ஜெயமோகனின் வலைதளத்தில் சிங்கப்பூர் இலக்கியத்தைக் குறித்து வேறொரு கடிதம் பதிவேற்றப்பட்டுள்ளது. நித்தம் நித்தம் புத்தம் புதிய ஆச்சரியங்களைத் தருவது ஜெயமோகனின் வலைதளம். இந்தக் கடிதத்தத்தின் ஆசிரியர் “எம்” தன்னுடைய பெயரைக் கொடுக்க மறுத்துள்ளார். அவர் ‘போலீஸ்புகாருக்குப் பயப்படும் சாமானியச் சிங்கப்பூர்க்காரராம்’. அதனால்தான் ஜெயமோகனே அந்தக் கடிதத்துக்கு ‘பெயரிலி’ என்ற தலைப்புக் கொடுத்திருக்கிறார் போலும்.
(https://m.jeyamohan.in/125310#.XV3jwVNX4wA)
கடிதம் எழுதியவர் முதலில் சிங்கப்பூரில் தமிழில் எழுதுபவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். ஒரு சாரார், கல்வியறிவு குறைவான இலக்கிய அறிவு இல்லவே இல்லாத சிங்கப்பூர்க்காரர்கள். இரண்டாமவர்கள், தமிழ்நாட்டிலிருந்து வந்து சேர்ந்தவர்கள். இவர்கள் உயர்ந்த கல்வியறிவு கொண்டவர்கள். ஆனால் இலக்கியத்தில் தமிழக எழுத்தாளர்களோடு போட்டி போட முடியாதவர்கள்.
அவர் கடிதத்திலிருந்து குறிப்பிட்ட பகுதிகளைக் கீழே தந்துள்ளேன்.
(1) “இங்கே உள்ளவர்கள் இரண்டுவகை. ஒன்று, தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கே குடியுரிமை பெற்று எழுதுபவர்கள். இன்னொரு சாரார் இங்கேயே பிறந்து வளர்பவர்கள். இங்கேயே பிறந்து வளர்பவர்களுக்கு பண்பாட்டுச்சிக்கல் மிகுதி. பெரும்பாலும் சிறந்த கல்வியறிவு இருக்காது. இலக்கியவாசிப்பு அறவே இருக்காது – எந்த மொழியிலும்”.
(2) “இங்கே வந்துசேர்ந்து எழுதுபவர்கள் இன்னொரு சாரார். அவர்களுக்கு உயர்ந்த கல்வியறிவு இருக்கும். ஆனால் அவர்கள் பள்ளி கல்லூரிகளில் இலக்கிய அறிமுகம் பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள். டியூஷன் வைத்து மனப்பாடம் செய்த தலைமுறை. இங்கே வந்தபின் இங்குள்ள அரசு இலக்கியத்திற்கு நிறையச் செய்வதைக் கண்டு எழுதுபவர்கள். ஆகவே பெரிய அளவில் இலக்கிய அறிமுகம் இருக்காது. இந்தியாவிலிருந்து வரும் இதழ்களில் இவர்களால் அங்குள்ளவர்களுடன் போட்டியிட்டு எழுதி நிறுவிக்கொள்ள முடியாது. ஆகவே இங்குள்ள சின்ன வட்டத்திற்குள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத்தாழ்வுணர்ச்சி காரணமாக இங்கே வரும் தமிழ் எழுத்தாளர்கள் தங்களைப் புகழவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எந்த வகையான விமர்சனத்தையும் கண்டு அஞ்சுகிறார்கள். ஒரு பட்டியலிட்டாலே பதறிவிடுகிறார்கள். நான் இங்கே வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை இங்கே சொல்லும்படி இலக்கியம் வாசித்தவர்கள் என ஒரு ஐந்தாறுபேரைத்தான் சொல்வேன். இதனால் உண்மையிலேயே இலக்கிய அளவுகோல் என்றால் என்ன என்று இவர்களுக்குத் தெரியாது.”
அதே போல இங்கு வந்து பேசும் தமிழக எழுத்தாளர்களை இரண்டு வகையாகப் பிரிக்கிறார். பணத்துக்காகவும் சோற்றுக்காகவும் இங்கு வந்து வாய்க்கு வந்தபடி புகழ்ந்துவிட்டுச் செல்பவர்கள். “சா.கந்தசாமி முதல் மாலன் வரை இந்தக்கோஷ்டி” யாம்.
இரண்டாவது வகை – நேர்கொண்ட பார்வையும், வழுவாத நீதியும் (அப்பா முடியல) கொண்ட இலக்கியவாதிகள். சுந்தர ராமசாமி, ஜெயமோகன், சுனீல் கிருஷ்ணன் இப்படி.
மிச்ச கடிதத்தில் இந்தப் பெயரில்லாதவர் சொல்லும் விஷயங்கள் இதுதான்:
(அ) நேர்மையான தமிழக இலக்கியவாதிகளின் வருகையும் விமர்சனமும் சிங்கப்பூர்த் தமிழ் “இலக்கியவாதி”களின் மோசமான எழுத்தை இனம் காட்டி அவர்களை மேம்படுத்துகிறது. இதை உணராத நன்றி கெட்டவர்களான சிங்கப்பூர் எழுத்தாளராகப்பட்டவர்கள் பதறுகிறார்கள். குறிப்பாக சித்துராஜ்.
(ஆ) சித்துராஜ் நேர்மையான இலக்கியவாதிகளை இங்கு அழைக்கக்கூடாது என்று கூச்சல் போடுகிறார்.
