைத்துவிட்டு வெறும் அரட்டையிலும் இலக்கிய கூச்சல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இதில் சில வாசகர்கள் ஒரு நாவலை அணுகும்போது அதில் வந்திருக்கும் வரலாற்றுச் சம்பவ விவரங்களோ, சமூக விஷயமான வருணனையோ சரியாக இருக்கிறதா என்று கணக்குப்பிள்ளைகளாக மாறி சரிபார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று நபோகோவ் சொல்கிறார். சில்லறை எழுத்தாளர்கள்தான் நாவலில் வரும் கதாபாத்திரத்தின் பட்டுச்சேலையின் கலரையும், வீட்டு வரவேற்புக் கூடத்தின் நீள அகலத்தையும் அதிலுள்ள பொருட்களைப் பற்றியும் நீட்டி முழக்குவார்கள் என்று சொல்கிறார்.

இத்தகைய சில்லறை வருணனைகள் அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பிரதிபலிப்பதால் சில்லறை வாசகர்கள் இத்தகைய வருணனைகள் உள்ள கதைகளை விரும்பி வாசிக்கிறார்கள்.

ஆனால் தலை சிறந்த நாவலாசிரியர்கள் அப்படியல்ல. சரித்திரத்தின், மனித இனத்தின், தத்துவங்களின் மிகப் பெரிய ஓட்டத்தைக் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். அப்படிக் காட்டுவதற்காக யதார்த்த உலகத்தில் உள்ள மனிதர்களையும் பொருட்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எழுதும் நாவல்களில் வரும் துல்லியமான வெகு நுணுக்கமான விவரிப்புக்களும் விவரங்களும்கூட இந்த மாபெரும் குறிக்கோளோடு சேர்க்கப்பட்டவையாகத்தான் இருக்கும். இந்த விவரங்களை அவற்றின் அர்த்தத்துக்காக ஆராய்வதை விட்டுவிட்டு யதார்த்தத்தோடு பொருந்தி வருகிறதா என்று கணக்குப் போட்டுக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.

இதற்கெல்லாம் மிகுந்த வாசிப்புப்பயிற்சியும் மனப்பயிற்சியும் அவசியம். தலைசிறந்த நாவல்களை முன்முடிவுகளோடும், தன் கருத்துக்கு ஆதரவு தேடியும், விவரங்களைச் சரிப்பார்க்கவும் அணுகுபவர்கள் சில்லறை வாசகர்களே (நபோகோவ்வின் கணக்குப்படி). அப்படிப்பட்ட வாசகர்கள் நல்ல எழுத்தாளர்களுக்கு அநீதி இழைக்கிறார்கள். இத்தகைய இலக்கிய வாசகர்களால் இலக்கியத்துக்கு எவ்வித பயனும் இல்லை.

மேற்கோள்: Vladimir Nabokov, Good Readers and Good Writers

One thought on “நல்ல வாசிப்பு என்பது என்ன? – விளாடிமிர் நபோகோவ்

 1. தீவிர வாசிப்பு என்றால் என்ன
  என்பதற்கு வித்தியாசம் இப்போதான் ஓரளவு புலப்படுகிறது
  குற்றமும் தண்டனையும் முதல் முறை வாசித்த போது கதை தேடி தொலைந்து விட்டேன்

  ஆனால் வாசிப்பு இன்பம் காரணமாக க.நா.சு. வின் 8 நாவல்களை பத்துக்கும் மேற்பட்ட முறை வாசித்து போது i felt like he has built an universe all of them are totally interconnected….

  இக்கட்டுரை க.நா.சு வின் இந்திய இலக்கியம் குறித்து அவர் எழுதிய கட்டுரையை ஞாபகப்படுத்தியது..

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s