(இ) சிங்கப்பூரில் வறுமை இல்லாததால் இங்கு சோக இலக்கியம் என்று சொல்லி சிங்கப்பூர் படைப்பாளிகள் தங்கள் மோசமான எழுத்துக்குக் காரணம் சொல்கிறார்கள்.
(ஈ) சிங்கப்பூரில் எழுதுபவர்கள் தங்கள் வேலைப்பளுவை முன்னிறுத்தி தாங்கள் சிறப்பாக எழுத முடியாததற்கு நொண்டிச் சாக்குச் சொல்கிறார்கள். உண்மையில் எழுத்து மாஸ்டர்கள் வேலைக்குப் போகாமல் முழு நேரமாக எழுதுவார்கள். ஆனாலும் கூட வேலைக்குப் போகும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் பலர் சிங்கப்பூர் எழுத்தாளர்களைவிட மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள்.
(உ) இலக்கிய சர்ச்சைக்கெல்லாம் சிங்கப்பூரில் உள்ள பயந்தாங்கொள்ளி எழுத்தாளர்கள் போலீஸில் புகார் கொடுப்பார்கள். உதாரணம் சூர்ய ரெத்னா.
(ஊ) இதையெல்லாம் சொன்னால் இவரைக் கும்மிவிடுவார்களாம்.
இவ்வளவுதான் கடிதம். தன் கருத்துக்குச் சார்பாக இவர் எடுத்து நீட்டும் தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன. சிங்கப்பூரில் எழுதக்கூடிய தமிழர்கள் பெரும்பாலோர் சிறந்த கல்வியறிவு இல்லாதவர்களா? இத்தகைய கருத்து கவனிக்கப்பட வேண்டியது என்பதால் அவர் துல்லியமான புள்ளி விவரத்தையும் அவர் கடிதத்தோடு சேர்த்துத் தந்திருக்கலாம். ஒரு சமூகத்தைப் பற்றிய பார்வையை முன்னிறுத்தும் இத்தகைய தகவல்களைத் தரும் உயர் கல்வி நிலையஙகளில் பயின்றவர்கள் அப்படித்தான் செய்திருப்பார்கள்.
நல்ல எழுத்தாளர்கள் சுமாரான எழுத்தாளர்கள் என்று பட்டியல் போடுவதைக் கண்டு சிங்கப்பூரில் உள்ளவர்கள் கூப்பாடு போடுவதாக இவர் சொல்கிறார்.
ஆனால் அதே சமயம் இங்கிருக்கும் எல்லோரையும் இங்கு வந்து போகும் எல்லோரையும் பொத்தாம் பொதுவாகப் பிரித்துக் கருத்து உரைக்கிறார். சிங்கப்பூர்த் தமிழர்கள் – இலக்கியத் தற்குறிகள். வெளியிலிருந்து வந்து இங்கு நிரந்தர வாசம் செய்பவர்கள் அறிவாளிகள் ஆனால் இலக்கிய தரம் இல்லாத தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள் என்று.
சிங்கப்பூரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் என்று அவர் குறிப்பிடும் கருத்துகளை எல்லோரும் சொல்கிறார்களா, சிலர் மட்டும்தானா அல்லது எல்லாம் தீவிர இலக்கிய வாசகரான “எம்” மின் அதீதக் கற்பனைதானா என்பதை முடிவு செய்யும் அளவுக்கு இவர் கடிதத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
நேர்மையான தமிழக இலக்கியவாதிகளை நான் சிங்கப்பூருக்கு அழைக்கவே கூடாது என்று சொன்னதாகச் சொல்கிறார். இந்த வாதத்தில் என் கருத்துக்கள் பொது வெளியிலேயே எழுதப்பட்டுள்ளன. நான் சொன்னேன் என்பதற்கு ஆதாரமாக அவர் ஒரு வரி எடுத்துக் காட்டலாம்.
எனக்குத் தெரிந்தவரை சூர்ய ரெத்னா இலக்கிய விமர்சனத்துக்காக அல்ல தனது புகைப்படத்தை அனுமதி இன்றி ஜெயமோகன் கையாண்டததற்காகத்தான் சூர்ய ரெத்னா போலீஸ் புகார் கொடுக்கப் போனதாக நினைக்கிறேன். ஒரு எழுத்தாளராக அல்ல, ஒரு பெண்ணாக இதைச் செய்ய அவருக்கு உரிமை உண்டு.
இது பொத்தாம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட நாட்டிலுள்ளவர்களை எந்த ஆதார அடிப்படைகளுமின்றி வகை பிரித்து, வசை பாடுவதையும் தனக்கு ‘வேண்டியவர்கள்’ என்று நினைப்பவர்களின் மனம் குளிர வைக்கும் மலிவான ஆசையையும் குறிக்கோள்களாகக் கொண்ட கடிதம்.
விஷமத்தனமும், அரை உண்மைகளும் நிறைந்தது. எந்த இலக்கிய மதிப்பும் இல்லாதது. ஒதுக்கி விடலாம்.
இந்தப் பெயரில்லாத கடிதத்தை ‘வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்ற உயர்ந்த மனநிலையில் இருந்த போது ஜெயமோகன் பதிவேற்றியிருக்கலாம்.
ஆனால் இத்தகைய அநாமதேய அரை வேக்காட்டுக் கடிதங்கள் அவர் வலைதளத்தில் வருவது உண்மையிலேயே வருந்தத் தக்கது.